செவ்வாய், 31 மே, 2011

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்க முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். கோவையில் இன்று 29.05.2011 நேரடியாகக் கலந்து கொளள இயலாமைக்கு வருந்துகிறேன்.
 உலகம் முழுவதும் வல்லரசுகளின் இலாபவெறி இயற்கை வளங்களை, காடுகளை, நீர்நிலைகளை அழித்து சின்னாவின்னப்படுத்தி வருகின்றன. நிலமும், நீரும், காற்றும் மாசுபட்டு உயிரினங்கள், இயற்கை ஜீவாதாரங்கள் உயிர் வாழ்வதற்கே கேள்விக்குறியாகி உள்ளது. கழிவுகளின் புகழிடமாக ஆறுகள் மாறி மக்களின், ஏனைய ஜீவராசிகளின் பயன்பாட்டுக்கு உதவாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கழிவுகளின் குப்பைமேடுகளாகவும், இரசாயனங்களின் பாதிப்புக்கும் ஆளாகி விளைநிலங்கள் கெட்டுப் போயுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைக் கழிவுகள் வான் மண்டலத்தை நாசமாக்கி நேற்று ஓசோன் படலத்தில் ஓட்டை எனத் தொடங்கி இன்று சூரிய வெப்பக் காற்று வீசுவது வரை என பூமி சூட்டால் தகிக்கக் கூடியதாக மாறியுள்ளது. புல், பூண்டு, தாவரங்களின், உயிரினங்களின் இருத்தலுக்கே சவால் விடுமளவிற்கு சூழ்நிலை மாற்றம் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இயற்கையின் சமநிலையில் (Eco system) ஏற்படும் மாற்றம் பருவநிலை மாற்றங்களை, மழையற்ற அல்லது அதிக மழை எனும் மாற்றத்தை, அளவுக்கு மீறிய வெப்பத்தை என தாறுமாறாகி உள்ளது. உயிர்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றம் காடுகளில் வாழ வேண்டிய மிருகங்கள் உணவு தேடி ஊர்களுக்கு வரவேண்டிய நெருக்கடியும், அழியக்கூடாத நுண்ணுயிர்களின் அழிவும் அழிக்கப்பட வேண்டிய நுண்ணுயிர்களின் அளவுக்கு மீறிய வளர்ச்சியும் நோய்களைப் பரப்பும் சூழலை உருவாக்கி மருந்துகளை இரசாயனங்களைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு உலகத்தைத் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடியை பொதுவாக மனிதர்களின் ஆசையே காரணம். ஆசையற்ற மனிதனாக வாழ போதனைகளைப் பரப்பி அமைதியான ஆன்மீக மனிதனை உருவாக்குவதே தீர்வு என முன்வைக்கப்படுகிறது.
 இயற்கையின் சமநிலை பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் இயக்கங்களின் தேவை இன்று முக்கியமானதாக உள்ளது. உலகைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக காடுகளும், நீர்நிலைகளும், மண்ணுக்கு கீழுள்ள, மேலுள்ள கனிவளங்களும் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதன் விளைவு இயற்கை நெருக்கடி, வெப்பமயமாக்கம், மழையின்மை உருவாக்கப்பட்டுள்ளன. சூழலைக் காக்க வேண்டுமானால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எதிரான மக்கள் இயக்கம் அவசியமாகும். ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடிகள் சூழலைப் பாதுகாக்க முயற்சிப்பவர்களாக நாடகம் போடும் சூழல் உருவாகி உள்ளது.
 கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாப வெறிக்கான செயல்களை நாட்டின் வளர்ச்சியின் பெயரால் திட்டங்கள் தீட்டி அதற்காக சொகுசான வாழ்க்கை, வாரிசுகளுக்கு சொத்து, சல்லாபம் என வாழ்வதற்கு மாபெரும் ஊழல்களைச செய்வது என்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும். மேல்மட்டத்தில் இவர்களால் உருவாக்கப்படும் ஊழல் சாம்ராஜ்யங்களின் விளைவு கீழ்மட்டம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது.
