புதன், 20 ஜூலை, 2011

ஈழ எதிர்ப்பு - ஆதவன் தீட்சண்யாவின் ஆளும் வர்க்கச்சேவை - மீ.த.பாண்டியன்

 புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எனும் பெயரில் எழுதப்பட்ட         ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பில், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பில் சிறுகதைகள் எனும் வகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
     கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. ‘‘இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்’’ எனத் தொடங்கும் கதை, ‘‘விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்’’ மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பித் தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார். இறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக ‘‘நாடும், மசிரும்’’ என முடிக்கிறார். 
   ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, ‘‘இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்” என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் ‘‘இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை” எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழ ஆதரவாளர்கள் அதிகமாக தங்களது செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.
     இரண்டு கதைகளுமே (Political satire) அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிறுத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’ (RAW) ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது. 1987 க்கு முன், 1987 க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ (RAW) உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின், இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த  சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட  சர்வதேச சக்திகளின் பாத்திரம். இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட  கட்சிகளும்--, தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிறுத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிறுத்துகிறது.
       தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துமளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.
 ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ யாக அடியெடுத்து வைத்துள்ளது. மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.
      தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிறுத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிறுத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?
   தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது.   சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ,  செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?
    தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே. ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கணைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்?  தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெருமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்க! என அறைகூவல் விடுக்கலாம். கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்திக கோவணத்தை உறியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே-- 17 இயக்கம் முன்னெடுக்காமல். பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?
     பகடி, கேலி, கிண்டல் - தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் என உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் கலை வடிவங்கள். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல்     ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.
  போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும்,  பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை. எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?
   இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே! எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி,ய வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா? உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்!                                      - நன்றி : கீற்று.காம்.

உலகமயமாக்கச் சூழலில் தாய்மொழி - தமிழ் ---மீ.த.பாண்டியன்.

 உலகம் முழுவதும் பல்வேறு மொழிகள், இனங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அவைகளில் பல இனங்களுக்கு அவர்களது மொழிப் பயன்பாடு வழமையற்று வழக்கொழிந்து போய் விட்டது. மலைவாழ் மக்கள் பேசும் பலமொழிகளுக்கு ஒலி வடிவம் உள்ளதேயொழிய எழுத்து வடிவம் இல்லை. மனித உழைப்பின், உறவாடலின், உரையாடலின் விளைபொருளே மொழி. ஒவ்வொரு மொழியும் வடிவம் பெறுவது, கட்டமைப்பைப் பெறுவதும் அதன் பயன்பாட்டைப் பொறுத்தேயாகும். ஒரு மொழி வாழ்வதும், வளர்வதும் அதைப் பேசும் மனிதர்களுக்கு புதிய, புதிய செய்திகள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், படைப்புகள் அம்மொழியில் உருவாக்கப்படுவதைப் பொறுத்தே உள்ளது.
 நமது தாய்மொழி தமிழ். தமிழ்மொழி மிக தொன்மையான மூத்த மொழி. தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்கள், காவியங்கள் ஏராளமாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் அறியப்பட்ட செம்மொழியாக உள்ளது தமிழ். வடமொழியான சமஸ்கிருதம் நீண்டகாலமாக பரவலாக்கப்பட்டதின் விளைவாக தமிழ் தன்னைத் தற்காத்துக் கொள்ள கடுமையான போராட்டத்தைச் சந்தித்துள்ளது. வடக்கின் அதிகார மொழியாக, சமஸ்கிருதம் தொடுத்த வேதகாலத் தாக்குதல் தன்னைத் தாக்குப்பிடிக்க தமிழும், தமிழர்களும் நீண்ட காலப் போராட்ட வரலாறு கொண்டிருக்கின்றனர். வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் படைக்கப்பட்டுள்ளன.
