திங்கள், 8 செப்டம்பர், 2014

ஆகஸ்ட் -3, 2014 பிறந்த நாள்! 55 - வயது.

ஆம் இன்று ஆகஸ்ட் - 3 எனது பிறந்த நாள்- வயது 55.
மீனாம்பாள்
D/o மா.பரமசிவம்- பாப்பாத்தியம்மாள் - மதுரை.
தசரதன்
S/o சுப.மீனாட்சிசுந்தரம்- லெட்சுமியம்மாள் -சிவகங்கை
ஆம்! எனது தாய்-தந்தை 

D.பாண்டியராஜன் எனப் பெயர் சூட்டப்பட்டு, 1977 முதல் த.பாண்டியன் எனப் பின்னர் 2007 முதல் மீ.த.பாண்டியன் ஆக முகநூலில் மார்க்ஸ் பாண்டியனாக பரிணாமம். எனக்கு இம்மண்ணில் தவழ, விளையாட, பேச, கொஞ்ச, கோபப்பட, சிரிக்க, அழுக, கல்விகற்க, கலைஞனாக, போராட, நட்பு, தோழமை பாராட்ட வாய்ப்பளித்த நாள். கடந்த ஆண்டு முகநூலில் எனது பிறந்த நாளை வெளிக்காட்டாமல் மறைத்தேன். 1959 ஆகஸ்ட்- 3 ல் பிறந்த எனக்கு வயது 55 .
நாரதன் பெண்ணாக மாறி உறவாடிப் பெற்றெடுத்த 60 வருடங்களை நினைவூட்டி 60க்கு60 என மீண்டும் தாலி கட்டுவது இந்து மத சடங்காச்சாரம். நாம் கொஞ்சம் வித்தியாசமாக 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 எனக் கொண்டாடலாம். 1976 இறுதியிலிருந்து நான் நாத்திகன். டாக்டர் கோவூர் எனது ஆசான். பின்னர் 1977 நடுவில் நண்பன் பி.வரதராசன் மூலம் பகுத்தறிவாளர் கழகம். தொடர்ந்து திராவிடர் கழகம். ஆடி 18 ஐ எனது அம்மாவும், ஆகஸ்ட் 3 ஐ நானும் எனப் பஞ்சாயத்துதான். சில ஆண்டுகள் எனக்கு இரண்டு பிறந்த நாட்கள்.
நான்கு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவன் நான். எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம். புத்தாடைகள்.
பிறந்த நாள் அன்று கட்டாயம் கோவிலுக்கு எனது அம்மாவுடன் சென்றாக வேண்டும். 1977 லிருந்து கோவிலுக்கு வர மறுக்கும் போராட்டம். அம்மாவின் பக்திக்கும் எனது பகுத்தறிவுக்கும் அம்மா இறக்கும் வரைக்கும் போராட்டம்தான். அம்மா மீனாம்பாள் -அப்பா தசரதன் இருவரின் திருமணமே சமூக மீறல்தான். சாதி மீறல் இல்லை. அப்பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் கூத்தகுடி சண்முகம் அவர்களுடன் நடமாடியவர். அப்பாவின் அம்மா அதாவது லெட்சுமி அம்மாள் அப்பத்தாவின் ஊர் கூத்தகுடி. அப்பாவின் தந்தையார் மீனாட்சி சுந்தரம் அவர்கள் கட்டிய மனைவி, பிள்ளைகளை விட்டு மலேசியா சென்று அங்கொரு குடும்பத்தை உருவாக்கிக் கொண்டதால் சிவகங்கையை விட்டு தனது ஊரான கூத்தகுடியில் பிள்ளைகள் வளர்த்தார்.
சிவகங்கையை விட்டு மதுரை வந்து எனது அம்மாவை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர், காரைக்குடி என கம்யூனிஸ்ட் கட்சி உறவுகளின் துணையுடன் அலைந்து, திரிந்து பின்னர் மதுரையில் எனது அம்மா வீட்டில் மதுரையில் பெற்றேடுத்தனர். அம்மா-அப்பா இருவரிடம் வளர்ந்ததை விட எனது அம்மாச்சி- தாத்தா வீட்டில் வளர்ந்தவன். மதுரை வீரமாமுனிவர் நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி, அருப்புக்கோட்டை சைவபானு ஷத்திரிய உயர்நிலைப் பள்ளியில் 4, மற்றும் 5ஆம் வகுப்பு, மதுரை தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு, 7 முதல் 11 வரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் என எனது பள்ளிக் காலம். மதுரை யாதவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, மதுரை தியாகராசர் கல்லூரியில் மூன்றாண்டு விலங்கியல். கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது! நான்கு நாட்கள் மதுரை மத்திய சிறையில். கல்லூரி முடித்த கையோடு திராவிடர் கழகம் அறிவித்த மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் கைது! சேலம் சிறையில் 10 நாட்கள்.
1982 முதல் மறைந்த தோழர் ஏ.பி.வள்ளிநாயகம் அறிமுகத்தின் வழி தோழர் டி.எஸ்.எஸ். மணி மூலம் சி.பி.ஐ(எம்-எல்) கட்சியில் தொடர் செயல்பாடு. 1984இல் சாதி மறுப்பு, மலையாளப் பெண்ணுடன் எனது திருமணம். மா-லெ கட்சித் தொடர்புக்குப்பின் எனது பிறந்த நாள் எனும் நிகழ்வுகளிலிருந்து விடுபட்டேன். எனது அன்புத் தங்கைகள், நண்பர்கள் இன்றும் வாழ்த்துச் சொல்ல அழைப்பார்கள். சமூக மாற்றத்திற்கான அரசியல், பண்பாட்டுப் போராளியாக நான் என்னை தகவமைத்துக் கொள்ள எனக்கு வாய்ப்பளித்த எனது தாய் தந்தையரின் சனநாயகத் தன்மையே எனக்குள் சனநாயத்திற்கான குணத்தை வளர்த்தது. ஆம். நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எனது வளர்ச்சிக்கு காரணமாயினர். 1992இல் மணமுறிவு. தேவகோட்டையும், திருவாடானையும், ஆவுடையார்கோவிலும் சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக் களத்தால் என்னைப் புடம் போட்டன. 1997இல் மீண்டும் திருமணம்-சாதி மறுப்பு, மத மறுப்பு. 1993 முதல் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும், மக்கள் கலை விழாக்களும் எமக்கு உரமூட்டி அடையாளங்களாயின.
2006 ஜூன் மாதம் சி.பி.ஐ(எம்-எல்) லிபரேசன் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னந்தனியனாய் தளராமல், த.ம.ப.க.வின் மதுரை, நெல்லை - மக்கள் கலை விழாக்கள், தினகரன் அலுவலக எரிப்புப் படுகொலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, மக்கள் சனநாய விடுதலை முன்னணியாக, பின்னர் ஓராண்டுகழித்து 2007ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை உருவாக்கப்பட்டு, தற்போது புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு என உங்கள் முன்னே கடமையாற்றுகிறோம். 