 மக்கள் நலனுக்காக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டி நாம் இயக்கம் தொடங்கினால் கார்ப்பரேட் முதலாளியச் சுரண்டலுக்கு எதிராகவும், இவர்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராகவும் இயல்பாகக் கொண்டு போய் நம்மை நிறுத்தும். தொடருவோம். இணைவோம். இணைப்போம். காப்போம். நன்றி
             --மீ. த.பாண்டியன்.மாநிலச்செயலாளர், இ.க.க.(மா-லெ)  மக்கள் விடுதலை

மாவீரன் பகத்சிங்


ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் எங்களோடு
தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை.                                                    மாவீரன்  பகத்சிங்

பாதல் சர்கார் - பண்பாட்டு நெறியாளர்

பொன்.சந்திரன் வெள்ளி, 20 மே 2011 15:37
 15.05.2011 அன்று இரவு 9 மணிக்கு மதுரை சுந்தர் காளி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதல்தா இறந்துவிட்டார். சற்று முன் நண்பர் லோகு அமெரிக்காவிலிருந்து இந்த தகவலை தந்தார் என்றார். என்னால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் யார் இறந்தது என்று கேட்டேன். நம்ம பாதல் சர்கார் இறந்துவிட்டார் என்று உறுதிபடுத்தினார். 
அதிர்ச்சியாக இருந்தது. பாதல் சர்க்காரை மிகவும் நெருக்கமானவர்கள் பாதல்தா வங்காளியில் அண்ணன் பாதல் என்றுதான் அழைப்பார்கள். ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மதுரைக்கு சென்றிருந்த நான் அன்று மதியம் சுந்தர் காளியை சந்தித்தபோது பாதல் சர்கார் பற்றியும் பாதல் சர்காரிடம் பயின்ற என் போன்றோர் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் பற்றியும் விரிவாக பேசிக் கொண்டிருந்தோம். 
நாம் பேசிக்கொண்டிருக்கும்போது பாதல் சர்கார் இறந்த செய்தி அப்போது எங்களுக்கு தெரியாது. 
ஆம், பாதல் சர்காரிடம் நாடகக் கலையை ஓரளவு கற்ற நூற்றுக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அவர் நினைவாக சிலவற்றை பதிவு செய்வதும் தமிழ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என நினைக்கிறேன். 
பாதல் சர்க்கார் முதல் முறையாக பெங்களுரில் நாடகப் பட்டறை நடத்தியபோது பெங்களுரிலேயே இருந்தும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு பத்து நாள் பட்டறை நடத்துகிறார் என்று அறிந்தவுடன் அப்பட்டறையில் கலந்துகொள்ள பேரார்வத்துடன் நானும் என் சகோதரரும், தோழருமான பொன்.பரமேசுவரனுடன் கலந்துகொள்ள வாய்ப்பு கேட்டு பட்டறை நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாமல்லபுரத்திற்கு அருகாமையில் இருந்த ஓவியர் கிராமத்திற்கு பட்டறை தொடங்க இருந்த அன்று காலை சென்றடைந்தோம். 
பட்டறைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் கடைசி நேரத்தில் முன் வைக்கப்பட்ட எங்கள் கோரிக்கையை பட்டறை ஏற்பாட்டாளர்கள் தயக்கத்துடன் பாதல் சர்கார் முன் வைத்தனர். 
அவருடைய நாடகப் பட்டறைகளில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையில் அவர் எப்போதும் கறாராக இருப்பாராம். காரணம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பங்கு பெறுவோர் இருந்தால் பட்டறையின் பயன் யாருக்கும் கிடைக்காமல் போய்விடும் என்றும் எண்ணிக்கை கூடும்போது தன்னுடைய கவனத்தை எல்லோருக்கும் போதுமான அளவுக்கு செலுத்த இயலாது என்ற காரணத்தாலும் அவர் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் கறாராக இருந்தார். 
அதன் அடிப்படை என்ன என்பதை பட்டறையின்போது நாம் நன்கு உணர முடிந்தது. 
இருப்பினும் நாங்கள் பெங்களுரிலிருந்து சென்றிருந்த காரணத்தாலும், பங்கு பெற வேண்டிய வேறு இருவர் குறித்த நேரத்தில் வராத காரணத்தாலும் எங்களுக்கு பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சிக் களிப்பில் மூழ்கினோம். 
