ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்'


தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.
தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில், பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்றார். எழுத்தாளர்கள் கோணங்கி, முதுக்கிருஷ்ணன், செந்தி, லிபி ஆரண்யா, ஜனகப்பிரியா, ஓவியர் பாபு ஆகியோர் உரையாற்ற அர்ஷியா, சேதுராமலிங்கம், தளபதி, ஜெ.பிரபாகரன், அ.ஜெகநாதன், அன்புவேந்தன், பூமிச்செல்வம், ரத்தினகுமார், தமிழ்முதல்வன், சாம்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் க.பரந்தாமன் தொடக்கிவைத்தார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பூ.சந்திரபோசு, ம.தி.மு.க.வின் புதூர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கேசவன், மகளிர் ஆயத்தின் அருணா, மக்கள் சனநாயக் குடியரசுக் கட்சியின் செல்வி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மருத்துவர் சங்கீதா, வழக்குரைஞர்கள் அருணாசலம், வாஞ்சிநாதன், மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் உரையாற்ற,
புரட்சிக் கவிஞர் பேரவையின் ஐ.ஜெயராமன், அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் அம்பேத்பாபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியசாமி,தமிழ்ப்பித்தன், மருத்துவர் ஜெயக்குமார், தொ.ஆரோக்கியமேரி வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி, பாரதி, பொற்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் விரிவாகப் பேசியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன் நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர். பகவத்சிங் உரையாற்றி, பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

கூடங்குளம், பரமக்குடி, முல்லை பெரியாறு போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!


17-12-2011கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கவிதா என்கிற பெண் படுகொலையில் காவல்துறையின் மெத்தனத்தைக்   கண்டித்து மாவட்டச் செயலாளர் சி.எம்.பால்ராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம்.தோழர் துளசியும் நானும் கண்டன உரையாற்றினோம்.
 ‎
18-12-2011 கூடங்குளம் பத்திரகாளியம்மன் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் இராதாபுரம் நோக்கி " அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர்கள் துளசி, இராஜ், இராஜா செந்தில் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.

19-12-2011 நெல்லை பாளையங்கோட்டை, ஜவஹர் திடலில் எஸ்.சி,எஸ்.டி, மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி " பரமக்குடி துப்பாக்கிச் சூடு நூறாவது நாள் கண்டன ஆர்ப்பாட்டம், தலைவர் அம்பேத்கர் தலைமையில், செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் பழனி அவர்கள் தொடங்கி வைக்க நானும் கண்டன உரையாற்றினேன். தோழர்கள் ராஜமாணிக்கம், நரசிங்கநல்லூர் மாரியப்பன், பேட்டை மாரியப்பன், நம்பி,சவரி, ஆறுமுகம், முத்துகுமார், ஆகியோர் என்னுடன் கலந்து கொண்டனர்.

20-12-2011 முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம், கேரளா இனவெறி அரசியல் கட்சிகளைக் கண்டித்து தேனி வீரபாண்டியில் சபாபதி அவர்கள் தலைமையில் ஊர் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் என்னுடன் சண்முகப்பாண்டி,அய்யன்காளை, கூடலூரில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பில் ஐந்தாவது நாள் தொடர் போராட்டத்தில் பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பில், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் மோகன் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினேன். என்னுடன் வீரபாண்டி சிவகுமார் கலந்து கொண்டார்.

திங்கள், 5 டிசம்பர், 2011

டிச-3,பரமக்குடி பொது விசாரனை அறிக்கை வெளியீடு


"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு"விபத்தைப் போல கடந்து போகும் தமிழர் மனோநிலையை மூன்று மாதம் கழித்து உலுக்க எடுத்த முயற்சி. ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனோநிலை உருவாக்கிய மௌனத்தைக்     கலைக்க பாதிக்கப்பட்ட பரமக்குடி ஒடுக்கப்பட்ட பகுதி மக்களுடன் இணைந்து தியாகி இமானுவேல் பேரவை உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் இணைந்த "பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" வின் தொடர் முயற்சி........

இன்று பரமக்குடியில்... நாளை கூடங்குளத்தில்....?

"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" சார்பில் தமிழக அரசின் சம்பத் குழு விசாரனையைப் புறக்கணித்து, முன்னாள் நீதியரசர் மும்பை சுரேஷ் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு வழிவிட வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மறைந்த தோழர் ஸ்டாலினுக்கு செவ்வணக்கம்!

2-10-2011 அன்று தொடக்க நேரம் 2 மணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் நம்மை விட்டுப் பிரிந்தார். தாழ் இரத்த அழுத்தம் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. கட்சியின் கட்டுப்பட்டுக்குழுத் தலைவர் தோழர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மத்தியக் குழு, மாநிலக் குழுத் தோழர்கள் மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர்.  3-10-2011 காலை தோழரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  தோழர் ஸ்டாலின் அடக்கம் நடந்த இடத்தில் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன்  தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் தமிழரசன், பொதுச் செயலாளர் ஜெ.சிதம்பரநாதன்,  மத்தியக்குழு உறுப்பினர் சுகுந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி,  அருணாசலம், ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வேல்முருகன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
      மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் ராமச்சந்திரன், ஹரி,இ.க.க(மா-லெ)விடுதலை மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ்,  சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இராமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகன்ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரபு, தமிழ்ப் புலிகள் நிர்வாகி தாஸ், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என். குணசேகரன், தங்க.தமிழ்வேலன், நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வீரபாண்டி, டி.டி.யூ.சி. மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் இராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சங்கரன், போஸ்,  தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக மாநிலத் துணைத் தலைவர் சிற்பிமகன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சவரிராஜன், உப்பள சங்க துணைத் தலைவர் முத்து, மீன்பிடி-சங்குகுளி சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன், இராசாக்குட்டி, பிரபாகரன், வெள்ளைச்சாமி, சுரேஷ் மற்றும் பல்வேறு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் சென்னையிலிருந்து இரங்கல் தெரிவித்திருந்தார். தோழர் ஸ்டாலின்   குடும்பத்தினருக்கு கட்சி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!


செப் 11,201 தொடங்கி கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம், இடிந்தகரையில் 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியதும் தினசரி ஆயிரக்கணக்கான மீனவர்கள் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோர மீனவக் கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். மீனவர்கள் மட்டுமல்லாமல் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். இடிந்தகரைக்கும், வழியாகவும் செல்லக்கூடிய பேருந்துகளை தமிழக அரசு நிறுத்திவிட்டதையும் தாண்டி மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று, ஆதரித்து வந்தனர். --
உண்ணாவிரத 7 ஆவது நாளான செப் 17,2011 அன்று அனைததுத் தமிழகப் பெண்கள் கழக நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் துளசி, தமிழக இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜான்சன் மற்றும் தோழர்களுடன் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் இடிந்த கரைக்குச் சென்று ஆதரித்து உரையாற்றினார். தனது உரையில் "இராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது ரஷ்யாவுடனான 1988 ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. 1989 ல் தூத்துக்குடி கூடங்குளம் நாகர்கோவில் நெல்லை சைக்கிள் பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டதும், கூடங்குளத்தில் தான் தாக்கப்பட்டதையும் பதிவு செய்தார். 2002ல் நாகர்கோவில் பேரணியில் நடநத துப்பாக்கிச் சூடு, மீண்டும் போராட்டம் ஓய்ந்து போகாமல் 2007ல் மறுபடியும், தற்போது ஓயாத அலைகளாக இடிந்தகரையில் நடைபெறும் போராட்டம் டில்லி வரை இடிக்கட்டும்" என வாழ்த்திப் பேசியதுடன், செப் 15 மதுரையில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்ட முடிவின்படி ‘‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்’’ என உரையாற்றினார்.
அடுத்துப் பேச வந்தார் தி.மு.க வின் இராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு. அவரைத் திரும்பிப் போக வலியுறுத்தி எதிர்ப்புக் கிளம்பியது. பேச விடாமல் மக்க்ள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கடுமையாக இருந்தது. பலத்த எதிர்ப்புக்கிடையிலேதான் அவர் பேசினார். போராட்டக் குழு சார்பில் அறிவிப்பாளர் அவரை உடனே போகவிடாமல் நிறுத்தி தி.மு.க தலைமைக்கு இரண்டு நிபந்தனைகளை அறிவித்தார். 1. தி.மு.க தலைமை அணு உலை மூட அறிக்கை வெளியிட வேண்டும். 2. மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தி-.மு.க தலைவர் மு.கருணாநிதி அணு உலை சம்பந்தமான நிலைப்பாட்டைக் கூறாமல், " மக்களுக்கு விரோதமாக எப்போதும் தி.மு.க நடந்து கொள்ளாது " எனக் கூறித் தப்பித்துள்ளார். 1988 க்குப் பிறகு இருமுறை ஆட்சியிலிருந்தும், 2007 மீண்டும் கூடங்குளம் ஒப்பந்த எதிர்ப்பை முறியடிக்க நெல்லை ஆட்சியாளர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டங்கள் எனும் பெயரில் சதி செய்தவர் மு.க.
செப் 16 அன்று முதலமைச்சர் ஜெ. வெளியிட்ட அறிக்கை 17 ம் தேதி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. ‘‘ 1000 மொகவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் இயங்கினால் தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். . . நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத இரண்டாம் நிலை மண்டலத்தில் இந்த அணு மின் நிலையம் உள்ளது. . . . கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சுனாமி போன்ற
இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அணு மின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்’’ என முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகள் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டார்.
செப் 19 அன்று வழக்கம் போல் தலை கீழாக முடிவெடுத்து ஒரு அறிக்கை வந்தது. தென் மாவட்ட மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளை எளிமைப் படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசியலாக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். " மத்திய அரசு கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முயற்சி செய்ய வில்லை. அனைத்துக் கட்சிக் குழுவை டில்லிக்கு அனுப்புவோம், மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அணு உலை இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் " என்று கோரினார். ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்? மத்திய அரசு நிறுவனம். மாநில அரசால் முடிவெடுக்க முடியாது, மத்திய அரசு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறுபவர். செப் 16 அன்று ஏன் அப்படி அறிக்கை விட்டார். இவர்களுக்கு எல்லாமே ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல். மாநில அரசு, மத்திய அரசு பிரச்சனைகள். ஆனால் போராடும் மக்களுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமைப் பிரச்சனை. மொத்தத் தேவையில் 3 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கான இடமே அணு உலைக் கூடங்கள். இவர்களின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின், மீனவர்களின் வாழ்வுரிமைக்காகத் தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் பரவலாகப் படித்தவர்கள், அறிவார்ந்த சனநாயகச் சிந்தனையாளர்கள், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான சிந்தனையாளர்கள் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஏகாதிபத்திய எடுபிடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முன்னெடுப்போம்!

