சனி, 9 ஜூலை, 2011

சி.பி.ஐ மத்தியக் குழுவிற்குப் பாராட்டுக்கள்

 ஜூலை-8, இலங்கைத் தமிழர் ஒருமைப்பாட்டு தினத்தைக் கடைப்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிற்கு இ.க.க ( மா - லெ ) மக்கள் விடுதலை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2008 ல் ஈழத் தமிழர் மீதான சிங்கள யுத்தம் தீவிரமானபோது அக் - 2 ல் தமிழகத்தில் சி.பி.ஐ தனது முயற்சி மூலம் தொடங்கி வைத்தது. தற்போது உலகம் முழுவதும் இனப்படுகொலை எதிர்ப்பாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசை போர்க்குற்ற அரசாக விசாரணை நடத்தி, தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள். இனப்படுகொலைப் போர்க் குற்றவாளி இராசபக்சே தன்னையும், தனது அரசையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய அரசின் துணையை நாடுகிறான். 2008 - 2009 இறுதி யுத்தத்தில் இலங்கை அரசின் ஈழத் தமிழர்கள் மீதான படுகொலைத் தாக்குதலுக்கு எதிராகத் தமிழகத்தில் எதிர்ப்பலைகள் உருவானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளி, காங்கிரசின் இந்திய அரசு அனைத்து வித இராணுவ உதவிகளையும் அளித்து இலங்கை அரசுக்குத் துணை நின்றது. இன்று வரை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலும், கைதும் நிறுத்தப்படவில்லை.
 உலக நாடுகள் இராசபக்சேவைத் தண்டிக்க ஐ.நா. குழுவின் அறிக்கையும், பிரிட்டனின் சேனல்4 காணொளிக் காட்சிகளும் துணை நிற்கும் நேரமிது. இந்தியா முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனை மீது திரும்பிப் பார்க்க வைக்கும் தீர்மானத்தை சி.பி.ஐ மத்தியக்குழு நிறைவேற்றி இருப்பது உற்சாகமூட்டுகிறது. இத் தீர்மானம் சர்வதேச இடதுசாரி அமைப்புகள் மத்தியில் விவாதத்தை உருவாக்குவது நிச்சயம். இராசபக்சே அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய அரசு, இலங்கை அரசுடன் நிற்கிறது என சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கும் செயலாகும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடுமையான அடிவாங்கியும் காங்கிரசின் இந்திய அரசு உணரத் தயாரில்லை. தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தீர்மானம் தமிழகத்தின் தீர்மானம் என்பதைப் புறந்தள்ளி இலங்கை செல்லச் சம்மதித்துள்ளது இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தும் செயலாகும்.தமிழர் உணர்வுகளை மீறி இச்சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கை செல்வாரெனில் தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி               இ.க.க (மா - லெ )மக்கள் விடுதலை மத்தியக் குழு தீர்மானித்துள்ளது. சி.பி.ஐ மத்தியக்குழுவின் இத் தீர்மானம் இந்திய அரசை எச்சரிப்பதாகவும், ஈழத் தமிழர்களை உற்சாகப்படுத்துவதாகவும் உள்ளது.  ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை தமிழ் மாநிலக்குழு பாராட்டுகிறது. இணைந்து நிற்கிறது.
 மீ.த.பாண்டியன். மாநிலச் செயலாளர்,இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை

புதன், 6 ஜூலை, 2011

குழந்தைகள்தான்-எஸ்.இராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/?p=1571
நண்பரின் வீட்டில் அவரது நான்கு வயது மகளைச்  சந்தித்தேன்.  உன் பேரு என்னவென்று கேட்டேன். சம்ஷிகா என்றாள். உனக்கு எத்தனை வயசாகுது என்று கேட்டேன். எனக்கு நாலு வயது ஆகுது. இந்த வீட்டிலயே நான் தான் பெரிய ஆள் என்றாள். உங்க அப்பாவுக்கு எவ்வளவு வயசு ஆகுது என்று கேட்டேன். அதை போய் அவர்கிட்டே கேளு என்றாள்.
உனக்கு என்ன பிடிக்கும் என்றேன். அவள் ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் ரிமோட் கண்ட்ரோல் என்றாள். நண்பர் சிரித்தபடியே அது உண்மை, டிவி ரிமோட் கண்ட்ரோலை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தான் தூங்குகிறாள். இதற்காகவே வீட்டில் இரண்டு மூன்று ரிமோட் வாங்கி வைத்திருக்கிறேன் என்றார்.
எதற்காக ரிமோட்டைப் பிடிக்கும் என்று மறுபடி கேட்டேன். அந்தச் சிறுமி ரிமோட் இருந்தால் எல்லாத்தையும் மாற்றிவிடலாம். உங்களை எனக்குப் பிடிக்காட்டி என் ரிமோட்டை அமுக்கினா நீங்க உடனே மாயமா மறைஞ்சி போயிருவீங்க.. இந்த ரிமோட் இல்லாட்டி எனக்கு போரடிக்கும் என்றாள். நாலு வயதில் அவளுக்கு உலகம் போரடிக்க துவங்கியிருக்கிறது பாருங்கள்.
நண்பர் பெருமையுடன் அவளை யார் வீட்டுக்கு அழைத்துப் போனாலும் முதலில் அங்குள்ள ரிமோட்டை எடுத்துக் கொண்டுவிடுவாள். தராவிட்டால் பிடுங்கி உடைத்து போட்டுவிடுவாள்.  ஒரு முறை திரையரங்கிற்கு அவளை அழைத்துக் கொண்டு போனோம். அங்கே சப்தம் மிகஅதிகமாக இருக்கிறது. ரிமோட்டை வைத்து சப்தத்தை குறையுங்கள் என்று சொன்னாள். அப்படி நாம் குறைக்க முடியாது இது தியேட்டர் என்றதும் கோபத்துடன்  அழத்துவங்கி எங்களை படமே பார்க்கவிடவேயில்லை.
டிவி ரிமோட், வீடியோ கேம் ரிமோட், பேட்டரி கார் ரிமோட், என்று ஏùழுட்டு ரிமோட் வைத்திருக்கிறாள். டிவியில் வேறு சேனல்களை நாம் மாற்றிவிட்டால் அவளுக்கு வரும் கோபத்தை தாங்கவே முடியாது. போடி நாயே, போடி தெண்டம் என்று திட்டுவாள் என்று சிறுமியின் அம்மா பெருமையாகச் சொன்னாள்.
நண்பர் வேடிக்கையாக. இவளாவது பரவாயில்லை என் அண்ணன் மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவள் வீட்டிற்கு வரும் கூரியர்காரர் முதல் எங்கள் அப்பா வரையான அத்தனை பேரையும் மரியாதையின்றி அது வந்திருக்கு என்று தான் சொல்கிறாள். இந்தக் கால குழந்தைகள் எவருக்கும் மரியாதை கற்றுதரப்படவேயில்லை  என்றார்.
நண்பரின் மகளின்  பேச்சும் நடத்தையும் நாற்பது வயது ஆளின் நடத்தை போலவே இருந்தது. உனக்கு எப்படி இந்தச் சொற்கள் எல்லாம் தெரிந்தன என்று கேட்டேன் .உன் வேலையை பாத்துகிட்டு போ என்று சொல்லி முறைத்தாள்.
நண்பர் தன் மகளைத் தூக்கி கொஞ்சியபடியே உங்களை இத்தோடு விட்டுவிட்டாள். நாராயணன் சார் வந்தபோது அவரைப் பிடிக்கவில்லை.  வீட்டை விட்டு உடனே போகச்சொல்லு என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவர்  காபி கூட குடிக்காமல் ஒடிப்போய்விட்டார் என்று சொல்லி சிரித்தார்.