அதுவரை பெங்களூர் வட்டத்தில் கலைப் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு அந்த பட்டறையில் கலந்து கொண்ட பலரையும் அதற்கு முன்பு அறிமுகம் இல்லை. கடற்கரையில் இருந்த அந்த பத்து நாட்களை நாடகப் பட்டறையில் பங்கு கொண்ட தோழர் சாமிநாதன் அவர்கள் மனதில் பதிந்த காலடிச் சுவடுகள் என்று அந்த பட்டறை விளையாட்டுகளையும் - ஆம், பாதல் சர்காரின் நாடகப் பாணியை விளையாட்டாகத்தான் கற்றுக்கொண்டோம் - அனுபவங்களையும் அருமையாகத் தொகுத்து வெளியிட்டார். 
பகலெல்லாம் பட்டறை, இரவு உணவிற்கு முன்போ பின்போ கலந்துரையாடல்கள் என பத்து நாட்களையும் மிக நன்றாகக் கழித்தோம். அந்த பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத்தான் இன்று நினைவு கூறமுடிகிறது. அவர்களில் சிலர் பின்னாளில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும், நாடக இயக்குனர்களாகவும், படைப்பாளிகளாகவும் உருப்பெற்ற பேரா. மூ.இராமசாமி, பிரபஞ்ஞன், பூமணி, பரிக்ஷா ஞாநி, புதுவை குணசேகரன்,ஆங்கிலப் பேராசிரியர் ஆல்பர்ட், வெளி ரங்கராஜன், விமலாதித்த மாமல்லன், அம்ஷன்குமார், முத்துராமலிங்கம், பின்னாளில் தில்லி நாடகப் பள்ளிப் பேராசிரியான இராஜேந்திரன் ஆகியோர் அடங்குவர். 
பாதல் சர்காரிடம் நேரடியாக பயிலவில்லை என்றாலும் அவருடைய பாணியை ஏற்று பயின்ற நாடக ஆர்வலர்கள் ஏராளம். 
கருநாடகத்தைச் சார்ந்த சமுதாயா என்னும் நாடக இயக்கத்தால் படைக்கப்பட்டு - சமுதாயாவைச் சார்ந்த பொருளியல் பேராசிரியர் கிருஷ்ணசாமி அவர்களால் எழுதி இயக்கப்பட்ட- பெல்ச்சி என்னும் கன்னட நாடகத்தை பெங்களுர் வாழ் தமிழர்களிடம் 1973 முதல் கலைப் பணியில் ஈடுப்பட்டிருந்த மக்கள் சமூகப் பண்பாட்டுக் கழகம், தமிழில் படைத்து 1977ம் ஆண்டு முதல் 1981 வரை 400 நிகழ்ச்சிகளுக்கு மேல் கருநாடகம், கேரளம், மற்றும் தமிழ் நாட்டில் நிகழ்த்தியது என்றால் நம்பும்படியாக இருக்காது. 
பெல்ச்சி நாடகத்தை கன்னடத்திலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்தது மட்டுமின்றி அதனை தமிழ் சூழலுக்கு ஏற்ப செழுமைப் படுத்திய சிறப்பு நண்பரும் எங்கள் நாடக ஆசானுமான தோழர் தி.சு.சதாசிவம் அவர்களைச் சாரும். 
சென்னையைச் சேர்ந்த மக்கள் மறுமலர்ச்சி மன்றம் என்னும் பெயரில் கலை இலைக்கிய பணியை மேற்கொண்டு வந்த அமைப்பு பெல்ச்சி நாடகத்தை பலமுறை நிகழ்த்தியதின் விளைவாக அதை முன்னின்று நடத்திய தோழர் பரமேசுவரன் பெல்ச்சி பரமேசுவரனாக அறியப்பட்டார்! 
பெல்ச்சி ஒரு நாடகமாக அல்லாமல் ஒரு இயக்கமாகவே விரிந்தது எனலாம். பெல்ச்சி என்பது தமிழ் நாட்டின் கீழ் வெண்மணி போல் பீஹாரில் 1977 இல் பெல்ச்சி என்னும் கிராமத்தில் 14 தலித் மக்களை - அதேபோல் அதற்குப் பிறகு 1980 இல் பிப்ரா என்னும் கிராமத்தில் 14 தலித் மக்களையும் - மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்களையொட்டி புனையப்பட்ட அரசியல் விமர்சன நாடகமாகும். 