செப் -11 பரமக்குடி,மதுரை, இளையாங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக அணிதிரள்வோம்! - மீ.த. பாண்டியன்

    சாதீ -- வெண்மணிப் படுகொலைகளுக்கு முன்பிருந்து இரத்த வெறியுடன் தனது கோரமான ஆதிக்க வெறியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 1957,செப்-11 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் படுகொலையின் அதிர்வுகள் முதுகுளத்தூர் கலவரம் என அறியப்பட்டு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனின் 50 ஆம் ஆண்டு படுகொலை நாளைத் தொடர்ந்து தேவேந்திர சமூகத்தினர் மத்தியில் எழுச்சி உருவாகியுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் எனத் திட்டமிட்ட படுகொலை வீரம்பல் வின்சென்ட் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் செப்-10அன்று இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டலமாணிக்கம், பள்ளபச்சேரியைச் சேர்ந்த 11ஆவது படிக்கும் 16 வயது மாணவன் பழனிக்குமார் ஈவிரக்கமின்றி சாதி வெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். சாதிய வன்மமும், ஆதிக்க வெறியும் தாழ்த்தப்பட்ட இளம் மாணவனின் உயிரைப் பலிவாங்கியுள்ளது. இது தொடரலாமா?
 செப்-11, பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடம் நோக்கி ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்த பல்வேறு இயக்கங்கள், தேவேந்திர குல சமூக மக்கள் அலை அலையாக வருவது அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்த சங்கதி. தியாகி இமானுவேல் சேகரன் 54 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி செப் - 11 அன்று பரமக்குடி நோக்கித் தாழ்த்தப்பட்ட மக்கள் கூட்டம், கூட்டமாக அஞ்சலி செலுத்தி வந்தனர். செப் - 9, அன்று  நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்ட பழனிக்குமார் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு, பரமக்குடி செல்லலாம் என நெல்லையிலிருந்து கிளம்பிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்ல நாட்டில் தடுத்துக் காவல்துறை கைது செய்தது. அவர் போனால் பிரச்சனை பெரிதாகி விடுமாம்! கைது செய்தால் எதிர்ப்பு உருவாகாதா?  ஜான்பாண்டியன் கைதுச் செய்தி பரமக்குடிக்குப் பரவியவுடன், பரமக்குடி ஐந்துமுக்கு சந்திப்பில் மறியல் தொடங்கியது. நடக்காதா? அரசும், காவல்துறையும் இதை எதிர்பார்த்துத்தானே ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்தது. மறியலில் கூட்டம் சேரக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் தங்களது குரூரத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறைத் தாக்குதலிலும் 6 பேர் இறந்துள்ளனர். தலையில் குண்டுக் காயத்துடன் ஒருவர் மதுரை மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டுள்ளார். மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இளையாங்குடி மருத்துவமனைகளில் கடுமையான காயங்களுடன் சிலநூறு பேர் சேர்க்கப்பட்டனர். மதியம் அஞ்சலிக்கு வருவதாக இருந்த புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட பல்வேறு தலைவர்களின் தலைமையில் வந்தவர்கள் வழியிலேயே தடுக்கப்பட்டுள்ளனர். இதைச் செய்வதுதான் அரசின் நோக்கம் போல. வருகிற வழியில் வண்டிகளில் வந்தவர்கள் திருப்பி விடப்பட்டுள்ளனர்.
 மதுரை, சிந்தாமணி அருகில் வேனில் வந்த பாட்டம் கிராமத்தினரை பரமக்குடி செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, பிரச்சனைகளை உருவாக்கித் தற்காப்பு எனும் பெயரில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் தானும் தாக்கப்பட்டதாக தனியார் மருத்துவமனையில்  படுத்து நாடகமாடியுள்ளார். சோழவந்தான் பகுதியிலிருந்து பரமக்குடி சென்ற மண்ணாடிமங்கலம் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட இரண்டு பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது காளியம்மாள் எனும் பெண் போலீஸ் புகாரின் பேரில் பெண்களை மானபங்கப்படுத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, கொலை முயற்சி, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இதே போன்ற பொய் வழக்குகளைத்தான் தி.மு.க அரசின் காவல்துறை தாமிரபரணிப் படுகொலைச் சம்பவத்திலும் புனைந்தது. தி.மு.க ஆட்சி, அ.தி.மு.க ஆட்சிகளில் காவல்துறையின் செயல்பாட்டில் பெரிய வித்தியாசமில்லை.
 இளையாங்குடியிலும் பரமக்குடித் துப்பாக்கிச் சூட்டைக் கேள்விப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்ன என்ன சும்மாவா இருப்பார்கள்-? மறியல் செய்த மக்களைக் கலைக்க எனும் பேரில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் +2 படிக்கும் மாணவர் ஒருவருக்கு குண்டு பாய்ந்தது. பலர் காயமுற்றனர்.
 ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டால் எதிர்ப்புக் கிளம்பும் என தமிழக அரசுக்கு, காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெரியாதா? தெரிந்தே செய்துள்ளனர். என்ன அரசியல் உள்நோக்கம்? ஜான்பாண்டியன் கைது செய்யப்படுவது காவல்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? அவரின் ஒப்புதல் இல்லாமலா கைதும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்தது? கலைந்து போக எச்சரிக்கையோ, கண்ணீர்ப் புகையோ, தடியடியோ எதுவுமில்லாமல்  திடீரென்று  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயல். யாரைத் திருப்தி செய்வதற்காக இந்தக் குரூரமான கேடு கெட்ட செயலைத் தமிழக அரசின் காவல்துறை நடத்தியது? அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் திட்டமிட்டு பரமக்குடிக்கு அனுப்பப்பட்டது ஏன்? பின்னணி என்ன? துப்பாக்கிச் சூடும், விரட்டி, விரட்டித் தடியடியும் நடத்தி அச்சுறுத்திய தமிழக அரசின் காவல்துறை 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் பல பகுதிகளில் தனது தேடுதல் வேட்டை மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது.  வழக்கில் சேர்க்காமல் இருக்க காவல்துறையின் வசூல் வேட்டை நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படாமல், மதுரையிலேயே தனியார் மருத்துவமனைகள் நோக்கி துப்பாக்கிச் சூட்டில், தடியடியில் பலத்த காயம்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  
 தமிழக சட்டமன்றத்தில் அனைவருக்கும் பொதுவாக விளங்க வேண்டிய ஒரு முதலமைச்சர்” பள்ளபச்சேரியில் முத்துராமலிங்கத் தேவரை அவமதித்து எழுதப்பட்டதுதான் இளைஞன் பழனிக்குமார் படுகொலைக்குக் காரணம் எனவே இது இனக் கலவரம் “ எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளது சாதி மோதலைத் துண்டுவதாக உள்ளது. காவல்துறையின் அத்து மீறிய துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த இனக் கலவரமென்று சித்தரித்தது “ ஜெயலலிதாவின் பார்ப்பன மேல் சாதி வெறிக் குணத்தைக் காட்டுகிறது. மதுரை மாவட்டம், உசிலைம்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ” சிங்கங்கள் உலாவும் இடத்தில் சி-றுத்தைக்கு என்ன வேலை “ எனப் பேசியதற்கும், ஜெயலலிதாவின் சட்டமன்ற விளக்க உரைக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆறு பேரைத் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்த, சிலநூறு பேரைக் காயப்படுத்திய காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறலை விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையாம். எதிர்க் கட்சிகள் வேண்டுகோளுக்குப் பின்னரே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை என அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பார்வையில் பரமக்குடிச் சம்பவமும், இறந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர்களும் துச்சமாகப் பார்க்கப்படுவது மேல் சாதி அதிகாரத் திமிரன்றி வேறென்ன? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சமும், காயம்பட்டவர்களுக்கு 15,000 என நிவாரணம் அறிவித்தது என்பதும் ‘ஜெ’ யின் பார்ப்பன வக்கிர மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி எனக் காவல்துறை தாக்குதல் நடத்துவதும்,  படுகொலை செய்வதும் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளுக்கிடையில் என்ன வித்தியாசம்? ஓரே அணுகுமுறைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி எப்போதும் சாதிய வன்மம் கொண்ட அரச பயங்கரவாதத்தால் ஆயுதம் கொண்டே அடக்கப்படும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் எதிரியின் மொழியே நமது மொழியாகும். இது நமது விருப்பமல்ல, தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம். தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் சக்தியாக எழ வேண்டிய அவசியம் உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இரையாகாமல் சுயமரியாதைக்காக, சமூக மாற்றத்திற்காக சாதி ஒழிந்த சமதர்மத் தமிழகம் படைக்க ஓரணியில் திரள வேண்டும்.   

* ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் நடத்திய தமிழக அரசின் காவல்துறைக்கு எதிராக அணி திரள்வோம்!
* துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்  பதிவு செய்து, கைது செய்!
 * பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றவர்கள் மீது சம்மந்தமில்லாமல் போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!
* இறந்தவர் குடும்பத்திற்கு ரூ10 இலட்சமும், காயம் பட்டவர்களுக்கு ரூ3 இலட்சமும் வழங்கு! எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்!
* 21 ஆம் நூற்றாண்டில், கணினி மூலம் உலகமே விரல் நுனிக்குள் வருகிற,  வளர்ந்த     சூழலில் சாதிக்கு எதிரான மானுட நேய மனோபாவத்தை உயர்த்திப் பிடிப்போம்!
* காவல்துறை அட்டூழியங்களை கட்டவிழ்த்து விடும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக   உழைக்கும் தமிழர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் அணி திரள்வோம்!

சனி, 27 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே! - அருந்ததிராய்

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்விக்கு கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.

இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்து கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆங்கிலத்தில் : அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)

தமிழில் : சொ.பிரபாகரன்

****

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

மரண தண்டனை ஒழிப்போம்!

பேரறிவாளன், சாந்தன், முருகன், அப்சல்குரு உள்ளிட்ட ஆறு பேரின் கருணை மனு ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் 135 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அகிம்சை பேசும் இந்தியா மரணதண்டனையை உறுதி செய்கிறது. இருபது ஆண்டுகள் சிறையில் வாடியவர்களுக்கு மரணதண்டனையை அளிக்கிறது காந்தி தேசம். மரணதண்டனை ஒழிப்பிற்காக மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவோம்.

புதன், 20 ஜூலை, 2011

ஈழ எதிர்ப்பு - ஆதவன் தீட்சண்யாவின் ஆளும் வர்க்கச்சேவை - மீ.த.பாண்டியன்

 புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எனும் பெயரில் எழுதப்பட்ட         ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பில், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பில் சிறுகதைகள் எனும் வகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
     கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. ‘‘இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்’’ எனத் தொடங்கும் கதை, ‘‘விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்’’ மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பித் தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார். இறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக ‘‘நாடும், மசிரும்’’ என முடிக்கிறார். 
   ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, ‘‘இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்” என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் ‘‘இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை” எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழ ஆதரவாளர்கள் அதிகமாக தங்களது செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.
     இரண்டு கதைகளுமே (Political satire) அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’ (RAW) ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது. 1987 க்கு முன், 1987 க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ (RAW) உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின், இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த  சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட  சர்வதேச சக்திகளின் பாத்திரம். இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட  கட்சிகளும்--, தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிறுத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிறுத்துகிறது.
       தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துமளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.
 ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ யாக அடியெடுத்து வைத்துள்ளது. மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.
      தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிறுத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிறுத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?
   தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது.   சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ,  செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?
    தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே. ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கணைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்?  தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெருமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்க! என அறைகூவல் விடுக்கலாம். கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்திக கோவணத்தை உறியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே-- 17 இயக்கம் முன்னெடுக்காமல். பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?
     பகடி, கேலி, கிண்டல் - தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் என உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் கலை வடிவங்கள். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல்     ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.
  போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும்,  பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை. எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?
   இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே! எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி,ய வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா? உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்!                                      - நன்றி : கீற்று.காம்.

உலகமயமாக்கச் சூழலில் தாய்மொழி - தமிழ் ---மீ.த.பாண்டியன்.

 உலகம் முழுவதும் பல்வேறு மொழிகள், இனங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அவைகளில் பல இனங்களுக்கு அவர்களது மொழிப் பயன்பாடு வழமையற்று வழக்கொழிந்து போய் விட்டது. மலைவாழ் மக்கள் பேசும் பலமொழிகளுக்கு ஒலி வடிவம் உள்ளதேயொழிய எழுத்து வடிவம் இல்லை. மனித உழைப்பின், உறவாடலின், உரையாடலின் விளைபொருளே மொழி. ஒவ்வொரு மொழியும் வடிவம் பெறுவது, கட்டமைப்பைப் பெறுவதும் அதன் பயன்பாட்டைப் பொறுத்தேயாகும். ஒரு மொழி வாழ்வதும், வளர்வதும் அதைப் பேசும் மனிதர்களுக்கு புதிய, புதிய செய்திகள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், படைப்புகள் அம்மொழியில் உருவாக்கப்படுவதைப் பொறுத்தே உள்ளது.
 நமது தாய்மொழி தமிழ். தமிழ்மொழி மிக தொன்மையான மூத்த மொழி. தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்கள், காவியங்கள் ஏராளமாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் அறியப்பட்ட செம்மொழியாக உள்ளது தமிழ். வடமொழியான சமஸ்கிருதம் நீண்டகாலமாக பரவலாக்கப்பட்டதின் விளைவாக தமிழ் தன்னைத் தற்காத்துக் கொள்ள கடுமையான போராட்டத்தைச் சந்தித்துள்ளது. வடக்கின் அதிகார மொழியாக, சமஸ்கிருதம் தொடுத்த வேதகாலத் தாக்குதல் தன்னைத் தாக்குப்பிடிக்க தமிழும், தமிழர்களும் நீண்ட காலப் போராட்ட வரலாறு கொண்டிருக்கின்றனர். வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் படைக்கப்பட்டுள்ளன.
 வெள்ளைக்கார வியாபாரிகளின் வருகையையொட்டி அதிகாரத்தில் வெள்ளை அரசாங்கம் தனது ஆட்சியை நடத்த ஆங்கிலத்தை பரவலாக்கியது. ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமல்லாமல், ஆங்கிலக் கல்வி முறை பரவலாக இந்தியாவில் ஒரு அடிமை வர்க்கத்தை உருவாக்கியது. வெள்ளை நோக்கிய ஒரு ஈர்ப்பையும், வெள்ளைக்காரர் பேசும் ஆங்கிலத்தை நோக்கி ஓர் மாயையும் உருவாகியது. வடமொழியிலிருந்து தற்காத்துக் கொள்ளப் போராடிய தமிழ், ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ளப் போராடியது. ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் அறிவாளிகளாக, தீர்மானகரமான பாத்திரம் வகிப்பவர்களாக மாறினர். வெள்ளைக்காரர்களுடன் ஒட்டி உறவாடுவது நாகரீகமாகக் கருதப்பட்டது.
 வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் மட்டுமன்றி அவர்களது ஆட்சிப் பரப்பு முழுவதும் பரவலாகத் தொடங்கின. 19 -- ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்கள் இந்தியா முழுவதும் போராட்ட ஒருங்கிணைப்பை உருவாக்கியது. பேரரசுக் கனவை செயலாக்கிய இசுலாமிய மன்னர்களும், ஏனையவர்களும், வெள்ளை அரசின் ஒற்றை ஆட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தன. தனது ஆட்சியை எங்கெங்கு விரிவாக்கினார்களோ அங்கெல்லாம் உருவாகிய அந்நிய எதிர்ப்பு சுதேசி உணர்வை, அதனடிப்படையிலான ஒருங்கிணைப்பை உருவாக்கியது. ஆங்கிலம் கோலோச்சியது. ஆங்கிலத்தை எதிர் கொள்ள, பலமொழி பேசுகிற இனங்களின் ஓர்மையை ஒருங்கிணைக்க இந்து மத அடையாளத்தையும், இந்தியையும் பயன்படுத்த முனைந்தனர். வெள்ளையன் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு பகுதிகளில் ஆட்சி உரிமை பெற்றிருந்த காலக்கட்டத்தில் இந்தியை ஒரே மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்க முயன்றனர். வங்காள மொழியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்கும் முனைப்பும் இருந்தது. ஆனால் அன்றையச் சூழலில் இந்தி முன்னிலைப்படுத்தப்பட்டது.
 மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி 1938 இல் இந்தியை கட்டாயமாகத் திணித்தார். எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. கட்டாய இந்தித் திணிப்புச் சட்டம் பின்வாங்கப்பட்டது. பிறகு 1948 இல் மறுபடியும், 1965 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. மாணவர்களின் கடுமையான போராட்ட எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தி மொழித் திணிப்பு பின்வாங்கப்பட்டது. தமிழகம் ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என இந்திய அரசு வாக்குறுதியளித்தது. தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதற்காக, இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் இந்தியைத் தவிர்த்து, ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதில் போய் முடிந்தது. தமிழ்வழிக் கல்வி இரண்டாம் இடத்திற்கும், இகழ்ச்சிக்குரியதாகவும், ஆங்கிலம் ஈர்ப்பு மையமாகவும் மாறியது. ஆங்கில வழிக் கல்வி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு மட்டுமே இருந்தது மாறி தமிழ்வழிக் கல்வி ஒரு பிரிவுப் பாடமாக தலைகீழாக மாறியது. காலப்போக்கில் ஆங்கில வழி மழலையர் பள்ளிகள், மெட்ரிக் பாடப்பிரிவு, மத்திய அரசு பாடத் திட்டம் எனும் பெயரில் ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி ஆங்கிலம் என்பதே அறிவுக்கு வழி எனும் போக்கு உருவாக்கப்பட்டது.
 தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்திற்கு, சமச்சீர் கல்வி முறைக்கு, தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு, தமிழில் பெயர்ப்பலகை, அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போடுவது போன்றவைகள் அமுலாவதற்கு தமிழகத்திலேயே சட்டம் போடுவது எனும் நிலைதான் தற்போதைய நிலை. திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயரை தலைப்பாக வைத்தால் வரிச்சலுகை, நிதி உதவி, ஆலயங்களில் தமிழிலும் வழிபட உரிமை, தமிழக உயர் நீதிமன்றக் கிளைகளில் தமிழி¢¢ல் வாதாட, தீர்ப்பு எழுத இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   ‘‘ எதிர்காலத் தலைமுறைக்கு தகவல்களைத் தெரிவிக்கும் ஆவணங்களை ஆங்கிலத்தில் எழுதுவது முறையல்ல’’ என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தமிழகத்தில் அறிவித்துள்ளார். இவைகளுக்கெல்லாம் எதிராக தமிழகத்திலேயே நீதிமன்றத்தில் எதிர் வழக்குப் போடும் நிலையில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. 1947 வெள்ளையர் ஆட்சி போன பிறகும், ஆங்கிலத்தை நோக்கிய அடிமை மோகம் நகரம் தொடங்கி கிராமம் வரை ஊடகங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பதில் சொல்ல மட்டுமே உரிமை என்பது கேடான நிலை.
 வேதகால வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக, ஆங்கிலேயர் கால ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக, இந்திய மயமாக்கத்திற்கான இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, போராடிய தமிழ் இன்று ஆங்கிலமயமாக்கத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கம் எனும் தாராளமயச் செயல்பாடுகள் ஆங்கிலத்தை பரவலாக்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணிணிப்    (Computer)  பயன்பாடு ஆங்கில மொழியே பயன்பாட்டுக்குரியது எனும் சூழலை உருவாக்கியுள்ளது. கணிணி வழியாக மின் அணுச் செய்திகள் (Email), வலைப்பூ  (Blogspot), வலைத் தளம் ( Website ) போன்ற உலகு தழுவிய தொலைத் தொடர்புக் கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்தையே முதன்மைப்படுத்தியுள்ளன.                 கைத் தொலைபேசி  (CELL) வளர்ச்சியின் விளைவு குறுந்தகவல் (Message) அனுப்புவது எனும் முறை ஆங்கிலத்திலேயே உள்ளதால் கடந்த காலங்களில் தமிழில் கடிதம் எழுதிய பழக்கம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பண்பு கைவிடப்பட்டு மனிதத் தொடர்புகள் ஆங்கில மொழித் தொடர்புகளாக மாற்றமடைந்துள்ளன. தமிழகத்தில் தமிழின் நிலை அவல நிலையாக உள்ளது.   ‘ மெல்லத் தமிழ் இனிச் சாகும் ’ எனும் நிலை தான் இன்றைய நிலை.
 தமிழகத்தில் வேலை கிடைக்காமல் வெளி மாநிலங்களுக்கு, வெளி நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் கூட்டம் தனது சொந்த மொழியிழந்து தஞ்சமடையும் நாடுகளின், இந்திய மாநிலங்களின் மொழியை எழுதப் படிக்கும் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை உள்ளது.
 மறுபுறம் விஞ்ஞானம் அதே கைத் தொலைபேசியில் தமிழில் பெயர்களை, குறுந்தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்பும் வந்துள்ளது. கணிணியில் தமிழிலேயே பதிவு செய்யும் வாய்ப்பு கொண்ட மென்பொருள் ( Software)  வசதிகள் வந்துள்ளது. ‘ யூனிகோட்’ ( Unicode) எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துக்களிலேயே தட்டச்சு செய்து தமிழில் மாற்றும் முறை வந்துள்ளது. அதாவது தமிழை ஆங்கில வழியில் எழுதுவது, படிப்பது. மென்பொருள், கணிணி ஆய்வாளர்கள், பொறியாளர்கள் தமிழ் தட்டச்சுப் பலகை கண்டு பிடித்துள்ளனர். இவைகள் எல்லாம் பரவலாக்கப்பட வேண்டும் என்றால் அரசின் நிதி உதவி, அதிகாரம் இல்லாமல் சாத்தியமில்லை.
    உலகமயமாக்கச் சூழலில் ஒவ்வொரு இனத்தின் விளைபொருளான அவர்களது தாய்மொழியை மறக்கடிக்கச் செய்யும் போக்கை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதே உலகமயமாக்கச் சூழல் பறிக்கும் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தமிழில் கொண்டு வருவது, வாசிப்பது, பழக்கப்படுத்துவது செய்யப்பட வேண்டும். மொழி, பண்பாடு, கலை, இலக்கிய வளர்ச்சி ‘ தமிழ் மொழி வாழ்க ’ எனும் முழக்கத்தால் மட்டும் வராது. தமிழில் ஏனைய மொழிகளின் இலக்கியங்கள், ஆங்கிலத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் ஏனைய நாடுகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கலை, இலக்கியம்,  தமிழில் கொண்டு வரப்படுவதன் மூலமே சாத்தியப்படும். இல்லையேல் தமிழில் பேசலாம், எழுதப் படிக்கத் தெரியாது எனும் மொரிசியஸ் நாட்டுத் தமிழர்கள் நிலை தான் வந்து சேரும்.தாய் மொழியில் கற்பதன் மூலம் தாய்மொழியைக் காப்போம்.                                                                              .

சனி, 9 ஜூலை, 2011

கா.சிவத்தம்பி மறைவுக்கு அஞ்சலி !


மார்க்சிய ஆய்வாளர் கைலாசபதிக்குப்பின், தொடர்ச்சியாக கா.சிவத்தம்பி அவர்களின் பங்கு மகத்தானது. 06.07.2011 அன்று அவரது மறைவு தமிழ் ஆய்வுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். 1988 சென்னையில் நடந்த வேர்கள் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகப் பண்பாட்டுச் சூழலில் அவரது ஆய்வுகள் மகத்தானது. தோழர் கோ.கேசவனின் ஆய்வுத் தொடர்ச்சி எப்படி அறுந்து போனதோ அது போல் சிவத்தம்பிக்குப் பிறகான தொடர்ச்சி கேள்விக்குறியே.