 வெள்ளைக்கார வியாபாரிகளின் வருகையையொட்டி அதிகாரத்தில் வெள்ளை அரசாங்கம் தனது ஆட்சியை நடத்த ஆங்கிலத்தை பரவலாக்கியது. ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமல்லாமல், ஆங்கிலக் கல்வி முறை பரவலாக இந்தியாவில் ஒரு அடிமை வர்க்கத்தை உருவாக்கியது. வெள்ளை நோக்கிய ஒரு ஈர்ப்பையும், வெள்ளைக்காரர் பேசும் ஆங்கிலத்தை நோக்கி ஓர் மாயையும் உருவாகியது. வடமொழியிலிருந்து தற்காத்துக் கொள்ளப் போராடிய தமிழ், ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ளப் போராடியது. ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் அறிவாளிகளாக, தீர்மானகரமான பாத்திரம் வகிப்பவர்களாக மாறினர். வெள்ளைக்காரர்களுடன் ஒட்டி உறவாடுவது நாகரீகமாகக் கருதப்பட்டது.
 வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் மட்டுமன்றி அவர்களது ஆட்சிப் பரப்பு முழுவதும் பரவலாகத் தொடங்கின. 19 -- ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்கள் இந்தியா முழுவதும் போராட்ட ஒருங்கிணைப்பை உருவாக்கியது. பேரரசுக் கனவை செயலாக்கிய இசுலாமிய மன்னர்களும், ஏனையவர்களும், வெள்ளை அரசின் ஒற்றை ஆட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தன. தனது ஆட்சியை எங்கெங்கு விரிவாக்கினார்களோ அங்கெல்லாம் உருவாகிய அந்நிய எதிர்ப்பு சுதேசி உணர்வை, அதனடிப்படையிலான ஒருங்கிணைப்பை உருவாக்கியது. ஆங்கிலம் கோலோச்சியது. ஆங்கிலத்தை எதிர் கொள்ள, பலமொழி பேசுகிற இனங்களின் ஓர்மையை ஒருங்கிணைக்க இந்து மத அடையாளத்தையும், இந்தியையும் பயன்படுத்த முனைந்தனர். வெள்ளையன் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு பகுதிகளில் ஆட்சி உரிமை பெற்றிருந்த காலக்கட்டத்தில் இந்தியை ஒரே மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்க முயன்றனர். வங்காள மொழியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்கும் முனைப்பும் இருந்தது. ஆனால் அன்றையச் சூழலில் இந்தி முன்னிலைப்படுத்தப்பட்டது.
 மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி 1938 இல் இந்தியை கட்டாயமாகத் திணித்தார். எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. கட்டாய இந்தித் திணிப்புச் சட்டம் பின்வாங்கப்பட்டது. பிறகு 1948 இல் மறுபடியும், 1965 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. மாணவர்களின் கடுமையான போராட்ட எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தி மொழித் திணிப்பு பின்வாங்கப்பட்டது. தமிழகம் ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என இந்திய அரசு வாக்குறுதியளித்தது. தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதற்காக, இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் இந்தியைத் தவிர்த்து, ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதில் போய் முடிந்தது. தமிழ்வழிக் கல்வி இரண்டாம் இடத்திற்கும், இகழ்ச்சிக்குரியதாகவும், ஆங்கிலம் ஈர்ப்பு மையமாகவும் மாறியது. ஆங்கில வழிக் கல்வி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு மட்டுமே இருந்தது மாறி தமிழ்வழிக் கல்வி ஒரு பிரிவுப் பாடமாக தலைகீழாக மாறியது. காலப்போக்கில் ஆங்கில வழி மழலையர் பள்ளிகள், மெட்ரிக் பாடப்பிரிவு, மத்திய அரசு பாடத் திட்டம் எனும் பெயரில் ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி ஆங்கிலம் என்பதே அறிவுக்கு வழி எனும் போக்கு உருவாக்கப்பட்டது.
 தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்திற்கு, சமச்சீர் கல்வி முறைக்கு, தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு, தமிழில் பெயர்ப்பலகை, அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போடுவது போன்றவைகள் அமுலாவதற்கு தமிழகத்திலேயே சட்டம் போடுவது எனும் நிலைதான் தற்போதைய நிலை. திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயரை தலைப்பாக வைத்தால் வரிச்சலுகை, நிதி உதவி, ஆலயங்களில் தமிழிலும் வழிபட உரிமை, தமிழக உயர் நீதிமன்றக் கிளைகளில் தமிழி¢¢ல் வாதாட, தீர்ப்பு எழுத இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   ‘‘ எதிர்காலத் தலைமுறைக்கு தகவல்களைத் தெரிவிக்கும் ஆவணங்களை ஆங்கிலத்தில் எழுதுவது முறையல்ல’’ என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தமிழகத்தில் அறிவித்துள்ளார். இவைகளுக்கெல்லாம் எதிராக தமிழகத்திலேயே நீதிமன்றத்தில் எதிர் வழக்குப் போடும் நிலையில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. 1947 வெள்ளையர் ஆட்சி போன பிறகும், ஆங்கிலத்தை நோக்கிய அடிமை மோகம் நகரம் தொடங்கி கிராமம் வரை ஊடகங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பதில் சொல்ல மட்டுமே உரிமை என்பது கேடான நிலை.
 வேதகால வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக, ஆங்கிலேயர் கால ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக, இந்திய மயமாக்கத்திற்கான இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, போராடிய தமிழ் இன்று ஆங்கிலமயமாக்கத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கம் எனும் தாராளமயச் செயல்பாடுகள் ஆங்கிலத்தை பரவலாக்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணிணிப்    (Computer)  பயன்பாடு ஆங்கில மொழியே பயன்பாட்டுக்குரியது எனும் சூழலை உருவாக்கியுள்ளது. கணிணி வழியாக மின் அணுச் செய்திகள் (Email), வலைப்பூ  (Blogspot), வலைத் தளம் ( Website ) போன்ற உலகு தழுவிய தொலைத் தொடர்புக் கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்தையே முதன்மைப்படுத்தியுள்ளன.                 கைத் தொலைபேசி  (CELL) வளர்ச்சியின் விளைவு குறுந்தகவல் (Message) அனுப்புவது எனும் முறை ஆங்கிலத்திலேயே உள்ளதால் கடந்த காலங்களில் தமிழில் கடிதம் எழுதிய பழக்கம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பண்பு கைவிடப்பட்டு மனிதத் தொடர்புகள் ஆங்கில மொழித் தொடர்புகளாக மாற்றமடைந்துள்ளன. தமிழகத்தில் தமிழின் நிலை அவல நிலையாக உள்ளது.   ‘ மெல்லத் தமிழ் இனிச் சாகும் ’ எனும் நிலை தான் இன்றைய நிலை.
 தமிழகத்தில் வேலை கிடைக்காமல் வெளி மாநிலங்களுக்கு, வெளி நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் கூட்டம் தனது சொந்த மொழியிழந்து தஞ்சமடையும் நாடுகளின், இந்திய மாநிலங்களின் மொழியை எழுதப் படிக்கும் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை உள்ளது.
 மறுபுறம் விஞ்ஞானம் அதே கைத் தொலைபேசியில் தமிழில் பெயர்களை, குறுந்தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்பும் வந்துள்ளது. கணிணியில் தமிழிலேயே பதிவு செய்யும் வாய்ப்பு கொண்ட மென்பொருள் ( Software)  வசதிகள் வந்துள்ளது. ‘ யூனிகோட்’ ( Unicode) எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துக்களிலேயே தட்டச்சு செய்து தமிழில் மாற்றும் முறை வந்துள்ளது. அதாவது தமிழை ஆங்கில வழியில் எழுதுவது, படிப்பது. மென்பொருள், கணிணி ஆய்வாளர்கள், பொறியாளர்கள் தமிழ் தட்டச்சுப் பலகை கண்டு பிடித்துள்ளனர். இவைகள் எல்லாம் பரவலாக்கப்பட வேண்டும் என்றால் அரசின் நிதி உதவி, அதிகாரம் இல்லாமல் சாத்தியமில்லை.