சிறுவர்கள்  உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது. வன்முறை, அடிதடி, கொலை என ரசித்துப் பேசிக் கொள்கிறார்கள். மிதமிஞ்சிய கோபம், பணத்தின் மதிப்பே தெரியாமல் செலவு செய்வது, அடுத்தவர்களை வெறுப்பது, மற்றவர் பொருட்களை உடைத்து எறிவது என்று அவர்களின் மனஇயல்பில் வன்மம் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது.
கண்ணாடித் தொட்டியில் வளரும் மீன்களுக்குத் தன்னை இரைபோட விடவில்லை என்று ஒரு சிறுவன் அதில் பினாயிலை மொத்தமாக கொட்டி எல்லா மீன்களையும் கொன்றுவிட்டான். இன்னொரு சிறுவன் பக்கத்து வீட்டில் சைக்கிள் ஒட்டும் சிறுமியை கிரிக்கெட் மட்டையால் அடித்து உடைத்துவிட்டான். அந்தச் சிறுமி அவனைப் பார்த்து கேலியாக சிரித்துவிட்டாள் என்பது தான் காரணம். விளையாடுமிடங்கள், பொது இடங்கள், பள்ளி என்று எல்லா இடங்களிலும் குழந்தைகள்  விரோதமனப்பாங்கிலே சந்தித்துக் கொள்கிறார்கள்.
அண்டை வீட்டு குழந்தைகள் நம் வீட்டில் வந்து சாப்பிடுவதும். நம் குழந்தைகள் நண்பர்கள் வீட்டில் போய் சாப்பிட்டு வருவதும் பழங்கதையாகிப் போய்விட்டிருக்கிறது.உண்மையில் இரண்டு குழந்தைகள் ஒன்றையொன்று நேசிப்பதேயில்லை தானா?
நகராட்சி பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன்  நீலநிற டீசர்ட் அணிந்த மற்றொரு சிறுவன் தானும் விளையாட வேண்டும் என்று தன் அம்மாவிடம் சொன்னான். போ. போய்விளையாடு என்றாள் அம்மா.
அதற்கு சிறுவன் அந்த சனியன் விளையாண்டுகிட்டு இருக்கான்மா. நீ அவனை அடிச்சித் துரத்து என்றான். அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று அம்மா சொல்லவேயில்லை. நீ போ நான் சொல்றேன் என்றபடியே உரத்த குரலில் டேய் தம்பி நீ தள்ளிக்கோ என்றாள்.
அதுவரை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வேண்டுமென்றே இடத்தை அடைத்துக் கொண்டு டீசர்ட் அணிந்த சிறுவன் விளையாட இடம் தர மறுத்தான். மறுநிமிசம் அவனை பிடறியோடு பிடித்து தள்ளிவிட்டான் நீல நிறப் பையன்.  சிறுவன் சறுக்கி விழுந்து அடிபட்ட வலியோடு வேகமாக மேலே ஏறி நீல நிற பையனை அடிக்க ஒடினான். அவனோ பயத்தில் ஒடி அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டுவிட்டான். வலியோடு அந்த சிறுவன் மீண்டும் சறுக்குவிளையாட ஆரம்பித்தான்.
நீல நிற டீசர்ட் அணிந்தவன் மெதுவாக அம்மா பின்னாடியிருந்து எட்டிப்பார்த்து அவன் என் எனிமி அவனை நான் பாம் வச்சி கொல்லப்போறேன்  என்று சொன்னான். அம்மா அதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