சி.பி.ஐ மத்தியக் குழுவிற்குப் பாராட்டுக்கள்

 ஜூலை-8, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு தினத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு இ.க.க ( மா - லெ ) மக்கள் விடுதலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2008 ல் ஈழத் தமிழர் மீதான சிங்கள யுத்தம் தீவிரமானபோது அக் - 2 ல் தமிழகத்தில் சி.பி.ஐ தனது முயற்சி மூலம் தொடங்கி வைத்தது. தற்போது உலகம் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசை போர்க்குற்ற அரசாக விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர்க் குற்றவாளி இராசபக்சே தன்னையும், தனது அரசையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசின் துணையை நாடுகிறான். 2008 - 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை அரசின் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைத் தாக்குதலுக்கு எதிராகத் தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, காங்கிரசின் இந்திய அரசு அனைத்து வித இராணுவ உதவிகளையும் அளித்து இலங்கை அரசுக்குத் துணை நின்றது. இன்று வரை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், கைதும் நிறுத்தப்படவில்லை.
 உலக நாடுகள் இராசபக்சேவைத் தண்டிக்க ஐ.நா. குழுவின் அறிக்கையும், பிரிட்டனின் சேனல்4 காணொளிக் காட்சிகளும் துணை நிற்கும் நேரமிது. இந்தியா முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனை மீது திரும்பிப் பார்க்க வைக்கும் தீர்மானத்தை சி.பி.ஐ மத்தியக்குழு நிறைவேற்றி இருப்பது உற்சாகமூட்டுகிறது. இத் தீர்மானம் சர்வதேச இடதுசாரி அமைப்புகள் மத்தியில் விவாதத்தை உருவாக்குவது நிச்சயம். இராசபக்சே அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய அரசு, இலங்கை அரசுடன் நிற்கிறது என சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் செயலாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அடிவாங்கியும் காங்கிரசின் இந்திய அரசு உணரத் தயாரில்லை. தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தீர்மானம் தமிழகத்தின் தீர்மானம் என்பதைப் புறந்தள்ளி இலங்கை செல்லச் சம்மதித்துள்ளது இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.தமிழர் உணர்வுகளை மீறி இச்சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கை செல்வாரெனில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி               இ.க.க (மா - லெ )மக்கள் விடுதலை மத்தியக் குழு தீர்மானித்துள்ளது. சி.பி.ஐ மத்தியக்குழுவின் இத் தீர்மானம் இந்திய அரசை எச்சரிப்பதாகவும், ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்துவதாகவும் உள்ளது.  ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை தமிழ் மாநிலக்குழு பாராட்டுகிறது. இணைந்து நிற்கிறது.
 மீ.த.பாண்டியன். மாநிலச் செயலாளர்,இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை

புதன், 6 ஜூலை, 2011

குழந்தைகள்தான்-எஸ்.இராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/?p=1571
நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள்.
உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே அது உண்மை, டிவி ரிமோட் கண்ட்ரோலை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். இதற்காகவே வீட்டில் இரண்டு மூன்று ரிமோட் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார்.
எதற்காக ரிமோட்டைப் பிடிக்கும் என்று மறுபடி கேட்டேன். அந்தச் சிறுமி ரிமோட் இருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடலாம். உங்களை எனக்குப் பிடிக்காட்டி என் ரிமோட்டை அமுக்கினா நீங்க உடனே மாயமா மறைஞ்சி போயிருவீங்க.. இந்த ரிமோட் இல்லாட்டி எனக்கு போரடிக்கும் என்றாள். நாலு வயதில் அவளுக்கு உலகம் போரடிக்க துவங்கியிருக்கிறது பாருங்கள்.
நண்பர் பெருமையுடன் அவளை யார் வீட்டுக்கு அழைத்துப் போனாலும் முதலில் அங்குள்ள ரிமோட்டை எடுத்துக் கொண்டுவிடுவாள். தராவிட்டால் பிடுங்கி உடைத்து போட்டுவிடுவாள்.  ஒரு முறை திரையரங்கிற்கு அவளை அழைத்துக் கொண்டு போனோம். அங்கே சப்தம் மிகஅதிகமாக இருக்கிறது. ரிமோட்டை வைத்து சப்தத்தை குறையுங்கள் என்று சொன்னாள். அப்படி நாம் குறைக்க முடியாது இது தியேட்டர் என்றதும் கோபத்துடன்  அழத்துவங்கி எங்களை படமே பார்க்கவிடவேயில்லை.
டிவி ரிமோட், வீடியோ கேம் ரிமோட், பேட்டரி கார் ரிமோட், என்று ஏùழுட்டு ரிமோட் வைத்திருக்கிறாள். டிவியில் வேறு சேனல்களை நாம் மாற்றிவிட்டால் அவளுக்கு வரும் கோபத்தை தாங்கவே முடியாது. போடி நாயே, போடி தெண்டம் என்று திட்டுவாள் என்று சிறுமியின் அம்மா பெருமையாகச் சொன்னாள்.
நண்பர் வேடிக்கையாக. இவளாவது பரவாயில்லை என் அண்ணன் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் வீட்டிற்கு வரும் கூரியர்காரர் முதல் எங்கள் அப்பா வரையான அத்தனை பேரையும் மரியாதையின்றி அது வந்திருக்கு என்று தான் சொல்கிறாள். இந்தக் கால குழந்தைகள் எவருக்கும் மரியாதை கற்றுதரப்படவேயில்லை  என்றார்.
நண்பரின் மகளின்  பேச்சும் நடத்தையும் நாற்பது வயது ஆளின் நடத்தை போலவே இருந்தது. உனக்கு எப்படி இந்தச் சொற்கள் எல்லாம் தெரிந்தன என்று கேட்டேன் .உன் வேலையை பாத்துகிட்டு போ என்று சொல்லி முறைத்தாள்.
நண்பர் தன் மகளைத் தூக்கி கொஞ்சியபடியே உங்களை இத்தோடு விட்டுவிட்டாள். நாராயணன் சார் வந்தபோது அவரைப் பிடிக்கவில்லை.  வீட்டை விட்டு உடனே போகச்சொல்லு என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவர்  காபி கூட குடிக்காமல் ஒடிப்போய்விட்டார் என்று சொல்லி சிரித்தார்.
சிறுவர்கள்  உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது. வன்முறை, அடிதடி, கொலை என ரசித்துப் பேசிக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய கோபம், பணத்தின் மதிப்பே தெரியாமல் செலவு செய்வது, அடுத்தவர்களை வெறுப்பது, மற்றவர் பொருட்களை உடைத்து எறிவது என்று அவர்களின் மனஇயல்பில் வன்மம் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது.
கண்ணாடித் தொட்டியில் வளரும் மீன்களுக்குத் தன்னை இரைபோட விடவில்லை என்று ஒரு சிறுவன் அதில் பினாயிலை மொத்தமாக கொட்டி எல்லா மீன்களையும் கொன்றுவிட்டான். இன்னொரு சிறுவன் பக்கத்து வீட்டில் சைக்கிள் ஒட்டும் சிறுமியை கிரிக்கெட் மட்டையால் அடித்து உடைத்துவிட்டான். அந்தச் சிறுமி அவனைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டாள் என்பது தான் காரணம். விளையாடுமிடங்கள், பொது இடங்கள், பள்ளி என்று எல்லா இடங்களிலும் குழந்தைகள்  விரோதமனப்பாங்கிலே சந்தித்துக் கொள்கிறார்கள்.
அண்டை வீட்டு குழந்தைகள் நம் வீட்டில் வந்து சாப்பிடுவதும். நம் குழந்தைகள் நண்பர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு வருவதும் பழங்கதையாகிப் போய்விட்டிருக்கிறது.உண்மையில் இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதேயில்லை தானா?
நகராட்சி பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன்  நீலநிற டீசர்ட் அணிந்த மற்றொரு சிறுவன் தானும் விளையாட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான். போ. போய்விளையாடு என்றாள் அம்மா.
அதற்கு சிறுவன் அந்த சனியன் விளையாண்டுகிட்டு இருக்கான்மா. நீ அவனை அடிச்சித் துரத்து என்றான். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று அம்மா சொல்லவேயில்லை. நீ போ நான் சொல்றேன் என்றபடியே உரத்த குரலில் டேய் தம்பி நீ தள்ளிக்கோ என்றாள்.
அதுவரை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வேண்டுமென்றே இடத்தை அடைத்துக் கொண்டு டீசர்ட் அணிந்த சிறுவன் விளையாட இடம் தர மறுத்தான். மறுநிமிசம் அவனை பிடறியோடு பிடித்து தள்ளிவிட்டான் நீல நிறப் பையன்.  சிறுவன் சறுக்கி விழுந்து அடிபட்ட வலியோடு வேகமாக மேலே ஏறி நீல நிற பையனை அடிக்க ஒடினான். அவனோ பயத்தில் ஒடி அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டுவிட்டான். வலியோடு அந்த சிறுவன் மீண்டும் சறுக்குவிளையாட ஆரம்பித்தான்.
நீல நிற டீசர்ட் அணிந்தவன் மெதுவாக அம்மா பின்னாடியிருந்து எட்டிப்பார்த்து அவன் என் எனிமி அவனை நான் பாம் வச்சி கொல்லப்போறேன்  என்று சொன்னான். அம்மா அதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இது யாரோ இரண்டு சிறுவர்களுக்கு நடக்கும் விசயமில்லை. நகரில் பெரும்பான்மை சிறுவர்கள் அப்படிதானிருக்கிறார்கள்.. எங்கே இன்னொரு சிறுவனை கண்டாலும் ஒரு கையாட்டல். புன்னகை எதுவும் கிடையாது. தொலைக்காட்சி தொடர்களில் இருந்து கற்றுக் கொண்ட  கடுஞ்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். திரைக்காட்சிகள் போலவே அடித்தும் உதைத்தும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இவை யாவையும் விட சிறுவர்களிடம் எது குறித்தும் வியப்பேயில்லை.
சிறுவயதில் விமானம் கிராமத்தை கடந்து போனால் கூடவே ஒடுவோம். ரயில் போகும்போது கைகாட்டிக் கொண்டேயிருப்போம். ஊருக்குள் புதிதாக வரும் குரங்காட்டி பின்னாலே போவோம். யானை வந்தால் அவ்வளவு தான். அது ஊரைவிட்டுப் போகும்வரை கூடவே செல்வோம். இன்று விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு சிறுவன் கூட மாநகரில் இல்லை. இதைப் பற்றி ஒரு சிறுவனிடம் கேட்ட போது ஒருவேளை விமானம் வெடித்து கிழே விழுந்தால் நிமிர்ந்து அதை வேடிக்கை பார்ப்பேன். மற்றபடி வானில் பறக்கும் போது அதில் அதிசயப்பட என்னயிருக்கிறது என்று கேட்டான்.
முன்பெல்லாம்  பெரியவர்களின் உடைகள், காலணிகள், அணிந்து பார்க்கும் ஆசை சிறார்களுக்கு இருந்தது.  பொருந்தாத சட்டைகளை அணிந்து கொண்டு சிறுவர்கள் நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். அது போல தங்கைகளை இடுப்பில் தூக்கி கொண்டு அலையும் சிறுமிகளை  காண்பதும் இயல்பாகவே இருந்தது. இன்று அப்படி ஒரு சிறுமி கூட கண்ணில் படவில்லை. தங்கையோ, தம்பியே பிறந்துவிட்டால் அவனை போட்டியாளனாகவே நினைக்கிறார்கள். நீ ஏன்டா பிறந்தே என்று கோபப்படுகிறார்கள்.
இன்று தன்னை விட இரண்டு வயது மூத்த அண்ணனின் சட்டையை போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்று தம்பி அடம்பிடிக்கிறான். அத்தோடு அது அவன் சட்டை அதை போடச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதே என்று அப்பா அம்மாவிடம் கோபப்படுகிறான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வசதி குறைபாடுகளை சிறுவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நேரடியாக அதைக் குறை சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
சேர்ந்து விளையாடுவது. சேர்ந்து உண்பது. சேர்ந்து சுற்றுவது என்ற கூட்டு செயல்பாடுகள் சிறார்களிடம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.  ஆகவே தனியாக வீடியோ கேம் ஆடுவது தான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காகி இருக்கிறது.
நமது தவறுகள், பலவீனங்கள், பொய்கள், கோபம், இயலாமை, தடுமாற்றங்கள் இவைகளை  நமது பிள்ளைகள் எளிதாக கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். ஆகவே நம்மை தான் முதலில் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நிறையப் பேசி, நிறையப் பகிர்ந்து கொண்டு. நிறையப் பயணம் செய்து, அனுபவங்களின் வழியே உலகை அவர்களுக்குப் புரிய வைப்பது தான் எளிய வழி. அதைச் செய்வதற்கு  நமக்கு விருப்பமில்லாமல் எப்போதுமே சிறுவர்கள் பார்த்துக் கத்திக் கொண்டேயிருக்கிறோம்.ஆகவே அவர்கள் இப்படிதான் வளர்வார்கள். வேறு வழி. என்ன இருக்கிறது **

