திங்கள், 8 செப்டம்பர், 2014

ஆகஸ்ட் -3, 2014 பிறந்த நாள்! 55 - வயது.

ஆம் இன்று ஆகஸ்ட் - 3 எனது பிறந்த நாள்- வயது 55.
மீனாம்பாள்
D/o மா.பரமசிவம்- பாப்பாத்தியம்மாள் - மதுரை.
தசரதன்
S/o சுப.மீனாட்சிசுந்தரம்- லெட்சுமியம்மாள் -சிவகங்கை
ஆம்! எனது தாய்-தந்தை 

D.பாண்டியராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டு, 1977 முதல் த.பாண்டியன் எனப் பின்னர் 2007 முதல் மீ.த.பாண்டியன் ஆக முகநூலில் மார்க்ஸ் பாண்டியனாக பரிணாமம். எனக்கு இம்மண்ணில் தவழ, விளையாட, பேச, கொஞ்ச, கோபப்பட, சிரிக்க, அழுக, கல்விகற்க, கலைஞனாக, போராட, நட்பு, தோழமை பாராட்ட வாய்ப்பளித்த நாள். கடந்த ஆண்டு முகநூலில் எனது பிறந்த நாளை வெளிக்காட்டாமல் மறைத்தேன். 1959 ஆகஸ்ட்- 3 ல் பிறந்த எனக்கு வயது 55 .
நாரதன் பெண்ணாக மாறி உறவாடிப் பெற்றெடுத்த 60 வருடங்களை நினைவூட்டி 60க்கு60 என மீண்டும் தாலி கட்டுவது இந்து மத சடங்காச்சாரம். நாம் கொஞ்சம் வித்தியாசமாக 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 எனக் கொண்டாடலாம். 1976 இறுதியிலிருந்து நான் நாத்திகன். டாக்டர் கோவூர் எனது ஆசான். பின்னர் 1977 நடுவில் நண்பன் பி.வரதராசன் மூலம் பகுத்தறிவாளர் கழகம். தொடர்ந்து திராவிடர் கழகம். ஆடி 18 ஐ எனது அம்மாவும், ஆகஸ்ட் 3 ஐ நானும் எனப் பஞ்சாயத்துதான். சில ஆண்டுகள் எனக்கு இரண்டு பிறந்த நாட்கள்.
நான்கு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவன் நான். எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடைகள்.
பிறந்த நாள் அன்று கட்டாயம் கோவிலுக்கு எனது அம்மாவுடன் சென்றாக வேண்டும். 1977 லிருந்து கோவிலுக்கு வர மறுக்கும் போராட்டம். அம்மாவின் பக்திக்கும் எனது பகுத்தறிவுக்கும் அம்மா இறக்கும் வரைக்கும் போராட்டம்தான். அம்மா மீனாம்பாள் -அப்பா தசரதன் இருவரின் திருமணமே சமூக மீறல்தான். சாதி மீறல் இல்லை. அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் கூத்தகுடி சண்முகம் அவர்களுடன் நடமாடியவர். அப்பாவின் அம்மா அதாவது லெட்சுமி அம்மாள் அப்பத்தாவின் ஊர் கூத்தகுடி. அப்பாவின் தந்தையார் மீனாட்சி சுந்தரம் அவர்கள் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு மலேசியா சென்று அங்கொரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டதால் சிவகங்கையை விட்டு தனது ஊரான கூத்தகுடியில் பிள்ளைகள் வளர்த்தார்.
சிவகங்கையை விட்டு மதுரை வந்து எனது அம்மாவை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர், காரைக்குடி என கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளின் துணையுடன் அலைந்து, திரிந்து பின்னர் மதுரையில் எனது அம்மா வீட்டில் மதுரையில் பெற்றேடுத்தனர். அம்மா-அப்பா இருவரிடம் வளர்ந்ததை விட எனது அம்மாச்சி- தாத்தா வீட்டில் வளர்ந்தவன். மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி, அருப்புக்கோட்டை சைவபானு ஷத்திரிய உயர்நிலைப் பள்ளியில் 4, மற்றும் 5ஆம் வகுப்பு, மதுரை தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, 7 முதல் 11 வரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் என எனது பள்ளிக் காலம். மதுரை யாதவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லூரியில் மூன்றாண்டு விலங்கியல். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது! நான்கு நாட்கள் மதுரை மத்திய சிறையில். கல்லூரி முடித்த கையோடு திராவிடர் கழகம் அறிவித்த மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கைது! சேலம் சிறையில் 10 நாட்கள்.
1982 முதல் மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அறிமுகத்தின் வழி தோழர் டி.எஸ்.எஸ். மணி மூலம் சி.பி.ஐ(எம்-எல்) கட்சியில் தொடர் செயல்பாடு. 1984இல் சாதி மறுப்பு, மலையாளப் பெண்ணுடன் எனது திருமணம். மா-லெ கட்சித் தொடர்புக்குப்பின் எனது பிறந்த நாள் எனும் நிகழ்வுகளிலிருந்து விடுபட்டேன். எனது அன்புத் தங்கைகள், நண்பர்கள் இன்றும் வாழ்த்துச் சொல்ல அழைப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அரசியல், பண்பாட்டுப் போராளியாக நான் என்னை தகவமைத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் தந்தையரின் சனநாயகத் தன்மையே எனக்குள் சனநாயத்திற்கான குணத்தை வளர்த்தது. ஆம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எனது வளர்ச்சிக்கு காரணமாயினர். 1992இல் மணமுறிவு. தேவகோட்டையும், திருவாடானையும், ஆவுடையார்கோவிலும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களத்தால் என்னைப் புடம் போட்டன. 1997இல் மீண்டும் திருமணம்-சாதி மறுப்பு, மத மறுப்பு. 1993 முதல் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், மக்கள் கலை விழாக்களும் எமக்கு உரமூட்டி அடையாளங்களாயின.
2006 ஜூன் மாதம் சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னந்தனியனாய் தளராமல், த.ம.ப.க.வின் மதுரை, நெல்லை - மக்கள் கலை விழாக்கள், தினகரன் அலுவலக எரிப்புப் படுகொலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, மக்கள் சனநாய விடுதலை முன்னணியாக, பின்னர் ஓராண்டுகழித்து 2007ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை உருவாக்கப்பட்டு, தற்போது புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என உங்கள் முன்னே கடமையாற்றுகிறோம். 