    உலகமயமாக்கச் சூழலில் ஒவ்வொரு இனத்தின் விளைபொருளான அவர்களது தாய்மொழியை மறக்கடிக்கச் செய்யும் போக்கை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதே உலகமயமாக்கச் சூழல் பறிக்கும் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தமிழில் கொண்டு வருவது, வாசிப்பது, பழக்கப்படுத்துவது செய்யப்பட வேண்டும். மொழி, பண்பாடு, கலை, இலக்கிய வளர்ச்சி ‘ தமிழ் மொழி வாழ்க ’ எனும் முழக்கத்தால் மட்டும் வராது. தமிழில் ஏனைய மொழிகளின் இலக்கியங்கள், ஆங்கிலத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் ஏனைய நாடுகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கலை, இலக்கியம்,  தமிழில் கொண்டு வரப்படுவதன் மூலமே சாத்தியப்படும். இல்லையேல் தமிழில் பேசலாம், எழுதப் படிக்கத் தெரியாது எனும் மொரிசியஸ் நாட்டுத் தமிழர்கள் நிலை தான் வந்து சேரும்.தாய் மொழியில் கற்பதன் மூலம் தாய்மொழியைக் காப்போம்.                                                                              .

சனி, 9 ஜூலை, 2011

கா.சிவத்தம்பி மறைவுக்கு அஞ்சலி !


மார்க்சிய ஆய்வாளர் கைலாசபதிக்குப்பின், தொடர்ச்சியாக கா.சிவத்தம்பி அவர்களின் பங்கு மகத்தானது. 06.07.2011 அன்று அவரது மறைவு தமிழ் ஆய்வுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். 1988 சென்னையில் நடந்த வேர்கள் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழகப் பண்பாட்டுச் சூழலில் அவரது ஆய்வுகள் மகத்தானது. தோழர் கோ.கேசவனின் ஆய்வுத் தொடர்ச்சி எப்படி அறுந்து போனதோ அது போல் சிவத்தம்பிக்குப் பிறகான தொடர்ச்சி கேள்விக்குறியே.

சி.பி.ஐ மத்தியக் குழுவிற்குப் பாராட்டுக்கள்

 ஜூலை-8, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு தினத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு இ.க.க ( மா - லெ ) மக்கள் விடுதலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2008 ல் ஈழத் தமிழர் மீதான சிங்கள யுத்தம் தீவிரமானபோது அக் - 2 ல் தமிழகத்தில் சி.பி.ஐ தனது முயற்சி மூலம் தொடங்கி வைத்தது. தற்போது உலகம் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசை போர்க்குற்ற அரசாக விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர்க் குற்றவாளி இராசபக்சே தன்னையும், தனது அரசையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசின் துணையை நாடுகிறான். 2008 - 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை அரசின் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைத் தாக்குதலுக்கு எதிராகத் தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, காங்கிரசின் இந்திய அரசு அனைத்து வித இராணுவ உதவிகளையும் அளித்து இலங்கை அரசுக்குத் துணை நின்றது. இன்று வரை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், கைதும் நிறுத்தப்படவில்லை.