ஞாயிறு, 26 ஜூன், 2011

சூன் 26, 2011, மதுரையில் நினைவஞ்சலி

  சூன் 26, 2011 சித்திரவதைக்கு  எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு             மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்
இலங்கை  கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க அணிதிரண்டார்கள்.                                                                                  ஏற்பாடு- தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு. மதுரை

புதன், 22 ஜூன், 2011

இ.க.க (மா.லெ) மக்கள் விடுதலை கருப்புக் கொடி

21.06.2011 அன்று தஞ்சையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மத்தியக் குழு முடிவுகளை தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் முன்வைத்தார் . . . .                                                                                                         ஐ.நா.குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இனப் படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே ஐ.நா. மன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசு மீது நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலில் உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் இனப்படுகொலையாளன் இராஜபக்சே கும்பலைத் தண்டிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக ஒத்துக் கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலைக்கு நடவடிக்கை இல்லை. முகாமில் இருந்து மீண்ட ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற்றத் தயார் இல்லை. இச்சூழலில் இந்திய, பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் போடும் நோக்கிலும், இராஜபக்சே அரசைக் காப்பாற்றும் நோக்கிலும் இலங்கை செல்லும் பிரதமரது செயல் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதாக உள்ளது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரானால் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும். உணர்வாளர்கள், இனப் படுகொலை எதிர்ப்பாளர்கள், கருப்புக்கொடியேற்றி நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
 தமிழகக் கல்வியாளர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக சமச்சீர் கல்வி தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அமுலுக்கு வந்தது. சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்டம் முதல்படியாக அமுல்படுத்தப்பட்டது. போதாக் குறைகள் இருந்த போதும் முத்துக்குமரன் குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த தமிழகக் கல்வியாளர்கள் கோரி வந்தனர். தமிழக மக்களின் கோபாவேசத்தால் ஆட்சியிலிருந்து தி.மு.க தூக்கி எறியப்பட்டதன் விளைவாக ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுலாக்க மறுத்து, எந்த ஆய்வும் இல்லாமல் முடிவு செய்தது கண்டிக்கத் தக்கது. தி.மு.க.வுடன் அவருக்குள்ள பகையை கல்வித் திட்டத்தில் காட்டுவது முறையற்றது. மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் பிடியில் உள்ள ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக நிலையெடுப்பது தமிழக மாணவர்களின் சமவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். உயர் நீதிமன்ற ஆணையை அமுலாக்க வேண்டும், உச்ச நீதிமன்ற வேண்டுகோள்படி அமைத்த கல்விக்குழுவில் நியமித்துள்ள தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமுலாக்கப்பட வேண்டும்.                                                           நாகை மாவட்டம் காவிரியின் கடைமடைக் கடலோரப் பகுதிகளில் தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விளை நிலங்களில் ஐக்கிய முன்னணி காங்கிரஸ் அரசு அவசர கதியில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விளை நிலங்களை நம்பி வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வேலை இழைப்பைச் சந்திக்கின்றனர். விளை நிலங்கள் பாழ்பட்டுப் போவதும், விவசாய சமூகம் தனது வாழ்வுரிமையை இழப்பதும் நிகழ்கிறது. கடலோரங்களைத் தேர்வு செய்து இருப்பதன் மூலம் கடல்வளம் பாழ்படுவதும், மீனவர் கிராமங்கள் அழிந்து போவதும்,  போன்ற அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. நாகை மாவட்ட கடலோரங்களில் அனுமதி அளித்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களின் அனுமதியை இரத்து செய்வதுடன், விளை நிலங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவேற்ற ஜெயங்கொண்டத்தில் தொடங்க அறிவித்த மின் நிலையத்தை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனல் மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், படித்த அறிவாளிப் பிரிவினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆதரவு தரவேண்டுகிறோம்.