தியாகிகள் சேத்தூர் இராயப்பன், மாடக்கோட்டை சுப்பு, மற்றும் மறைந்த தோழர்கள் ஆர்.கே, கோட்டைச்சாமி, ஏ.வி, ஸ்டாலின், செல்வராஜ்ஆகியோருடன் உறவாடி, களமாடி நீண்டகாலமாக எனது கடந்த காலத்தில் தோழர்கள் நமசு, டேவிட், மதிவாணன், பாலசுந்தரம், அண்ணாதுரை, சிதம்பரநாதன் இவர்களோடு அமைப்பு ரீதியாக ஒட்டியும், உரசியும், சமூகத் தளத்தில் தோழர்கள் எழுத்தாளர் ஜவகர், மருத்துவர் கண்ணன், பி.வரதராசன், தமிழ்ப்பித்தன், தளபதி, மருத்துவர் - ஆசிரியர் இராமசாமி, இராமானுஜம், என எனது பயணம் தொடர்கிறது. அன்புச் செல்வங்கள் இராதிகாவும், வானவில்லும் எனது வாழ்க்கையின் வசந்தங்களாகவும், எனது சக போராளியாக, துணையாக ஆரோக்கியமேரியும் .......55 எனக்குள் கடந்த காலத்தைக் கிளறுகிறது.
2008இல் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை தோழமைகளின் துணையுடன் எனக்கு நடந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எனது தாய் மீனாம்பாள் 16-2-1999 அன்று மறைந்தார். எனது தந்தை தசரதன் 28-12-2010 அன்று மறைந்தார். மீ.த. எனும் முன்னேழுத்தைத் தவிர எனது தாய், தந்தையருக்கு நான் எதுவும் செய்தது கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. எமது மக்களுக்கான கடமையே உயர்ந்த பட்சக் கடமையாக நேற்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன், என்றும் நினைப்பேன். 1977 தொடங்கி இயக்க ரீதியாக, 1985 முதல் முழு நேர அரசியல் ஊழியனாக தொடர்கிறேன்.... தொடர்வேன்....

2014 புதிய பயணம்

2012 நவம்பரில் டெல்லி சென்று வந்த செய்திகளைப் பதிவு செய்த பின்னர் நான் 2013 முழுவதும் 2014 இன்று வரை முகநூலில் பதிவதோடு நின்று விட்டேன். மீண்டும் தொடர்கிறேன். கடந்த கால வாழ்க்கை பற்றி , எனக்குள் தோன்றும் கருத்து, அரசியல், அனுபவங்கள், எனத் தொடர்கிறேன்.

1977 - 2001 திராவிடர் கழகத்தில்  தொடர் செயல்பாடுகள். 2001 மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தோழர்களுடன் கைது செய்யப்பட்டு மதுரையிலிருந்து சேலம் மத்திய சிறையில் 10 நாட்கள். சேலம் சிறை போதிமரம் போல பல்வேறு செய்திகளை எனக்குக் கொண்டு வந்து சேர்த்தது. நாகர் கோவிலைச் சேர்ந்த செல்லூர் செல்லப்பா! தலைமை மட்டம் வரை உள்ள சுயநலத் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஏற்கெனவே எனக்குள் இருந்த இடதுசாரிச் சார்பும், ஈழ ஆதரவு நிலைப்பாடும் ஈரோஸ் தொடர்பில் மதுரையில் தேசிய இன விடுதலை நிலைப்பாடு கொண்ட புரட்சிகர அமைப்பாக இயங்கினோம். பல்வேறு புரட்சிகர மா-லெ இயக்கங்களின் அறிமுகங்கள். வாசிப்புகள்!

மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் - ஓவியா தங்கை, மச்சான் உறவாக எனது வாழ்வில் புதிய வசந்தம். வசந்தத்தின் இடிமுழக்கம் என நக்சல்பாரி அரசியல் அமைப்பு ஏ.பி.வி மூலம்  அறிமுகமானது. அர்ப்பணிப்பு, தியாகம், வள்ளி நாயகம் மச்சானிடம்  கற்றுக் கொண்டது. டி.எஸ்.எஸ். மணி மூலம் அமைப்பில் இணைந்தேன். எனது பொது வாழ்வின் அடுத்த கட்டம் தொடங்கியது. தொடர்ந்தது.

2002 ஆம் ஆண்டிலிருந்து சி.பி.ஐ(எம்-எல்) விடுதலையின் பல்வேறு அரங்குகளில், மாவட்ட, மாநில  மட்டங்களில் கட்சி ஊழியனாக இயங்கிய நான், 2006 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) விடுதலையின் தலைவர்களின் சதித்தனத்தால்  திட்டமிட்டு வெளியேற்றப்பட்டேன். மீண்டும் திரும்புவதில்லை என முடிவெடுத்தேன். மா-லெ நீரோட்டத்தில் அனைத்திந்திய அமைப்பில் 25 ஆண்டுகள். எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் ஒரு நீண்ட கட்டம் முடிந்தது.

மீண்டும் வேர்களைத் தேடி .... தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகச் செயல்பாடுகளாக  2007 மார்ச் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் தூக்குமேடை நாளையொட்டி மதுரையில் " மக்கள் கலை விழா ",   2007ஆகஸ்ட் - 9 அன்று  " வெள்ளையனே வெளியேறு " நாளில் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக முதல் மாநாடும், " மக்கள் கலை விழா " நடத்தினோம்.
2007 டிசம்பர் - 25  வெண்மணிப் படுகொலை நாளில் பின் வெண்மணி - கீழைத்தீ தோழர் பாட்டாளி எழுதிய நாவல் திருச்சியில் வெளியிட்டோம்.

2007 சி.பி.ஐ.(எம்-எல் ) விடுதலையிலிருந்து தோழர் அண்ணாதுரை, தோழர் சிதம்பரநாதன் தலைமையில் வெளியேறி வந்தனர். 2007அக்டோபர் 14 அன்று சென்னை - திருவொற்றியூரில் கூடினோம். மக்கள் விடுதலை இதழ் பிறந்தது. இ,க.க ( மா-லெ ) மக்கள் விடுதலையாகப் பரிணமித்தது. 2010  ஏப்ரல் - 22,23 சென்னை - திருவொற்றியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு முதல் மாநாடு நடத்தினோம்.  தமிழ்மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டேன்.
மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து வெளியேறிய தேசிய முன்னணி இதழ் - பாலன் தலைமையிலான அமைப்பினருடன் ஒன்றிணைந்து ஈழ ஆதரவுப் போராட்டங்கள், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றிய இயக்கப் போக்கில் 2013 தொடக்கத்தில் இணைந்து ஓரமைப்பாக " கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ )மக்கள் விடுதலை, தமிழ்நாடு " அமைப்பை உருவாக்கினோம். அமைப்பின் பொதுச் செயலாளராக இயங்கினேன். 2014 சூலை 26, 27, 28 எமது கட்சியின் ஒற்றுமை மாநாடு சென்னை- திருவொற்றியூரில் நடத்தி முடித்ததோடு என்னுடைய பயணத்தில் ஒருகட்டம் முடிந்து அடுத்த கட்டம் தொடங்குவதாகக் கருதுகிறேன்.  