அவசரசட்ட காலகட்டத்தை தொடர்ந்து நடந்தேறிய அரசியல் மாற்றங்களை கதைக்களமாகக் கொண்டு ஆடல், பாடல், இசை என் பல்சுவைகளோடு, பார்வையாளர்களின் பங்கேற்போடு மிகச் சிறந்த காவியமாகக் விளங்கிய வீதி நாடகக் கலைப் படைப்பாகும். 
முழுமையான இந்த கலைப் படைப்பு ஏறக்குறைய தமிழில் 1977 முதல் 1981 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிகழ்த்தப்பட்டது. இதைப் போல் தமிழகம் மட்டுமின்றி கருநாடகத்திலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் பாதல் சர்காரின் நாடகப் பாணியில் ஈர்க்கப்பட்டு சமூக மாற்ற சிந்தனையோடு கலைப் பணியை மேற்கொண்ட கலை இயக்கங்கள் ஏராளம். 
1983-84 இல் வங்கி வேலை நிமித்தமாக கல்கத்தாவில் இருந்தபோது பாதல் சர்காரின் அங்கன் மன்ச்சு(முற்றம்) என்னும் நாடக அமைப்பு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நடத்திய நாடகங்களில் பலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பின்னணியில் சில ஆண்டுகளாக நாடக இயக்கத்தில் ஈடுபட்ட பட்டறிவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, சமூக மாற்ற இயக்கத்தில் கலைப் பணியின் பங்கு பற்றி நாம் வளர்த்து கொண்ட அணுகுமுறையைப் பற்றி இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். 
பாதல் சர்கார் 50க்கும் மேலான நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் என்பதை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய நாடகப் பாணி ஆயிரக் கணக்கான சமூகச் செயல்வீரர்களை நாடக இயக்கத்திற்கு ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை. 
பாதல் சர்கார் நாடக அரங்குகளை மூன்றாக வகைப்படுத்துவார். நாட்டுப்புற அரங்கை முதல் நாடக அரங்கு என்றும், நவீன நாடகப்பாணியான மேடை நாடகங்களை இரண்டாம் அரங்கம் என்றும் நவீன நோக்கோடு நாட்டுப்புறவியல் அணுகுமுறையுடன் இயங்கும் வீதி-தெரு நாடக அரங்கை மூன்றாம் அரங்கம் என்றும் அவர் விளக்குவார். 
மூன்றாம் அரங்கம் என்று அறிவிக்கப்பட்ட அவருடைய நாடகப் பாணியை அவர் சில சந்தர்ப்பங்களில் கெரில்லா அரங்கு என்றும் உணர்வு அரங்கு என்றும் குறிப்பிட்டதை கேட்டிருக்கிறேன். கெரில்லா அரங்கு என்பது கெரில்லா குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான நாடகப் பாணி என்ற அர்த்தத்தில் அல்ல. பெரிய முன்னேற்பாடுகள் இன்றி மக்களோடு மக்களாக கரைந்து நிகழ்த்துவதற்கான கலை நிகழ்ச்சி என்ற முறையில் அதனை கெரில்லா அரங்கு என்று கூறுவார். 
அதே போல் பலரும் சமூக நடப்புகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் வெகுசிலர் தான் அதனுடைய சாரத்தை உணர்ந்திருக்கிறார்கள். செய்ல்பாட்டிற்கு அறிவோடு உணர்வும் கலத்தல் வேண்டும் என்பதால் அவருடைய நாடகப் பாணியை உணர்வு அரங்கு என்று வர்ணித்தார். 
மேலும் மாற்றுக் கலைப் பணியின் நோக்கம் சமத்துவ மனோபாவத்தையும் அதற்கான விழுமியங்களையும் வளர்த்தெடுப்பதுதான் என சளைகாமல் வாதாடுவார். இதனை விளக்குவதற்கு அவர் பட்டறையில் கூறிய சுவாரசியமான சம்பவத்தை நினைவுகூறுகிறேன். 