இது யாரோ இரண்டு சிறுவர்களுக்கு நடக்கும் விசயமில்லை. நகரில் பெரும்பான்மை சிறுவர்கள் அப்படிதானிருக்கிறார்கள்.. எங்கே இன்னொரு சிறுவனை கண்டாலும் ஒரு கையாட்டல். புன்னகை எதுவும் கிடையாது. தொலைக்காட்சி தொடர்களில் இருந்து கற்றுக் கொண்ட  கடுஞ்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். திரைக்காட்சிகள் போலவே அடித்தும் உதைத்தும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
இவை யாவையும் விட சிறுவர்களிடம் எது குறித்தும் வியப்பேயில்லை.
சிறுவயதில் விமானம் கிராமத்தை கடந்து போனால் கூடவே ஒடுவோம். ரயில் போகும்போது கைகாட்டிக் கொண்டேயிருப்போம். ஊருக்குள் புதிதாக வரும் குரங்காட்டி பின்னாலே போவோம். யானை வந்தால் அவ்வளவு தான். அது ஊரைவிட்டுப் போகும்வரை கூடவே செல்வோம். இன்று விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு சிறுவன் கூட மாநகரில் இல்லை. இதைப் பற்றி ஒரு சிறுவனிடம் கேட்ட போது ஒருவேளை விமானம் வெடித்து கிழே விழுந்தால் நிமிர்ந்து அதை வேடிக்கை பார்ப்பேன். மற்றபடி வானில் பறக்கும் போது அதில் அதிசயப்பட என்னயிருக்கிறது என்று கேட்டான்.
முன்பெல்லாம்  பெரியவர்களின் உடைகள், காலணிகள், அணிந்து பார்க்கும் ஆசை சிறார்களுக்கு இருந்தது.  பொருந்தாத சட்டைகளை அணிந்து கொண்டு சிறுவர்கள் நடந்து வருவதைக் கண்டிருக்கிறேன். அது போல தங்கைகளை இடுப்பில் தூக்கி கொண்டு அலையும் சிறுமிகளை  காண்பதும் இயல்பாகவே இருந்தது. இன்று அப்படி ஒரு சிறுமி கூட கண்ணில் படவில்லை. தங்கையோ, தம்பியே பிறந்துவிட்டால் அவனை போட்டியாளனாகவே நினைக்கிறார்கள். நீ ஏன்டா பிறந்தே என்று கோபப்படுகிறார்கள்.
இன்று தன்னை விட இரண்டு வயது மூத்த அண்ணனின் சட்டையை போட்டுக் கொள்ளவே மாட்டேன் என்று தம்பி அடம்பிடிக்கிறான். அத்தோடு அது அவன் சட்டை அதை போடச் சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதே என்று அப்பா அம்மாவிடம் கோபப்படுகிறான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள வசதி குறைபாடுகளை சிறுவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். நேரடியாக அதைக் குறை சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
சேர்ந்து விளையாடுவது. சேர்ந்து உண்பது. சேர்ந்து சுற்றுவது என்ற கூட்டு செயல்பாடுகள் சிறார்களிடம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.  ஆகவே தனியாக வீடியோ கேம் ஆடுவது தான் அவர்களின் பிரதான பொழுதுபோக்காகி இருக்கிறது.
நமது தவறுகள், பலவீனங்கள், பொய்கள், கோபம், இயலாமை, தடுமாற்றங்கள் இவைகளை  நமது பிள்ளைகள் எளிதாக கற்றுக் கொண்டுவிடுகிறார்கள். ஆகவே நம்மை தான் முதலில் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
நிறையப் பேசி, நிறையப் பகிர்ந்து கொண்டு. நிறையப் பயணம் செய்து, அனுபவங்களின் வழியே உலகை அவர்களுக்குப் புரிய வைப்பது தான் எளிய வழி. அதைச் செய்வதற்கு  நமக்கு விருப்பமில்லாமல் எப்போதுமே சிறுவர்கள் பார்த்துக் கத்திக் கொண்டேயிருக்கிறோம்.ஆகவே அவர்கள் இப்படிதான் வளர்வார்கள். வேறு வழி. என்ன இருக்கிறது **