வியாழன், 27 டிசம்பர், 2012

டெல்லி - நவ-22,23-2012

நவம்பர்-22, 23 - 2012 அன்று டெல்லி, தீன் தயாள் மார்க், காந்தி அமைத்த அறக்கட்டளை அரங்கில் இ.க.க (மா-லெ) மக்கள் விடுதலை அங்கமாகவுள்ள NCC - National Campaign Committee - தேசிய பிரச்சாரக் குழு  பயிற்சிப் பட்டறை தலைவர் எஸ்.பி.சுக்லா தலைமையில், நடைபெற்றது. எமது கட்சியின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் தோழர் ஜெய.சிதம்பரநாதன் அவர்களும் கலந்து கொண்டோம்.
சமூக நீதி: தலித்ஸ், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நடப்புப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் திரு பி.எஸ்.கிருஷ்ணன் உரையாற்ற, உ.பியைச் சார்ந்த தாராபுரி விவாதத்தை முன்வைத்தார்.
நிலம், சுரங்கங்கள்,கனிமங்கள் வாழ்வுரிமைப் பிரச்சனைகள் எனும் தலைப்பில் கே.பி.சக்சேனா உரையாற்றினார்.கர்நாடகாவைச் சேர்ந்த ஹேர்மந்த் விவாதத்தை முன்வைத்தார்.
சி.பி.ஐ(எம் ) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நடப்பு அரசியல் சூழலும் -பாதையும் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மத்திப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா மேத்தா நிலம் குறித்த விவாதத்தை முன்வைத்தார்.டெல்லியைச் சேர்ந்த ஆனந்த ஸ்வரூப் வர்மா சனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றி உரையாற்ற உ.பியைச் சேர்ந்த அகிலேந்தர் பிரதாப் சிங் விவாதத்தை முன்வைத்தார்.

 சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷீலா முஸ்தபா முன்வைத்தார்.
வேலையின்மை குறித்து லால் பகதூர் சிங் முன்வைத்தார். இறுதியில் நடைபெத்ர் அரசிய விவாதத்தில் " புரட்சிகர அரசியல் மேடையின் அவசியம் குறித்து விவாதிக்கப் பட்டது. அனைத்திந்திய மக்கள் முன்னணி " -ALL INDIA PEOPLE'S FRONT  எனும் அமைப்பை பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.








வெள்ளி, 16 நவம்பர், 2012

தோழர் ஏ.வி 2வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம்.

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற் சங்க தலைவர், ஏ.வி என அழைக்கப்படும் தோழர் அ.வெங்கடேசன் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.

 தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் சுகுந்தன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் இ.க.க(மா-லெ)மக்கள் விடுதலை கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எஸ்.அண்ணாதுரை சங்கக கோடி ஏற்றி வைக்க, முதுபெரும் தோழர் கனிபாய் (எ) நல்லசிவம் தோழர் அ.வெங்கடேசன் அவர்களது படத்தைத் திறந்து வைத்தார். பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதன், மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கருணாகரன்,சங்க பொருளாளர் தோழர் வழக்குரைஞர் கார்க்கிவேலன் ஆகியோர் உரையாற்றினர்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

அக்டோபர்-29 கோட்டை முற்றுகை



இடிந்த கரையில் செப்-27 அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, அணு உலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கூடி முடிவெடுத்த அக்டோபர்- 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோர்:
தலைமை: கொளத்தூர் மணி, ஒருங்கிணைப்பாளர்,
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தொடக்கி வைத்தவர்: அய்யா பழ. நெடுமாறன், தமிழர் தேசிய இயக்கம்




நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
























மீ.த.பாண்டியன்-இ.க.க( மா.லெ) மக்கள் விடுதலை

கண்டன உரை :
வை.கோ – ம.தி.மு.க
தொல். திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்
பேரா. ஜவாஹிருல்லா – மனித நேய மக்கள் கட்சி
தெகலான் பாகவி – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா
காலித் முகமது – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
வேல்முருகன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பெ.மணியரசன் – தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி
பாலசுந்தரம் – சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை
குணங்குடி அனீபா – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
வியனரசு – பாட்டாளி மக்கள் கட்சி
கே.எம். செரீப் – தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி
அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
தியாகு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
செந்தில் - சேவ் தமிழ்ஸ்
செல்வி – தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழ்நேயன் – தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
பி.டி. சண்முகம் – சி.பி.ஐ(எம்–எல்) ரெட்ஸ்டார்
கிறிஸ்டினா – பெண்கள் முன்னணி
மோகன்ராஜ் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
கபீரியேல் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு
ஜெ. கோசுமணி – தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

மற்றும் பங்கேற்ற அமைப்புகள்:
தமிழகப் படைப்பாளிகள் முன்னணி, பூவுலகின் நண்பர்கள், பி.யு.சி.எல்,
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, மே 17 இயக்கம்,
தியாகி இமானுவேல் பேரவை, விடுதலைத் தமிழ்ப் புலிகள்,
கொங்கு இளைஞர் பேரவை, தமிழ்ப்புலிகள், காஞ்சி மக்கள் மன்றம்,
புரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி,
தாளாண்மை உழவர் இயக்கம், இந்திய மீனவர் சங்கம்,
தமிழக மக்கள் விடுதலை முன்னணி, அகில இந்திய மீனவர் சங்கம்,
தமிழர் உரிமை இயக்கம், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,
புரட்சிகர இளைஞர் முன்னணி, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம்,
மனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழக இயற்கை உழவர் இயக்கம் மற்றும் அணு உலை எதிர்ப்பு உணர்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்.