அவருடைய ஒரு நாடகத்தில் - நாடகத்தின் பெயர் சரியாக நினைவில்லை, முப்பதாம் நூற்றாண்டு என நினைக்கிறேன் - அந்நாடகத்தின் கதையின் கரு இதுதான்: இருவர் வர்க்க பேதமுள்ள சமூகத்திலிருந்து தற்செயலாக வர்க்க பேதமற்ற சமூகத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள். இது புனைவு. வர்க்க பேதமற்ற சமூகத்தில் நாடகக் காட்சிகள் விரிந்து வளர்கின்றன. அச்சமூகத்தில் பணம் இல்லை. திருடர்கள் இல்லை. சிறை இல்லை. போலீஸ் இல்லை. சொத்து இல்லை. சுரண்டல் இல்லை. சாதி இல்லை. மதமில்லைல. மார்க்சின் மூல தனம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது! எங்கும் சுதந்திரம். எதிலும் சுதந்திரம் என காட்சிகள் அனைத்தும் சுவாரசியமாக நீள்கின்றன. இந்நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர்களிடம் இயல்பாக இப்படிப்பட்ட சமூகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்படிப்பட்ட சமூகம் வராதா? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளையும் எண்ணங்களையும் வேட்கைகளையும் எழுப்புவதாக அமையும். 
இந்நாடகத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்ததாம். ஆனால் அவ்வமையம் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் இந்நாடகத்தை எள்ளி நகையாடினார்களாம். காரணம், இப்போதைய தேவை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். அதற்கான நாடகங்களைத்தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கனவுகளையும் கற்பனைகளையும் அல்ல என்று வாதிட்டார்களாம். 
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது வர்க்க-சாதி பேதங்களற்ற சமூகத்தை காண்பதற்க்காகத்தான் என்பது உண்மையானால் ஏன் இந்நாடகத்தை எள்ளி நகையாட வேண்டும்? அப்படியானால் இவர்களுடைய நோக்கம்தான் என்ன என்று வினவி அந்நாடகத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் தொடர்ந்து நடத்தினேன் என்று பாதல் சர்கார் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 
கலைப் பணியின் இலக்கு ஆட்சி அதிகாரத்தை கடந்தது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கானப் பணி அரசியல் பணியாகும். அதற்கு கலை வடிவங்கள் பயன்படலாம். கலை வடிவங்கள் பயன்படுத்தப் படுவதால் அவை கலைப் பணியாகமாட்டா. ஆனால் மக்களின் ஆட்சி அமைய தோதான மனோபாவத்தை, உளப்பாங்கை, அதற்கான விழுமியங்களை மக்களிடையே வளர்த்தெடுப்பதும் வார்த்தெடுப்பதும் தான் கலைப் பணியின் இலக்கும் நெறியுமாகும். இதனை மேற்கொள்ள கலைப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடும் கூட்டுமுயற்சியும், தேர்ந்த புலமையும் இன்றியமையாதது. 
எல்லா சமூக அநீதிகளும் சுரண்டல்களும் கொடுமைகளும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்வதற்கும் தக்க வைத்துக் கொள்வதற்கும் துணைப்போகும் கலை இலக்கிய நிறுவனங்கள், இயக்கங்கள் இவ்வாறுதான் செயல் படுகின்றன. அப்படியானால் சமூகம் அடியோடு மாற்றப் பட வேண்டும் என விரும்பும் ஆற்றல்களின் கலைப் பயணத்தின் தடங்கள் எளிதானவையல்ல. அவை சில நிகழ்ச்சிகளாகவோ, முழக்கங்களாகவோ அல்லாமல் மாபெரும் இயக்கமாக அமைய வேண்டியதன் தேவையை இது உணர்த்துகிறது. 
கலை ஓர் அனுபவமாக மலரவேண்டும். சமத்துவ-சுதந்திர விழுமியங்களை தன்வயமாக்கும் பயணமாக அமையவேண்டும். ஆக, கலைப் பணி என்பதே ஆழ்ந்த தத்துவார்த்த யுத்தத்தை, அறவியல் போராட்டத்தை நடத்துவதற்கான களமாக அமைய வேண்டும். அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து இயங்கும் பண்பாட்டுப் புரட்சியாகும். இத்தகைய பண்பாட்டு புரட்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவரான பாதல் சர்காரின் இழப்பு ஈடுகட்ட இயலாததுதான். 