ஞாயிறு, 26 ஜூன், 2011

சூன் 26, 2011, மதுரையில் நினைவஞ்சலி

  சூன் 26, 2011 சித்திரவதைக்கு  எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு             மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.



இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்
இலங்கை  கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க அணிதிரண்டார்கள்.                                                                                  ஏற்பாடு- தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு. மதுரை

புதன், 22 ஜூன், 2011

இ.க.க (மா.லெ) மக்கள் விடுதலை கருப்புக் கொடி

21.06.2011 அன்று தஞ்சையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மத்தியக் குழு முடிவுகளை தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் முன்வைத்தார் . . . .                                                                                                         ஐ.நா.குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இனப் படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே ஐ.நா. மன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசு மீது நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலில் உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் இனப்படுகொலையாளன் இராஜபக்சே கும்பலைத் தண்டிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக ஒத்துக் கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலைக்கு நடவடிக்கை இல்லை. முகாமில் இருந்து மீண்ட ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற்றத் தயார் இல்லை. இச்சூழலில் இந்திய, பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் போடும் நோக்கிலும், இராஜபக்சே அரசைக் காப்பாற்றும் நோக்கிலும் இலங்கை செல்லும் பிரதமரது செயல் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதாக உள்ளது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரானால் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும். உணர்வாளர்கள், இனப் படுகொலை எதிர்ப்பாளர்கள், கருப்புக்கொடியேற்றி நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
 தமிழகக் கல்வியாளர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக சமச்சீர் கல்வி தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அமுலுக்கு வந்தது. சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்டம் முதல்படியாக அமுல்படுத்தப்பட்டது. போதாக் குறைகள் இருந்த போதும் முத்துக்குமரன் குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த தமிழகக் கல்வியாளர்கள் கோரி வந்தனர். தமிழக மக்களின் கோபாவேசத்தால் ஆட்சியிலிருந்து தி.மு.க தூக்கி எறியப்பட்டதன் விளைவாக ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுலாக்க மறுத்து, எந்த ஆய்வும் இல்லாமல் முடிவு செய்தது கண்டிக்கத் தக்கது. தி.மு.க.வுடன் அவருக்குள்ள பகையை கல்வித் திட்டத்தில் காட்டுவது முறையற்றது. மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் பிடியில் உள்ள ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக நிலையெடுப்பது தமிழக மாணவர்களின் சமவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். உயர் நீதிமன்ற ஆணையை அமுலாக்க வேண்டும், உச்ச நீதிமன்ற வேண்டுகோள்படி அமைத்த கல்விக்குழுவில் நியமித்துள்ள தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமுலாக்கப்பட வேண்டும்.                                                           நாகை மாவட்டம் காவிரியின் கடைமடைக் கடலோரப் பகுதிகளில் தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விளை நிலங்களில் ஐக்கிய முன்னணி காங்கிரஸ் அரசு அவசர கதியில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விளை நிலங்களை நம்பி வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வேலை இழைப்பைச் சந்திக்கின்றனர். விளை நிலங்கள் பாழ்பட்டுப் போவதும், விவசாய சமூகம் தனது வாழ்வுரிமையை இழப்பதும் நிகழ்கிறது. கடலோரங்களைத் தேர்வு செய்து இருப்பதன் மூலம் கடல்வளம் பாழ்படுவதும், மீனவர் கிராமங்கள் அழிந்து போவதும்,  போன்ற அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. நாகை மாவட்ட கடலோரங்களில் அனுமதி அளித்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களின் அனுமதியை இரத்து செய்வதுடன், விளை நிலங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவேற்ற ஜெயங்கொண்டத்தில் தொடங்க அறிவித்த மின் நிலையத்தை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனல் மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், படித்த அறிவாளிப் பிரிவினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆதரவு தரவேண்டுகிறோம்.

சனி, 18 ஜூன், 2011

மக்சிம் கார்க்கி 16.03.1868 - 18.06.1936

மக்சிம் கார்க்கி (18 .06 .1936 ) இன்று தோழர் ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி நினைவு நாள்.  இன்றும்
பொருந்தும் அவரது எழுத்து, " துன்பகரமான காலத்தில்
நாம் வசிக்கிறோம். வாழ்க்கை சகிக்கமுடியாத அளவுக்குக் கொடுமையானதாக இருக்கிறது. ஆயினும்
மனிதனுள் உறையும் நல்ல சக்திகள் சுதந்திரமாகப்
படைக்கவும், கட்டுப்பாடின்றி உழைக்கவும் விழிப்புற்று
எழப்போகிற தருணத்திலேயே நாம் இருக்கிறோம். இதுதான் உண்மை. இது நமக்கு ஆறுதல் அளிப்பதோடு, நம்முள் புதிய பலத்தையும், துணிவையும் புகுத்தவேண்டும்."

புதன், 15 ஜூன், 2011

ஜூன்- 14,தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்

ஜூன்- 14,   தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்.அவரின்
 நினைவுகள் போர்க்குணாம்சத்தை நமக்குள்
உருவாக்குகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை  முன்னெடுத்துச்செல்ல போராளி சேகுவேராவின் வரிகள்,

'' ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ               அங்கெல்லாம் எனது கால்கள்பயணிக்கும்.''                                                                                                                        '' எங்களது ஒவ்வொரு செயல்பாடும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட அறைகூவல்தான்..''.

புதன், 8 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை - இரா. உமா.

சிவப்புத் தோல் கதாநாயகன் இல்லை. சிக்கென்ற உடையில் வரும் கதாநாயகி இல்லை. ஒரே பாட்டில் கதாநாயகன் கோடீசுவரன் ஆகும் அதிசயம் இல்லை. குத்துப்பாட்டு இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் தாவித்தாவிக் குதிக்கும் சண்டைக்காட்சி இல்லை. கனவுப்பாட்டு இல்லை. யாரும் யாரையும் கண்டபடி கட்டிப்பிடிக்கவில்லை. ஆனாலும் தொடங்கியதில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் செல்கிறது அழகர்சாமியின் குதிரை.
அழகான மலைகள் சூழ்ந்த தேனி மாவட்டத்தின் மலைக்கிராமங்கள்தான் இந்தப் படத்தின் கதைக்களங்கள். கோயிலில் இருந்த அழகர்சாமியின் மரக்குதிரை காணாமல் போய்விட, பக்கத்து கிராமத்தில் இருக்கும் அழகர்சாமியின் குதிரை அந்த ஊருக்குள் வந்துசேருகிறது. தன்னுடைய குதிரையைத் தேடி அக்கிராமத்துக்கு வரும் அழகர்சாமிக்கும், சாமியின் மரக்குதிரைதான் உயிருடன் வந்திருக்கிறது என நம்பும் அந்தக் கிராமத்தாருக்கும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் மையம்.
இதற்குள், அழகான காவியங்களாய் இரண்டு காதல்கள், கடவுளின் பேரால் நடக்கும் போலித்தனங்கள், மக்களின் நம்பிக்கைகள், கிராமத்து மக்களின் வெகுளித்தனங்கள் என கண்களை உறுத்தாத காட்சிகளால் நிறைந்து நிற்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.
திருவிழா நடத்துவதற்கு நிதி கேட்டுவரும் ஊர்ப்பெரியவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. தன் வீட்டிற்கு வரும் ஊர்ப்பெரியவர்களைப் பார்த்து, கையில் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, கட்டபொம்மன் வசனம் பேசும் சிறுவனும், நிதிகேட்டு வந்தவர்கள் போகும் வரை, காதுகேட்காதது போல் நடிக்கும் பாட்டியும் கிராமத்து குசும்பின் பதிவுகள்.
இதுவரை நம்முடைய கிராமத்துக் கோடாங்கிப் பூசாரிகளைத்தான் பித்தலாட்டக்காரர் களாகவும், கேலிக்குரியவர்களாகவும் தமிழ்த்திரைப்படங்கள் காட்டி வந்தன. இந்தப் படத்தில், ‘ மதிப்புமிக்க ’ மலையாள மாந்த்ரீகனை நாலா பக்கமும் கிழித்துக் காட்டியிருக்கின்றனர். காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க உள்ளூர் பூசாரியால் முடியாது என்று முடிவு செய்து, கேரளாவில் இருந்து பூசாரியை வரவழைக்கின்றனர். அவன் அந்தக் கிராமத்து மக்களின் அறியாமையையும், வெள்ளந்தித்தனத்தையும் பயன்படுத்தி, மலையாள பகவதியின் பெயரைச் சொல்லி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறான் எனக் காட்டும் காட்சிகள் சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் வைக்கின்றன.
உள்ளூர் பூசாரியிடம் குறி கேட்கும் போது, அவர் அருள்வந்து ஆடுவதைப் பார்த்து ஒரு சிறுமி, “ ஏண்டா நம்ம பூசாரிக்கு பேய் பிடிச்சிருக்கா? ” எனக் கேட்க, அதற்கு அந்தச் சிறுவன், “ இல்ல சாமி வந்திருக்கு ” என்று சொல்வதைக் கேட்டு, மற்றொரு சிறுவன், “ ரெண்டும் ஒன்னுதான் ” எனச் சட்டென அலட்டிக் கொள்ளாமல் மெதுவாகச் சொன்னாலும், பொருள் பொதிந்த அந்த வசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் பாத்திரத்தின் தேர்வு சிறப்பு. குதிரை காணாமல் போனதுபற்றிப் புகார் தர வரும், ஊர்ப்பெரியவர்கள் சொல்லும் கற்பனைக் கதைகளைக் கேட்கக் கேட்க, மாறிக்கொண்டே வரும் முகபாவங்கள், திரையரங்கில் அவருடைய நடிப்புக்குக் கைத்தட்டல்களை வாங்கித் தருகின்றன.
