திங்கள், 9 ஜனவரி, 2012

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

 " கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு " என முழங்கி 26-11-2011 அன்று சுனாமி தாக்கிய நினைவு நாளில் "ஊர்திப் பயணம்" நெல்லையிலிருந்து - கூடங்குளம் நோக்கி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு 7-12-2012 அன்று ஊர்திப் பயணம் நடத்தப் பட்டது.
      தொடக்க நிகழ்ச்சி நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.      நெல்லை மாவட்டச்   செயலாளர்   தோழர் துளசியம்மாள்,             
அனைத்துத் தமிழகப் பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் தொ.ஆரோக்கியமேரி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். உதயகுமார், கட்சியின் பொதுச்செயலாளர்  தோழர் சிதம்பரநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். உறுப்பினர்கள் புஷ்பாராயன், மை.பா. சேசுராசன்,முகிலன்                ஆகியோர் உரையாற்றினர்.  
கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு  தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கொடி அசைத்து ஊர்திப் பயணத்தைத் தொடக்கி வைத்தார்.

நாங்குநேரியில் தோழர்கள்    தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர் தோழர் ஜெயக்குமார்,துளசியம்மாள் உரையாற்றினர்.வள்ளியூர் பேருந்து நிலையம்முன்புதுளசியம்மாள்,தொ.ஆரோக்கியமேரி ஆகியோர் உரையாற்றினர்.
வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் தங்க.தமிழ்வேலன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சி.எம்.பால்ராஜ், மாநிலக்குழு தோழர் சேலம் கோ. சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர்
  அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.                                   கள்ளிக்குளத்தில் துளசியம்மாள், காஞ்சி மாவட்டச் செயலாளர்  தோழர் நடராசன் உரையாற்றினர். சமூகரெங்கபுரம் வழியாக இராதாபுரம் வந்தடைந்த பயணத்தை வாழ்த்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தோழர் சுந்தரம் வாழ்த்திப் பேசினார்.துளசியம்மாள், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன் உரையாற்றினார். பயணம் கூடங்குளத்திற்குள் மக்களின் அமோக வரவேற்புடன் நுழைந்தது. கட்சியின் மாநிலச் செயலாளர் பங்கெடுத்த 1989 கூடங்குளம் எதிர்ப்பு இயக்க சம்பவங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். தோழர்கள் கொடிகளுடன், கூடங்குளம் தெருக்களில் மக்களும் இணைந்து விண்ணதிர முழக்கமிட்டுவலம் வந்தனர். மக்கள் இயக்கத்தினரின் உபசரிப்புடன் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், உரையாற்றினார். மக்கள் இயக்கம் சார்பில் வழக்குரைஞர் சிவசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். இடிந்தகரை நோக்கிப் பயணம் செல்லும் வழியில் மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க மாநிலச் செயலாளர் உரையாற்றினார். இடிந்தகரை வீதிகளில் குழந்தைகளும், பெண்களும் கடல் அலைகளுக்குப் போட்டியாக முழக்கமிட்டு போராட்ட மைதானம் வந்தடைந்தனர். போராட்ட மேடையில் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, மீ.த.பாண்டியன், சிதம்பரநாதன் ஆகியோர் உரையாற்றினர். பயணம் நெடுகிலும் 1989இல் தான் எழுதிய கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடலை பாடிய சிற்பிமகன் பாடல்களுடன் நிறைவுற்ற பயணத்தை வாழ்த்தி மக்கள் இயக்க நிர்வாகி மில்டன் வாழ்த்திப் பேசினார். பயணக் குழுவினர் இடிந்தகரை, கூடங்குளம் போராட்ட உணர்வுகளுடன் தங்களது ஊர்கள நோக்கி விரைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை வரலாற்றில் ஒரு வசந்தமாக இப்பயணம் அமைந்தது.                                

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்'


தண்ணீர் உரிமைக்கான படைப்பாளிகள்- உணர்வாளர்கள் கூட்டமைப்பு- மதுரை சார்பில் 'உண்ணாநிலை அறப்போர்' மதுரை காளவாசலில் நடைபெற்றது.
தங்கப்பாண்டியன் ஒருங்கிணைப்பில், பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்றார். எழுத்தாளர்கள் கோணங்கி, முதுக்கிருஷ்ணன், செந்தி, லிபி ஆரண்யா, ஜனகப்பிரியா, ஓவியர் பாபு ஆகியோர் உரையாற்ற அர்ஷியா, சேதுராமலிங்கம், தளபதி, ஜெ.பிரபாகரன், அ.ஜெகநாதன், அன்புவேந்தன், பூமிச்செல்வம், ரத்தினகுமார், தமிழ்முதல்வன், சாம்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உலகத் தமிழர் பேரமைப்பின் க.பரந்தாமன் தொடக்கிவைத்தார். தியாகி இம்மானுவேல் பேரவையின் பூ.சந்திரபோசு, ம.தி.மு.க.வின் புதூர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் கேசவன், மகளிர் ஆயத்தின் அருணா, மக்கள் சனநாயக் குடியரசுக் கட்சியின் செல்வி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் மருத்துவர் சங்கீதா, வழக்குரைஞர்கள் அருணாசலம், வாஞ்சிநாதன், மருத்துவர் சரவணகுமார் ஆகியோர் உரையாற்ற,
புரட்சிக் கவிஞர் பேரவையின் ஐ.ஜெயராமன், அம்பேத்கர் தேசிய இயக்கத்தின் அம்பேத்பாபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியசாமி,தமிழ்ப்பித்தன், மருத்துவர் ஜெயக்குமார், தொ.ஆரோக்கியமேரி வழக்குரைஞர்கள் விஜயலட்சுமி, பாரதி, பொற்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முல்லை பெரியாறு அணையின் முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் விரிவாகப் பேசியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன் நிறைவுரையாற்றினார். வழக்குரைஞர். பகவத்சிங் உரையாற்றி, பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

கூடங்குளம், பரமக்குடி, முல்லை பெரியாறு போராட்டங்களை ஒருங்கிணைப்போம்!


17-12-2011கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கவிதா என்கிற பெண் படுகொலையில் காவல்துறையின் மெத்தனத்தைக்   கண்டித்து மாவட்டச் செயலாளர் சி.எம்.பால்ராஜ் தலைமையில்ஆர்ப்பாட்டம்.தோழர் துளசியும் நானும் கண்டன உரையாற்றினோம்.
 ‎
18-12-2011 கூடங்குளம் பத்திரகாளியம்மன் கோவிலிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் இராதாபுரம் நோக்கி " அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தோழர்கள் துளசி, இராஜ், இராஜா செந்தில் ஆகியோருடன் கலந்து கொண்டேன்.

19-12-2011 நெல்லை பாளையங்கோட்டை, ஜவஹர் திடலில் எஸ்.சி,எஸ்.டி, மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் சி.பி.ஐ. விசாரணை கோரி " பரமக்குடி துப்பாக்கிச் சூடு நூறாவது நாள் கண்டன ஆர்ப்பாட்டம், தலைவர் அம்பேத்கர் தலைமையில், செயலாளர் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில், சி.பி.ஐ(எம்) மாவட்டச் செயலாளர் தோழர் பழனி அவர்கள் தொடங்கி வைக்க நானும் கண்டன உரையாற்றினேன். தோழர்கள் ராஜமாணிக்கம், நரசிங்கநல்லூர் மாரியப்பன், பேட்டை மாரியப்பன், நம்பி,சவரி, ஆறுமுகம், முத்துகுமார், ஆகியோர் என்னுடன் கலந்து கொண்டனர்.

20-12-2011 முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம், கேரளா இனவெறி அரசியல் கட்சிகளைக் கண்டித்து தேனி வீரபாண்டியில் சபாபதி அவர்கள் தலைமையில் ஊர் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் என்னுடன் சண்முகப்பாண்டி,அய்யன்காளை, கூடலூரில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு சார்பில் ஐந்தாவது நாள் தொடர் போராட்டத்தில் பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பில், விவசாயிகள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் மோகன் தலைமையில் கலந்து கொண்டு உரையாற்றினேன். என்னுடன் வீரபாண்டி சிவகுமார் கலந்து கொண்டார்.