 உலக நாடுகள் இராசபக்சேவைத் தண்டிக்க ஐ.நா. குழுவின் அறிக்கையும், பிரிட்டனின் சேனல்4 காணொளிக் காட்சிகளும் துணை நிற்கும் நேரமிது. இந்தியா முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனை மீது திரும்பிப் பார்க்க வைக்கும் தீர்மானத்தை சி.பி.ஐ மத்தியக்குழு நிறைவேற்றி இருப்பது உற்சாகமூட்டுகிறது. இத் தீர்மானம் சர்வதேச இடதுசாரி அமைப்புகள் மத்தியில் விவாதத்தை உருவாக்குவது நிச்சயம். இராசபக்சே அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய அரசு, இலங்கை அரசுடன் நிற்கிறது என சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் செயலாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அடிவாங்கியும் காங்கிரசின் இந்திய அரசு உணரத் தயாரில்லை. தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தீர்மானம் தமிழகத்தின் தீர்மானம் என்பதைப் புறந்தள்ளி இலங்கை செல்லச் சம்மதித்துள்ளது இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.தமிழர் உணர்வுகளை மீறி இச்சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கை செல்வாரெனில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி               இ.க.க (மா - லெ )மக்கள் விடுதலை மத்தியக் குழு தீர்மானித்துள்ளது. சி.பி.ஐ மத்தியக்குழுவின் இத் தீர்மானம் இந்திய அரசை எச்சரிப்பதாகவும், ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்துவதாகவும் உள்ளது.  ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை தமிழ் மாநிலக்குழு பாராட்டுகிறது. இணைந்து நிற்கிறது.
 மீ.த.பாண்டியன். மாநிலச் செயலாளர்,இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை

புதன், 6 ஜூலை, 2011

குழந்தைகள்தான்-எஸ்.இராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/?p=1571
நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள்.
உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே அது உண்மை, டிவி ரிமோட் கண்ட்ரோலை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். இதற்காகவே வீட்டில் இரண்டு மூன்று ரிமோட் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார்.
எதற்காக ரிமோட்டைப் பிடிக்கும் என்று மறுபடி கேட்டேன். அந்தச் சிறுமி ரிமோட் இருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடலாம். உங்களை எனக்குப் பிடிக்காட்டி என் ரிமோட்டை அமுக்கினா நீங்க உடனே மாயமா மறைஞ்சி போயிருவீங்க.. இந்த ரிமோட் இல்லாட்டி எனக்கு போரடிக்கும் என்றாள். நாலு வயதில் அவளுக்கு உலகம் போரடிக்க துவங்கியிருக்கிறது பாருங்கள்.
நண்பர் பெருமையுடன் அவளை யார் வீட்டுக்கு அழைத்துப் போனாலும் முதலில் அங்குள்ள ரிமோட்டை எடுத்துக் கொண்டுவிடுவாள். தராவிட்டால் பிடுங்கி உடைத்து போட்டுவிடுவாள்.  ஒரு முறை திரையரங்கிற்கு அவளை அழைத்துக் கொண்டு போனோம். அங்கே சப்தம் மிகஅதிகமாக இருக்கிறது. ரிமோட்டை வைத்து சப்தத்தை குறையுங்கள் என்று சொன்னாள். அப்படி நாம் குறைக்க முடியாது இது தியேட்டர் என்றதும் கோபத்துடன்  அழத்துவங்கி எங்களை படமே பார்க்கவிடவேயில்லை.
டிவி ரிமோட், வீடியோ கேம் ரிமோட், பேட்டரி கார் ரிமோட், என்று ஏùழுட்டு ரிமோட் வைத்திருக்கிறாள். டிவியில் வேறு சேனல்களை நாம் மாற்றிவிட்டால் அவளுக்கு வரும் கோபத்தை தாங்கவே முடியாது. போடி நாயே, போடி தெண்டம் என்று திட்டுவாள் என்று சிறுமியின் அம்மா பெருமையாகச் சொன்னாள்.
நண்பர் வேடிக்கையாக. இவளாவது பரவாயில்லை என் அண்ணன் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் வீட்டிற்கு வரும் கூரியர்காரர் முதல் எங்கள் அப்பா வரையான அத்தனை பேரையும் மரியாதையின்றி அது வந்திருக்கு என்று தான் சொல்கிறாள். இந்தக் கால குழந்தைகள் எவருக்கும் மரியாதை கற்றுதரப்படவேயில்லை  என்றார்.