அவருடைய மாணாக்கர்களான நாம் என்ன செய்ய போகிறோம்? நம் வழி அவர் மீண்டும் உயிர்த்தெழுவாரா?

ரஃபேல் வெள்ளி, 27 மே 2011 09:16
அண்மையில் பாதல் சர்க்காரின் மறைவை ஒரு முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட செய்தியினூடாகத்தான் தெரிந்துகொண்டேன். இது அவரின் இறப்பு ஒன்றும் அதிர்ச்சியான செய்தியல்ல. ஆனால் மனதை நெருடும் செய்தி. இழப்பு - இந்திய, தமிழ் நாடகச் சமூகத்துக்கு. மறைந்து போனது பாதல் சர்க்கார் என்னும் ஆளுடல்தான். ஆளுமையல்ல. 
மிகவும் அரிதான ஆளுமைகளை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது பேறு. அது பல நேரங்களில் கிட்டியிருக்கிறது. அவர்களே ஆசானாகவும் கிடைப்பது அதனிலும் பேறு. பாதல் சர்க்கார் எனக்கும்கூட ஆசான். அவருடன் இருந்து கலந்துகொண்ட இரு பட்டறைகள் மூலமாகச் சந்திக்க முடிந்தது. இது கையகப்படுத்தும் செய்தியல்ல, பட்டறிவின் பகிர்தல். 
பாதல் உண்மையில் நாடகத்தை மட்டும் கற்பிக்கவில்லை. கற்பிப்பதில்லை. ஏறக்குறைய வாழும்முறையையும் உலகை மற்றிப்பார்க்கவும் மாற்றப்பார்க்கவும் சிந்திக்கத் தூண்டுவதாகவுமே அவரது நாடகப்பயிற்சிகள் இருக்கும்.  
 
வெளி ரங்கராஜனாகவும் பிரபஞ்சனாகவும் அருட் தந்தை பிரிட்டோவாகவும் ராமசாமியாகவும் அ.மங்கையாகவும் லண்டனில் வசிக்கும் எனது நண்பர் பிரின்ஸ் சார்ள்ஸ் ஆகவும் பரீக்சா ஞானியாகவும் அருட்சகோதரி கிளார் ஆகவும், பேராசிரியர் ஆல்பர்ட்டாகவும் என எத்தனையோ பல சமூகப்பணி சார்ந்தவர்களாகவும் நாடகக் கலைஞர்களாகவும் பாதல் சர்க்கார்  ஆளுமை உயிர் வாழ்கிறது. இங்கு பெயர் குறிப்பிடாத பெருந் தொகையான பலர் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வனுபவத்தின் குறிப்பிடத்தகுந்த ஓர் மாற்றத்தை நிகழ்த்தும் புள்ளியை பாதலின் நாடகப்பட்டறை செய்திருக்கும்.  
90
களின் தொடக்கத்தில் மதுரையில் நடத்தப்பட்ட பட்டறையின் இறுதி நாள்; பயிற்சியின் போது நடந்த ஓர் நேர்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் ஏதாவது ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதனுடன் உறவாடும்படி சொன்னார் பாதல். ஆளாளுக்கு ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டோம். எடுத்துவைத்திருந்த பொருளை தடவிப்பார்த்தோம். உருவத்தை உணர்ந்து பார்த்தோம். அதன் சுமையைப் பார்த்தோம். பின்னணியில் பாதல் இவற்றைப்போன்று அந்தப் பொருளுடன் நாம் உறவை ஈடுபடுத்தக்கூடிய தூண்டுதல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அரைமணிநேரம் இருக்கலாம். இந்த உறவாடல் நிகழ்ச்சியின் இறுதியாக, அனைவரையும் அவரவர்களின் உறவுப் பொருட்களைத் திருப்பி வைக்கச் சொன்னார். சிலர் உடனேயே வைத்தாயிற்று. சிலர் மெதுவாக ஆசுவாசப்படுத்தி வைத்தார்கள். இரண்டு மூன்றுபேர் வைக்கவில்லை. இறுதியில் அவற்றைப் பிரிந்துகொள்ள முடியாமல் இருவர் கதறி அழத்தொடங்கிவிட்டார்கள். பொருட்களைப் பிரித்து வைத்து அவர்களை ஆசுவாசப்படுத்த தனியே, வெளியே கொண்டுபோகவேண்டியதாயிற்று.  