திங்கள், 5 டிசம்பர், 2011

டிச-3,பரமக்குடி பொது விசாரனை அறிக்கை வெளியீடு


"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு"



விபத்தைப் போல கடந்து போகும் தமிழர் மனோநிலையை மூன்று மாதம் கழித்து உலுக்க எடுத்த முயற்சி. ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனோநிலை உருவாக்கிய மௌனத்தைக்     கலைக்க பாதிக்கப்பட்ட பரமக்குடி ஒடுக்கப்பட்ட பகுதி மக்களுடன் இணைந்து தியாகி இமானுவேல் பேரவை உள்ளிட்ட ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் இணைந்த "பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" வின் தொடர் முயற்சி........

இன்று பரமக்குடியில்... நாளை கூடங்குளத்தில்....?

"பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு" சார்பில் தமிழக அரசின் சம்பத் குழு விசாரனையைப் புறக்கணித்து, முன்னாள் நீதியரசர் மும்பை சுரேஷ் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பொது விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு வழிவிட வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மறைந்த தோழர் ஸ்டாலினுக்கு செவ்வணக்கம்!

2-10-2011 அன்று தொடக்க நேரம் 2 மணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் நம்மை விட்டுப் பிரிந்தார். தாழ் இரத்த அழுத்தம் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. கட்சியின் கட்டுப்பட்டுக்குழுத் தலைவர் தோழர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மத்தியக் குழு, மாநிலக் குழுத் தோழர்கள் மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர்.  3-10-2011 காலை தோழரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.  தோழர் ஸ்டாலின் அடக்கம் நடந்த இடத்தில் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன்  தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் தமிழரசன், பொதுச் செயலாளர் ஜெ.சிதம்பரநாதன்,  மத்தியக்குழு உறுப்பினர் சுகுந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி,  அருணாசலம், ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வேல்முருகன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
      மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் ராமச்சந்திரன், ஹரி,இ.க.க(மா-லெ)விடுதலை மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ்,  சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இராமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகன்ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரபு, தமிழ்ப் புலிகள் நிர்வாகி தாஸ், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என். குணசேகரன், தங்க.தமிழ்வேலன், நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வீரபாண்டி, டி.டி.யூ.சி. மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் இராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சங்கரன், போஸ்,  தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக மாநிலத் துணைத் தலைவர் சிற்பிமகன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சவரிராஜன், உப்பள சங்க துணைத் தலைவர் முத்து, மீன்பிடி-சங்குகுளி சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன், இராசாக்குட்டி, பிரபாகரன், வெள்ளைச்சாமி, சுரேஷ் மற்றும் பல்வேறு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் சென்னையிலிருந்து இரங்கல் தெரிவித்திருந்தார். தோழர் ஸ்டாலின்   குடும்பத்தினருக்கு கட்சி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!