நண்பரின் மகளின்  பேச்சும் நடத்தையும் நாற்பது வயது ஆளின் நடத்தை போலவே இருந்தது. உனக்கு எப்படி இந்தச் சொற்கள் எல்லாம் தெரிந்தன என்று கேட்டேன் .உன் வேலையை பாத்துகிட்டு போ என்று சொல்லி முறைத்தாள்.
நண்பர் தன் மகளைத் தூக்கி கொஞ்சியபடியே உங்களை இத்தோடு விட்டுவிட்டாள். நாராயணன் சார் வந்தபோது அவரைப் பிடிக்கவில்லை.  வீட்டை விட்டு உடனே போகச்சொல்லு என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவர்  காபி கூட குடிக்காமல் ஒடிப்போய்விட்டார் என்று சொல்லி சிரித்தார்.
சிறுவர்கள்  உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது. வன்முறை, அடிதடி, கொலை என ரசித்துப் பேசிக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய கோபம், பணத்தின் மதிப்பே தெரியாமல் செலவு செய்வது, அடுத்தவர்களை வெறுப்பது, மற்றவர் பொருட்களை உடைத்து எறிவது என்று அவர்களின் மனஇயல்பில் வன்மம் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது.
கண்ணாடித் தொட்டியில் வளரும் மீன்களுக்குத் தன்னை இரைபோட விடவில்லை என்று ஒரு சிறுவன் அதில் பினாயிலை மொத்தமாக கொட்டி எல்லா மீன்களையும் கொன்றுவிட்டான். இன்னொரு சிறுவன் பக்கத்து வீட்டில் சைக்கிள் ஒட்டும் சிறுமியை கிரிக்கெட் மட்டையால் அடித்து உடைத்துவிட்டான். அந்தச் சிறுமி அவனைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டாள் என்பது தான் காரணம். விளையாடுமிடங்கள், பொது இடங்கள், பள்ளி என்று எல்லா இடங்களிலும் குழந்தைகள்  விரோதமனப்பாங்கிலே சந்தித்துக் கொள்கிறார்கள்.
அண்டை வீட்டு குழந்தைகள் நம் வீட்டில் வந்து சாப்பிடுவதும். நம் குழந்தைகள் நண்பர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு வருவதும் பழங்கதையாகிப் போய்விட்டிருக்கிறது.உண்மையில் இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதேயில்லை தானா?
நகராட்சி பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன்  நீலநிற டீசர்ட் அணிந்த மற்றொரு சிறுவன் தானும் விளையாட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான். போ. போய்விளையாடு என்றாள் அம்மா.
அதற்கு சிறுவன் அந்த சனியன் விளையாண்டுகிட்டு இருக்கான்மா. நீ அவனை அடிச்சித் துரத்து என்றான். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று அம்மா சொல்லவேயில்லை. நீ போ நான் சொல்றேன் என்றபடியே உரத்த குரலில் டேய் தம்பி நீ தள்ளிக்கோ என்றாள்.
அதுவரை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வேண்டுமென்றே இடத்தை அடைத்துக் கொண்டு டீசர்ட் அணிந்த சிறுவன் விளையாட இடம் தர மறுத்தான். மறுநிமிசம் அவனை பிடறியோடு பிடித்து தள்ளிவிட்டான் நீல நிறப் பையன்.  சிறுவன் சறுக்கி விழுந்து அடிபட்ட வலியோடு வேகமாக மேலே ஏறி நீல நிற பையனை அடிக்க ஒடினான். அவனோ பயத்தில் ஒடி அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டுவிட்டான். வலியோடு அந்த சிறுவன் மீண்டும் சறுக்குவிளையாட ஆரம்பித்தான்.