சனி, 18 ஜூன், 2011

மக்சிம் கார்க்கி 16.03.1868 - 18.06.1936

மக்சிம் கார்க்கி (18 .06 .1936 ) இன்று தோழர் ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி நினைவு நாள்.  இன்றும்
பொருந்தும் அவரது எழுத்து, " துன்பகரமான காலத்தில்
நாம் வசிக்கிறோம். வாழ்க்கை சகிக்கமுடியாத அளவுக்குக் கொடுமையானதாக இருக்கிறது. ஆயினும்
மனிதனுள் உறையும் நல்ல சக்திகள் சுதந்திரமாகப்
படைக்கவும், கட்டுப்பாடின்றி உழைக்கவும் விழிப்புற்று
எழப்போகிற தருணத்திலேயே நாம் இருக்கிறோம். இதுதான் உண்மை. இது நமக்கு ஆறுதல் அளிப்பதோடு, நம்முள் புதிய பலத்தையும், துணிவையும் புகுத்தவேண்டும்."

புதன், 15 ஜூன், 2011

ஜூன்- 14,தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்

ஜூன்- 14,   தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்.அவரின்
 நினைவுகள் போர்க்குணாம்சத்தை நமக்குள்
உருவாக்குகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை  முன்னெடுத்துச்செல்ல போராளி சேகுவேராவின் வரிகள்,

'' ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ               அங்கெல்லாம் எனது கால்கள்பயணிக்கும்.''                                                                                                                        '' எங்களது ஒவ்வொரு செயல்பாடும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட அறைகூவல்தான்..''.

புதன், 8 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை - இரா. உமா.

சிவப்புத் தோல் கதாநாயகன் இல்லை. சிக்கென்ற உடையில் வரும் கதாநாயகி இல்லை. ஒரே பாட்டில் கதாநாயகன் கோடீசுவரன் ஆகும் அதிசயம் இல்லை. குத்துப்பாட்டு இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் தாவித்தாவிக் குதிக்கும் சண்டைக்காட்சி இல்லை. கனவுப்பாட்டு இல்லை. யாரும் யாரையும் கண்டபடி கட்டிப்பிடிக்கவில்லை. ஆனாலும் தொடங்கியதில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் செல்கிறது அழகர்சாமியின் குதிரை.
அழகான மலைகள் சூழ்ந்த தேனி மாவட்டத்தின் மலைக்கிராமங்கள்தான் இந்தப் படத்தின் கதைக்களங்கள். கோயிலில் இருந்த அழகர்சாமியின் மரக்குதிரை காணாமல் போய்விட, பக்கத்து கிராமத்தில் இருக்கும் அழகர்சாமியின் குதிரை அந்த ஊருக்குள் வந்துசேருகிறது. தன்னுடைய குதிரையைத் தேடி அக்கிராமத்துக்கு வரும் அழகர்சாமிக்கும், சாமியின் மரக்குதிரைதான் உயிருடன் வந்திருக்கிறது என நம்பும் அந்தக் கிராமத்தாருக்கும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் மையம்.
இதற்குள், அழகான காவியங்களாய் இரண்டு காதல்கள், கடவுளின் பேரால் நடக்கும் போலித்தனங்கள், மக்களின் நம்பிக்கைகள், கிராமத்து மக்களின் வெகுளித்தனங்கள் என கண்களை உறுத்தாத காட்சிகளால் நிறைந்து நிற்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.
திருவிழா நடத்துவதற்கு நிதி கேட்டுவரும் ஊர்ப்பெரியவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. தன் வீட்டிற்கு வரும் ஊர்ப்பெரியவர்களைப் பார்த்து, கையில் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, கட்டபொம்மன் வசனம் பேசும் சிறுவனும், நிதிகேட்டு வந்தவர்கள் போகும் வரை, காதுகேட்காதது போல் நடிக்கும் பாட்டியும் கிராமத்து குசும்பின் பதிவுகள்.
இதுவரை நம்முடைய கிராமத்துக் கோடாங்கிப் பூசாரிகளைத்தான் பித்தலாட்டக்காரர் களாகவும், கேலிக்குரியவர்களாகவும் தமிழ்த்திரைப்படங்கள் காட்டி வந்தன. இந்தப் படத்தில், ‘ மதிப்புமிக்க ’ மலையாள மாந்த்ரீகனை நாலா பக்கமும் கிழித்துக் காட்டியிருக்கின்றனர். காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க உள்ளூர் பூசாரியால் முடியாது என்று முடிவு செய்து, கேரளாவில் இருந்து பூசாரியை வரவழைக்கின்றனர். அவன் அந்தக் கிராமத்து மக்களின் அறியாமையையும், வெள்ளந்தித்தனத்தையும் பயன்படுத்தி, மலையாள பகவதியின் பெயரைச் சொல்லி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறான் எனக் காட்டும் காட்சிகள் சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் வைக்கின்றன.
உள்ளூர் பூசாரியிடம் குறி கேட்கும் போது, அவர் அருள்வந்து ஆடுவதைப் பார்த்து ஒரு சிறுமி, “ ஏண்டா நம்ம பூசாரிக்கு பேய் பிடிச்சிருக்கா? ” எனக் கேட்க, அதற்கு அந்தச் சிறுவன், “ இல்ல சாமி வந்திருக்கு ” என்று சொல்வதைக் கேட்டு, மற்றொரு சிறுவன், “ ரெண்டும் ஒன்னுதான் ” எனச் சட்டென அலட்டிக் கொள்ளாமல் மெதுவாகச் சொன்னாலும், பொருள் பொதிந்த அந்த வசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் பாத்திரத்தின் தேர்வு சிறப்பு. குதிரை காணாமல் போனதுபற்றிப் புகார் தர வரும், ஊர்ப்பெரியவர்கள் சொல்லும் கற்பனைக் கதைகளைக் கேட்கக் கேட்க, மாறிக்கொண்டே வரும் முகபாவங்கள், திரையரங்கில் அவருடைய நடிப்புக்குக் கைத்தட்டல்களை வாங்கித் தருகின்றன.
குதிரைக்காரன் அழகர்சாமியாக வரும் அப்புக்குட்டியின் உருவத்தைப்போலவே, அவருடைய பாத்திரமும் கனமானதுதான். அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாகச் சொல்லித்திரியும் அழகர்சாமி, சரண்யா மோகனைப் பெண்பார்த்துவிட்டு, என்னைப் போலத்தானே அந்தப் பெண்ணுக்கும் அழகான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு நான் தகுதியானவன் இல்லை. அதனால் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடப் போகிறேன் எனத் தன் குதிரையிடம் சொல்லும் இடத்தில், பரட்டைத் தலையும், பருத்த, குட்டையான உருவமும், அதற்குள்ளிருக்கும் அழகான மனதும் சரண்யா மோகனுக்கு மட்டுமன்று, நமக்கும் மிகவும் பிடித்துப்போகிறது.
திருமணத்திற்கு முன் குதிரை காணாமல் போய்விடுகிறது. அந்தக் குதிரைதான், அழகர்சாமியின் வருவாய்க்கான மூலதனம். எனவே, குதிரையுடன் வந்தால்தான் திருமணம் என்று பெண்ணின் அப்பா சொல்லிவிடுகிறார். குதிரையைத் தேடி அலையும் அழகர்சாமி, மரக்குதிரை காணாமல் போன கிராமத்தில் தன் உயிருள்ள குதிரை ஊர் நடுவில் உள்ள மண்டபத்தில் கட்டிப்போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். ஆனால் ஊர்க்காரர்களோ, காணாமல் போன மரக்குதிரைதான், கடவுள் அருளாள் உயிருடன் வந்திருப்பதாக நம்பிக்கொண்டிருக் கின்றனர். அந்தக் குதிரையை வைத்துத்தான் திருவிழா நடத்தப் போவதாகவும், திருவிழா நடத்தினால்தான் மழை பெய்யும் என்றும் சொல்லி குதிரையைத் தர மறுக்கின்றனர்.
திருவிழா முடியும் வரையில், குதிரையுடன் அழகர்சாமியும் அந்த ஊரிலேயே தங்கிக்கொள்வது என்றும், திருவிழா முடிந்த உடன் அவனுடன் குதிரையை அனுப்பிவிடவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி சொல்வதை அனைவரும் வேறுவழியின்றி ஏற்றுக்கொள்கின்றனர். இடையில் குதிரையைக் கொண்டு செல்ல முயலும் அழகர்சாமியை ஊரார் அடித்துத் துவைத்து விடுகின்றனர். ஆறுதல் சொல்லும் இளைஞர்களிடம், அழகர்சாமி தனக்காக ஒரு பெண் காத்துக் கொண்டிருப்பதையும். வரும் பெளர்ணமிக்குள் குதிரையோடு போய் அவளைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், அவள் உயிரை விட்டுவிடுவாள் என்றும் சொல்லிக் கதறுகிறான். இதைக்கேட்ட இளைஞர்கள், திருவிழா முடிந்தாலும், ஊர்க்காரர்கள் குதிரையைத் தரமாட்டார்கள், எனவே இரவோடு இரவாக குதிரையோடு ஊரைவிட்டுச் செல்லத் தாங்கள் உதவுவதாகக் கூறுகின்றனர். ஆனால் திருவிழாவிற்கு அந்த ஊர் மக்கள் உற்சாகமாய்த் தயாராவதையும், உறவுகள் எல்லாம் ஒன்றுகூடுவதையும் பார்க்கும் அழகர்சாமிக்கு அவர்களுடைய மகிழ்ச்சியில் மண்அள்ளிப் போட மனம்வரவில்லை. எனவே திருவிழா முடிந்த பிறகே அந்த ஊரைவிட்டுக் குதிரையுடன் போவது என்பதில் உறுதியாக நின்றுவிடுகிறான்.
அசலூர்க்காரனாக இருந்தாலும், இந்த ஊர்இந்த ஊர் மக்களின் மீது அழகர்சாமிக்கு இருக்கும் அன்பைப் பார்த்து, மனம் திருந்தும் ஆசாரி, தான் மறைத்து வைத்திருந்த மரக்குதிரையை யாருக்கும் தெரியாமல் இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுகிறார். இதைப் பார்த்துவிடும் இளைஞர்களிடம், பழைய குதிரை காணாமல் போனால், புதிய குதிரை செய்யச் சொல்வார்கள். அதற்குக் கூலியாகக் கொஞ்சம் பணமும், தங்கமும் கிடைக்கும். அதை வைத்துத் தன் மகளின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தவற்றைச் செய்துவிட்டதாகக் கூறுகிறார். இளைஞர்களும் இதை யாரிடமும் சொல்லாமல், அவருடைய மகளின் திருமணத்திற்கும் உதவிசெய்கின்றனர். அதோடு, உயிருள்ள குதிரை மறுபடியும் மரக்குதிரையாக மாறிவிட்டது என்று சொல்லும் ஊர்ப்பெரியவர்களோடு இவர்களும் சேர்ந்துகொண்டு, போலியாக அதன்முன் விழுந்து கும்பிடுகிறார்கள்.
பகுத்தறிவு பேசும் இளைஞர் அணியினரின் பொதுநலன் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் ஊருக்கு நான்கு பேராவது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என எதிர்பார்க்க வைக்கின்றன. அந்த இளைஞர்களில் ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவரின் மகன் பிரபாகரன், கோயில் பூசாரியின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டதைக் கேட்டதும், அவனின் தந்தையான பஞ்சாயத்துத் தலைவர், தாழ்ந்த சாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே. அய்யோ சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணா எப்படிடா மழை பெய்யும். இனிமே இந்த ஊருல மழையே பெய்யாது என தரையில் விழுந்து புரண்டு சாபம் விட, மூன்றாண்டுகளாகப் பொய்த்து வந்த மழை இடி, மின்னலுடன் கொட்டோ கொட்டென்று கொட்ட, சாதிச் சகதி கரைந்து காணாமல் போவதுபோன்ற உணர்வினை அந்தக் காட்சியில் ஏற்படுத்திவிடுகிறார் இயக்குனர்.
படம் நெடுக பகுத்தறிவுக் கருத்துக் விதைக்கப்பட்டிருக்கின்றன. சாதி மறுப்பு, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பற்றி, கதையோட்டத்தோடு கலந்து வரும் வசனங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெறுகின்றன. ஆண்டுதோறும் அழகர் அலங்காரமாய்ப் பட்டுடித்தி, தங்க நகைகளுடன் ஊர்வலம் வந்தாலும், அழகரின் மரக்குதிரையைச் செய்த ஆசாரியின் வறுமை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால்தான் அதைத் தீர்க்க முடியும் எனக்காட்டுகிறது படம்.
இளையராஜாவின் இதமான இசையும், தெளிவாகக் கேட்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. அத்தனை நடிகர்களும் இயல்பான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். நேர்த்தியான காட்சியமைப்புகளின் மூலம், நம்மையும் அந்தக் கிராமத்து மக்களில் ஒருவராகவே உணரச் செய்துவிடுகிறார் இயக்குனர்.
தந்தைபெரியார் ஒருமுறை நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் : நாம நூறு கூட்டங்கள்ல பேசுறத, ராதா ஒரு நாடகத்துல சொல்லிடுறார். அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் நெருக்கத்தில் வைத்துப் பாராட்டுவதற்குரிய தகுதி இந்தப் படத்திற்கு இருக்கிறது
 