செப் 11,201 தொடங்கி கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம், இடிந்தகரையில் 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியதும் தினசரி ஆயிரக்கணக்கான மீனவர்கள் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோர மீனவக் கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். மீனவர்கள் மட்டுமல்லாமல் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். இடிந்தகரைக்கும், வழியாகவும் செல்லக்கூடிய பேருந்துகளை தமிழக அரசு நிறுத்திவிட்டதையும் தாண்டி மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று, ஆதரித்து வந்தனர். --
உண்ணாவிரத 7 ஆவது நாளான செப் 17,2011 அன்று அனைததுத் தமிழகப் பெண்கள் கழக நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் துளசி, தமிழக இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜான்சன் மற்றும் தோழர்களுடன் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் இடிந்த கரைக்குச் சென்று ஆதரித்து உரையாற்றினார். தனது உரையில் "இராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது ரஷ்யாவுடனான 1988 ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. 1989 ல் தூத்துக்குடி கூடங்குளம் நாகர்கோவில் நெல்லை சைக்கிள் பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டதும், கூடங்குளத்தில் தான் தாக்கப்பட்டதையும் பதிவு செய்தார். 2002ல் நாகர்கோவில் பேரணியில் நடநத துப்பாக்கிச் சூடு, மீண்டும் போராட்டம் ஓய்ந்து போகாமல் 2007ல் மறுபடியும், தற்போது ஓயாத அலைகளாக இடிந்தகரையில் நடைபெறும் போராட்டம் டில்லி வரை இடிக்கட்டும்" என வாழ்த்திப் பேசியதுடன், செப் 15 மதுரையில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்ட முடிவின்படி ‘‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்’’ என உரையாற்றினார்.
அடுத்துப் பேச வந்தார் தி.மு.க வின் இராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு. அவரைத் திரும்பிப் போக வலியுறுத்தி எதிர்ப்புக் கிளம்பியது. பேச விடாமல் மக்க்ள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கடுமையாக இருந்தது. பலத்த எதிர்ப்புக்கிடையிலேதான் அவர் பேசினார். போராட்டக் குழு சார்பில் அறிவிப்பாளர் அவரை உடனே போகவிடாமல் நிறுத்தி தி.மு.க தலைமைக்கு இரண்டு நிபந்தனைகளை அறிவித்தார். 1. தி.மு.க தலைமை அணு உலை மூட அறிக்கை வெளியிட வேண்டும். 2. மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தி-.மு.க தலைவர் மு.கருணாநிதி அணு உலை சம்பந்தமான நிலைப்பாட்டைக் கூறாமல், " மக்களுக்கு விரோதமாக எப்போதும் தி.மு.க நடந்து கொள்ளாது " எனக் கூறித் தப்பித்துள்ளார். 1988 க்குப் பிறகு இருமுறை ஆட்சியிலிருந்தும், 2007 மீண்டும் கூடங்குளம் ஒப்பந்த எதிர்ப்பை முறியடிக்க நெல்லை ஆட்சியாளர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டங்கள் எனும் பெயரில் சதி செய்தவர் மு.க.
செப் 16 அன்று முதலமைச்சர் ஜெ. வெளியிட்ட அறிக்கை 17 ம் தேதி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. ‘‘ 1000 மொகவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் இயங்கினால் தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். . . நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத இரண்டாம் நிலை மண்டலத்தில் இந்த அணு மின் நிலையம் உள்ளது. . . . கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சுனாமி போன்ற
இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அணு மின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்’’ என முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகள் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டார்.
செப் 19 அன்று வழக்கம் போல் தலை கீழாக முடிவெடுத்து ஒரு அறிக்கை வந்தது. தென் மாவட்ட மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளை எளிமைப் படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசியலாக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். " மத்திய அரசு கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முயற்சி செய்ய வில்லை. அனைத்துக் கட்சிக் குழுவை டில்லிக்கு அனுப்புவோம், மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அணு உலை இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் " என்று கோரினார். ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்? மத்திய அரசு நிறுவனம். மாநில அரசால் முடிவெடுக்க முடியாது, மத்திய அரசு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறுபவர். செப் 16 அன்று ஏன் அப்படி அறிக்கை விட்டார். இவர்களுக்கு எல்லாமே ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல். மாநில அரசு, மத்திய அரசு பிரச்சனைகள். ஆனால் போராடும் மக்களுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமைப் பிரச்சனை. மொத்தத் தேவையில் 3 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கான இடமே அணு உலைக் கூடங்கள். இவர்களின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின், மீனவர்களின் வாழ்வுரிமைக்காகத் தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் பரவலாகப் படித்தவர்கள், அறிவார்ந்த சனநாயகச் சிந்தனையாளர்கள், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான சிந்தனையாளர்கள் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஏகாதிபத்திய எடுபிடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முன்னெடுப்போம்!