நீல நிற டீசர்ட் அணிந்தவன் மெதுவாக அம்மா பின்னாடியிருந்து எட்டிப்பார்த்து அவன் என் எனிமி அவனை நான் பாம் வச்சி கொல்லப்போறேன்  என்று சொன்னான். அம்மா அதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இது யாரோ இரண்டு சிறுவர்களுக்கு நடக்கும் விசயமில்லை. நகரில் பெரும்பான்மை சிறுவர்கள் அப்படிதானிருக்கிறார்கள்.. எங்கே இன்னொரு சிறுவனை கண்டாலும் ஒரு கையாட்டல். புன்னகை எதுவும் கிடையாது. தொலைக்காட்சி தொடர்களில் இருந்து கற்றுக் கொண்ட  கடுஞ்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். திரைக்காட்சிகள் போலவே அடித்தும் உதைத்தும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இவை யாவையும் விட சிறுவர்களிடம் எது குறித்தும் வியப்பேயில்லை.
சிறுவயதில் விமானம் கிராமத்தை கடந்து போனால் கூடவே ஒடுவோம். ரயில் போகும்போது கைகாட்டிக் கொண்டேயிருப்போம். ஊருக்குள் புதிதாக வரும் குரங்காட்டி பின்னாலே போவோம். யானை வந்தால் அவ்வளவு தான். அது ஊரைவிட்டுப் போகும்வரை கூடவே செல்வோம். இன்று விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு சிறுவன் கூட மாநகரில் இல்லை. இதைப் பற்றி ஒரு சிறுவனிடம் கேட்ட போது ஒருவேளை விமானம் வெடித்து கிழே விழுந்தால் நிமிர்ந்து அதை வேடிக்கை பார்ப்பேன். மற்றபடி வானில் பறக்கும் போது அதில் அதிசயப்பட என்னயிருக்கிறது என்று கேட்டான்.
முன்பெல்லாம்  பெரியவர்களின் உடைகள், காலணிகள், அணிந்து பார்க்கும் ஆசை சிறார்களுக்கு இருந்தது.  பொருந்தாத சட்டைகளை அணிந்து கொண்டு சிறுவர்கள் நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். அது போல தங்கைகளை இடுப்பில் தூக்கி கொண்டு அலையும் சிறுமிகளை  காண்பதும் இயல்பாகவே இருந்தது. இன்று அப்படி ஒரு சிறுமி கூட கண்ணில் படவில்லை. தங்கையோ, தம்பியே பிறந்துவிட்டால் அவனை போட்டியாளனாகவே நினைக்கிறார்கள். நீ ஏன்டா பிறந்தே என்று கோபப்படுகிறார்கள்.
இன்று தன்னை விட இரண்டு வயது மூத்த அண்ணனின் சட்டையை போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்று தம்பி அடம்பிடிக்கிறான். அத்தோடு அது அவன் சட்டை அதை போடச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதே என்று அப்பா அம்மாவிடம் கோபப்படுகிறான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வசதி குறைபாடுகளை சிறுவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நேரடியாக அதைக் குறை சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
சேர்ந்து விளையாடுவது. சேர்ந்து உண்பது. சேர்ந்து சுற்றுவது என்ற கூட்டு செயல்பாடுகள் சிறார்களிடம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.  ஆகவே தனியாக வீடியோ கேம் ஆடுவது தான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காகி இருக்கிறது.
நமது தவறுகள், பலவீனங்கள், பொய்கள், கோபம், இயலாமை, தடுமாற்றங்கள் இவைகளை  நமது பிள்ளைகள் எளிதாக கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். ஆகவே நம்மை தான் முதலில் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நிறையப் பேசி, நிறையப் பகிர்ந்து கொண்டு. நிறையப் பயணம் செய்து, அனுபவங்களின் வழியே உலகை அவர்களுக்குப் புரிய வைப்பது தான் எளிய வழி. அதைச் செய்வதற்கு  நமக்கு விருப்பமில்லாமல் எப்போதுமே சிறுவர்கள் பார்த்துக் கத்திக் கொண்டேயிருக்கிறோம்.ஆகவே அவர்கள் இப்படிதான் வளர்வார்கள். வேறு வழி. என்ன இருக்கிறது **