குதிரைக்காரன் அழகர்சாமியாக வரும் அப்புக்குட்டியின் உருவத்தைப்போலவே, அவருடைய பாத்திரமும் கனமானதுதான். அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாகச் சொல்லித்திரியும் அழகர்சாமி, சரண்யா மோகனைப் பெண்பார்த்துவிட்டு, என்னைப் போலத்தானே அந்தப் பெண்ணுக்கும் அழகான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு நான் தகுதியானவன் இல்லை. அதனால் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடப் போகிறேன் எனத் தன் குதிரையிடம் சொல்லும் இடத்தில், பரட்டைத் தலையும், பருத்த, குட்டையான உருவமும், அதற்குள்ளிருக்கும் அழகான மனதும் சரண்யா மோகனுக்கு மட்டுமன்று, நமக்கும் மிகவும் பிடித்துப்போகிறது.
திருமணத்திற்கு முன் குதிரை காணாமல் போய்விடுகிறது. அந்தக் குதிரைதான், அழகர்சாமியின் வருவாய்க்கான மூலதனம். எனவே, குதிரையுடன் வந்தால்தான் திருமணம் என்று பெண்ணின் அப்பா சொல்லிவிடுகிறார். குதிரையைத் தேடி அலையும் அழகர்சாமி, மரக்குதிரை காணாமல் போன கிராமத்தில் தன் உயிருள்ள குதிரை ஊர் நடுவில் உள்ள மண்டபத்தில் கட்டிப்போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். ஆனால் ஊர்க்காரர்களோ, காணாமல் போன மரக்குதிரைதான், கடவுள் அருளாள் உயிருடன் வந்திருப்பதாக நம்பிக்கொண்டிருக் கின்றனர். அந்தக் குதிரையை வைத்துத்தான் திருவிழா நடத்தப் போவதாகவும், திருவிழா நடத்தினால்தான் மழை பெய்யும் என்றும் சொல்லி குதிரையைத் தர மறுக்கின்றனர்.
திருவிழா முடியும் வரையில், குதிரையுடன் அழகர்சாமியும் அந்த ஊரிலேயே தங்கிக்கொள்வது என்றும், திருவிழா முடிந்த உடன் அவனுடன் குதிரையை அனுப்பிவிடவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி சொல்வதை அனைவரும் வேறுவழியின்றி ஏற்றுக்கொள்கின்றனர். இடையில் குதிரையைக் கொண்டு செல்ல முயலும் அழகர்சாமியை ஊரார் அடித்துத் துவைத்து விடுகின்றனர். ஆறுதல் சொல்லும் இளைஞர்களிடம், அழகர்சாமி தனக்காக ஒரு பெண் காத்துக் கொண்டிருப்பதையும். வரும் பெளர்ணமிக்குள் குதிரையோடு போய் அவளைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், அவள் உயிரை விட்டுவிடுவாள் என்றும் சொல்லிக் கதறுகிறான். இதைக்கேட்ட இளைஞர்கள், திருவிழா முடிந்தாலும், ஊர்க்காரர்கள் குதிரையைத் தரமாட்டார்கள், எனவே இரவோடு இரவாக குதிரையோடு ஊரைவிட்டுச் செல்லத் தாங்கள் உதவுவதாகக் கூறுகின்றனர். ஆனால் திருவிழாவிற்கு அந்த ஊர் மக்கள் உற்சாகமாய்த் தயாராவதையும், உறவுகள் எல்லாம் ஒன்றுகூடுவதையும் பார்க்கும் அழகர்சாமிக்கு அவர்களுடைய மகிழ்ச்சியில் மண்அள்ளிப் போட மனம்வரவில்லை. எனவே திருவிழா முடிந்த பிறகே அந்த ஊரைவிட்டுக் குதிரையுடன் போவது என்பதில் உறுதியாக நின்றுவிடுகிறான்.
அசலூர்க்காரனாக இருந்தாலும், இந்த ஊர்இந்த ஊர் மக்களின் மீது அழகர்சாமிக்கு இருக்கும் அன்பைப் பார்த்து, மனம் திருந்தும் ஆசாரி, தான் மறைத்து வைத்திருந்த மரக்குதிரையை யாருக்கும் தெரியாமல் இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுகிறார். இதைப் பார்த்துவிடும் இளைஞர்களிடம், பழைய குதிரை காணாமல் போனால், புதிய குதிரை செய்யச் சொல்வார்கள். அதற்குக் கூலியாகக் கொஞ்சம் பணமும், தங்கமும் கிடைக்கும். அதை வைத்துத் தன் மகளின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தவற்றைச் செய்துவிட்டதாகக் கூறுகிறார். இளைஞர்களும் இதை யாரிடமும் சொல்லாமல், அவருடைய மகளின் திருமணத்திற்கும் உதவிசெய்கின்றனர். அதோடு, உயிருள்ள குதிரை மறுபடியும் மரக்குதிரையாக மாறிவிட்டது என்று சொல்லும் ஊர்ப்பெரியவர்களோடு இவர்களும் சேர்ந்துகொண்டு, போலியாக அதன்முன் விழுந்து கும்பிடுகிறார்கள்.
பகுத்தறிவு பேசும் இளைஞர் அணியினரின் பொதுநலன் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் ஊருக்கு நான்கு பேராவது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என எதிர்பார்க்க வைக்கின்றன. அந்த இளைஞர்களில் ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவரின் மகன் பிரபாகரன், கோயில் பூசாரியின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டதைக் கேட்டதும், அவனின் தந்தையான பஞ்சாயத்துத் தலைவர், தாழ்ந்த சாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே. அய்யோ சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணா எப்படிடா மழை பெய்யும். இனிமே இந்த ஊருல மழையே பெய்யாது என தரையில் விழுந்து புரண்டு சாபம் விட, மூன்றாண்டுகளாகப் பொய்த்து வந்த மழை இடி, மின்னலுடன் கொட்டோ கொட்டென்று கொட்ட, சாதிச் சகதி கரைந்து காணாமல் போவதுபோன்ற உணர்வினை அந்தக் காட்சியில் ஏற்படுத்திவிடுகிறார் இயக்குனர்.
படம் நெடுக பகுத்தறிவுக் கருத்துக் விதைக்கப்பட்டிருக்கின்றன. சாதி மறுப்பு, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பற்றி, கதையோட்டத்தோடு கலந்து வரும் வசனங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெறுகின்றன. ஆண்டுதோறும் அழகர் அலங்காரமாய்ப் பட்டுடித்தி, தங்க நகைகளுடன் ஊர்வலம் வந்தாலும், அழகரின் மரக்குதிரையைச் செய்த ஆசாரியின் வறுமை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால்தான் அதைத் தீர்க்க முடியும் எனக்காட்டுகிறது படம்.
இளையராஜாவின் இதமான இசையும், தெளிவாகக் கேட்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. அத்தனை நடிகர்களும் இயல்பான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். நேர்த்தியான காட்சியமைப்புகளின் மூலம், நம்மையும் அந்தக் கிராமத்து மக்களில் ஒருவராகவே உணரச் செய்துவிடுகிறார் இயக்குனர்.
தந்தைபெரியார் ஒருமுறை நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் : நாம நூறு கூட்டங்கள்ல பேசுறத, ராதா ஒரு நாடகத்துல சொல்லிடுறார். அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் நெருக்கத்தில் வைத்துப் பாராட்டுவதற்குரிய தகுதி இந்தப் படத்திற்கு இருக்கிறது