செவ்வாய், 31 மே, 2011

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்க முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். கோவையில் இன்று 29.05.2011 நேரடியாகக் கலந்து கொளள இயலாமைக்கு வருந்துகிறேன்.
 உலகம் முழுவதும் வல்லரசுகளின் இலாபவெறி இயற்கை வளங்களை, காடுகளை, நீர்நிலைகளை அழித்து சின்னாவின்னப்படுத்தி வருகின்றன. நிலமும், நீரும், காற்றும் மாசுபட்டு உயிரினங்கள், இயற்கை ஜீவாதாரங்கள் உயிர் வாழ்வதற்கே கேள்விக்குறியாகி உள்ளது. கழிவுகளின் புகழிடமாக ஆறுகள் மாறி மக்களின், ஏனைய ஜீவராசிகளின் பயன்பாட்டுக்கு உதவாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கழிவுகளின் குப்பைமேடுகளாகவும், இரசாயனங்களின் பாதிப்புக்கும் ஆளாகி விளைநிலங்கள் கெட்டுப் போயுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைக் கழிவுகள் வான் மண்டலத்தை நாசமாக்கி நேற்று ஓசோன் படலத்தில் ஓட்டை எனத் தொடங்கி இன்று சூரிய வெப்பக் காற்று வீசுவது வரை என பூமி சூட்டால் தகிக்கக் கூடியதாக மாறியுள்ளது. புல், பூண்டு, தாவரங்களின், உயிரினங்களின் இருத்தலுக்கே சவால் விடுமளவிற்கு சூழ்நிலை மாற்றம் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இயற்கையின் சமநிலையில் (Eco system) ஏற்படும் மாற்றம் பருவநிலை மாற்றங்களை, மழையற்ற அல்லது அதிக மழை எனும் மாற்றத்தை, அளவுக்கு மீறிய வெப்பத்தை என தாறுமாறாகி உள்ளது. உயிர்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றம் காடுகளில் வாழ வேண்டிய மிருகங்கள் உணவு தேடி ஊர்களுக்கு வரவேண்டிய நெருக்கடியும், அழியக்கூடாத நுண்ணுயிர்களின் அழிவும் அழிக்கப்பட வேண்டிய நுண்ணுயிர்களின் அளவுக்கு மீறிய வளர்ச்சியும் நோய்களைப் பரப்பும் சூழலை உருவாக்கி மருந்துகளை இரசாயனங்களைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு உலகத்தைத் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடியை பொதுவாக மனிதர்களின் ஆசையே காரணம். ஆசையற்ற மனிதனாக வாழ போதனைகளைப் பரப்பி அமைதியான ஆன்மீக மனிதனை உருவாக்குவதே தீர்வு என முன்வைக்கப்படுகிறது.
 இயற்கையின் சமநிலை பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் இயக்கங்களின் தேவை இன்று முக்கியமானதாக உள்ளது. உலகைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக காடுகளும், நீர்நிலைகளும், மண்ணுக்கு கீழுள்ள, மேலுள்ள கனிவளங்களும் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதன் விளைவு இயற்கை நெருக்கடி, வெப்பமயமாக்கம், மழையின்மை உருவாக்கப்பட்டுள்ளன. சூழலைக் காக்க வேண்டுமானால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எதிரான மக்கள் இயக்கம் அவசியமாகும். ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடிகள் சூழலைப் பாதுகாக்க முயற்சிப்பவர்களாக நாடகம் போடும் சூழல் உருவாகி உள்ளது.
 கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாப வெறிக்கான செயல்களை நாட்டின் வளர்ச்சியின் பெயரால் திட்டங்கள் தீட்டி அதற்காக சொகுசான வாழ்க்கை, வாரிசுகளுக்கு சொத்து, சல்லாபம் என வாழ்வதற்கு மாபெரும் ஊழல்களைச செய்வது என்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும். மேல்மட்டத்தில் இவர்களால் உருவாக்கப்படும் ஊழல் சாம்ராஜ்யங்களின் விளைவு கீழ்மட்டம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது.
 மக்கள் நலனுக்காக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டி நாம் இயக்கம் தொடங்கினால் கார்ப்பரேட் முதலாளியச் சுரண்டலுக்கு எதிராகவும், இவர்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராகவும் இயல்பாகக் கொண்டு போய் நம்மை நிறுத்தும். தொடருவோம். இணைவோம். இணைப்போம். காப்போம். நன்றி
             --மீ. த.பாண்டியன்.மாநிலச்செயலாளர், இ.க.க.(மா-லெ)  மக்கள் விடுதலை