ரசிய நாடகக்காரரான ஸ்ரனிஸ்லாவ்ஸ்கி(Konstantin Stanislavsky)இனுடைய நாடக அணுகுமுறையில் பாத்திரத்தில் நுழைதல் அல்லது அடையாளப்படுத்துதல் (identifying/being with the character) என்று ஒரு நுட்பம் கூறப்பட்டிருக்கும்.  பின்னாளில் ஜெர்மனிய நாடக ஆசிரியர் பெர்டோல்ட் பிரக்ற் (Bertolt Brecht) அதை மாற்றியமக்க விளையும் தன்மையை வலியுறுத்தினார். பிரெக்ட் நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர் அந்நியமாகிச் சிந்திக்க வழிவகுக்கும் தூண்டுதலை ஏற்படுத்த வலியுறுத்தினார். ஸ்ரனிஸ்லாவ்ஸ்கியின் நாடகப் பயிற்சி முறையே இன்றளவும் சிறந்த நடிகர்களை உருவாக்கியுள்ளது. ஆயினும் பாதலைப் பொறுத்தவரை இரண்டு தன்மைகளையும் - ஏன் வேறு பல அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளைக் கொடுப்பார். அதன் நோக்கம் நடிக்கப் பழகுவோருக்கும் நாடகம் செய்யப் பழகுவோருக்கும் நாடகம் பற்றிய நிகழ்த்துதல் பற்றிய புரிதல் தெளிவடைய வேண்டும் என்பதுதான்.  
முதன்முதலில் மனதில் பதிந்த காலடிச்சுவடுகள் வழியாகவேஎனக்கு பாதலைத் தெரிந்ததது. அதைப் படித்ததும் பொறாமையாக இருந்தது. ஊரில் இருந்தே பல நாடக நிகழ்வுகளில் பலவழிகளிலும் ஈடுபட்டுவிட்டு தமிழகத்தில் வந்து ஒருவரையும் தெரியாமல் நூலகமே எனது கதி என்று பாளையங்கோட்டை மாவட்ட மத்திய நூலகத்தைக் குடைந்து கொண்டிருந்த காலம் அது. மனதில் பதிந்த காலடிச்சுவடுகளை குறைந்தது மூன்று முறையாவது வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அவருடைய நாடகங்களின் தொகுப்புகள் ஒன்று ஆங்கிலத்தில் வந்ததையும் எடுத்து வாசித்திருக்கிறேன்.  
பொறாமையாகிக் கனவாகிப்போன, கவனவான பாதல் எனக்கு நிசத்தில் முன்னால் வந்து நிற்கும் வாய்ப்பு ஒன்றல்ல இரண்டு தரம் கிடைத்தது.  சென்னை  லயோலா கல்லுரியின் பண்பாட்டு தொடர்பாடல் மையத்தில் பணிபுரியும் நாட்களில் ஏற்பட்ட வட்டம், தமிழக கத்தோலிக்க சமூக சேவைப்பிரிவினர், மற்றும் icuf மையத்தினர் எனப் பல வழிகளில் இது எனக்கு சாத்தியமாகியது.  
 
எளிமை. எளிமையை நோக்கி நாடகத்தை நகர்த்துவதே பாதலின் பணியும் பாணியும். நாடகத்தில் தொடக்கத்திலிருந்து தனது தேடலுக்கூடாக வந்தவர் பிறகொரு இந்ததிரஜித் செய்யப் புறப்படுகையில் அது செலவிற்கும் அரங்கிற்கும் மாநடிகர்களிற்கும் எனப் பிறரில் நாடகம் தங்கி இருப்பதை மாற்ற எடுத்த முதல் அடி எனலாம். கொல்கொத்தாவின் பூங்காக்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நாடகம். மேடையிலிருந்து நாடகத்தைக் காப்பாற்றி மக்களின் நடுவில் கொண்டு வந்து நிறுத்தியது. இதைப்போலப் பலரும் ஒருவகையில் உலகின் பல பாகங்களிலும் தங்கள் தங்கள் அளவுகளில் நாடகங்களில் செய்து பார்த்த முயற்சிதான். நாட்டார் கலைவடிவங்கள் (உண்மையான) பலவும்  இவ்வாறு பிறவற்றைச் சாராமல் இயங்குபவைதான்.  
ஆயினும் இந்தியாவில் நவீன காலத்தின் நாடகங்களை கொண்டு வந்து இந்த இடத்தில் வைத்தவர்களில் பாதல் பங்கு பெருமளவானது. மேலே சுட்டியிருக்கும் ஆளுமைகளின் பெயர்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் இடதுசாரி, வலதுசாரி, நடுச்சாரி என அனைத்து சாரியினரதும் சமூகச் செயற்பாட்டு நாடக வடிவங்களுக்கு பாதலின் பாணி கைகொடுத்திருப்பது புலப்படும். 
ஆனாலும் மீண்டும் மீண்டும் வண்ண ஆடைகளையும் விளக்குகளையும பெரும் அரங்குகளைளையும் பெருமெடுப்பிலான அசசிடல் ஊகங்களையும் சார்ந்தே தங்கள் நாடகங்களை பலரும் சிந்திக்கிறார்கள்.  
சில நேரங்களின் வரலாற்றில் முன்னுக்குபின்னாக சரியான திசையில் போவதை திசைதிருப்பும் வகையில் நிகழ்வுகள் அமைவதுண்டு. அதைப்போலவே பாதல் தமிழகத்தில் இட்டுச் சென்ற பல ஆண்டுகள் தொடர்ந்த, பல பயிற்சிப் பட்டறைகளின் பின் டெல்லி நாடகப் பள்ளியினர் தமிழ்நாட்டில் பட்டறைகளை நடத்தினர். கவலைக்குரிய வகையில் இவர்களின் நாடக பாணி மேடையில் உட்கார்ந்திருந்தே சிந்தித்தது. அதன் விளைவுகள்தான் பின்னர் இன்று ஓர் அலையாக ஓடிக்கொண்ருப்பதைப் பார்க்கமுடிகிறது என நினைக்கிறேன். இதற்கிடையில் அல்லது இந்த காலகட்டம் மருவிக்கொண்டு போகையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் பலவும் கிளைவிட்டு பட்டிதொட்டியெங்கும் சென்றவுடன் நாடகத்தின் மாற்றுத் தேவை குறைந்துவிட்டதையும் பார்க்கமுடிகின்றது. ஆனால் இன்றும் எளிமையாகவும் நுட்பமாகவும் கையில் எடுத்துக் கொடுக்கும் உணவுத்துண்டைப்போல நாடகத்தினால் மட்டும்தான் மக்களிடம் எதையும் கொடுக்கமுடியும் - அந்தளவில் சிறந்த மாற்றூடகமாக இன்னும் நாடகம் இருக்கிறதுதான்.  
அரங்குகள் மண்டபங்களில்தான் நாடகம் நடத்தலாம் என்பதும் ஒரு பாணியேயானாலும் நாடகம் கார்ப்பொரேட் வலைப்பின்னலில் இருந்து மீழ்வதற்குப் பதிலாக அதிலே மாள்கிறதைப் பார்க்கமுடிவது பாதல் மறைவையொட்டி நினைத்து வருந்ததத் தக்கதே. எளிமையிலிருந்து விலகிப்போய் கனவுலகில் நிகழும் நாடகம்- இந்த நாடகம் பாதல் தவிர்க்க நினைத்த வகை. 
பாதல் எதிர்கொண்டு மாற்ற நினைத்தது ஏற்கெனவே சிறப்பாயிருந்த இந்திய நாடக மரபை. சிதிலமாக இருந்ததையல்ல. அதனால் அவர் ஆனது ஆக்கினார். முன் சென்னதுபோலவே தமிழகத்தில் பல  நாடக இயக்கங்களிலும் நாடகமால்லாத துறைகளிலும் பாதலின் இருப்பு வாழ்கிறது.