தியாகிகள் சேத்தூர் இராயப்பன், மாடக்கோட்டை சுப்பு, மற்றும் மறைந்த தோழர்கள் ஆர்.கே, கோட்டைச்சாமி, ஏ.வி, ஸ்டாலின், செல்வராஜ்ஆகியோருடன் உறவாடி, களமாடி நீண்டகாலமாக எனது கடந்த காலத்தில் தோழர்கள் நமசு, டேவிட், மதிவாணன், பாலசுந்தரம், அண்ணாதுரை, சிதம்பரநாதன் இவர்களோடு அமைப்பு ரீதியாக ஒட்டியும், உரசியும், சமூகத் தளத்தில் தோழர்கள் எழுத்தாளர் ஜவகர், மருத்துவர் கண்ணன், பி.வரதராசன், தமிழ்ப்பித்தன், தளபதி, மருத்துவர் - ஆசிரியர் இராமசாமி, இராமானுஜம், என எனது பயணம் தொடர்கிறது. அன்புச் செல்வங்கள் இராதிகாவும், வானவில்லும் எனது வாழ்க்கையின் வசந்தங்களாகவும், எனது சக போராளியாக, துணையாக ஆரோக்கியமேரியும் .......55 எனக்குள் கடந்த காலத்தைக் கிளறுகிறது.
2008இல் பை-பாஸ் இதய அறுவை சிகிச்சை தோழமைகளின் துணையுடன் எனக்கு நடந்து ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. எனது தாய் மீனாம்பாள் 16-2-1999 அன்று மறைந்தார். எனது தந்தை தசரதன் 28-12-2010 அன்று மறைந்தார். மீ.த. எனும் முன்னேழுத்தைத் தவிர எனது தாய், தந்தையருக்கு நான் எதுவும் செய்தது கிடையாது. அதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. எமது மக்களுக்கான கடமையே உயர்ந்த பட்சக் கடமையாக நேற்றும் நினைத்தேன், இன்றும் நினைக்கிறேன், என்றும் நினைப்பேன். 1977 தொடங்கி இயக்க ரீதியாக, 1985 முதல் முழு நேர அரசியல் ஊழியனாக தொடர்கிறேன்.... தொடர்வேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக