புதன், 18 ஜூலை, 2012

பெ.தி.க. தோழர் பழனி நினைவேந்தல்

ஆதிக்க எதிர்ப்புப் போராளி பெரியார் திராவிடர் கழக கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.பழனி, சி.பி.ஐ கட்சியைச் சார்ந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கும்பலால் கொலை செய்யப்பட்டார். 15-07-2012 அன்று மாலை ஓசூர்-இராயக்கோட்டையில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் பெ.தி.க.தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், மே 17 இயக்கம்- திருமுருகன், தலித் விடுதலைக் கட்சி- செங்கோட்டையன், தமிழக மக்கள் உரிமைக் கழக- வழக்குரைஞர் புகழேந்தி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி- வழக்குரைஞர் ரஜினிகாந்த், சி.பி.ஐ (எம்.எல்)- விந்தைவேந்தன், சேவ் தமிழ்ஸ்- செந்தில், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்- அரங்க குணசேகரன், அயோத்திதாசர் ஆய்வு நடுவம்- ராமலிங்கம், தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு- குணா, மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்

தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம்

இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினரும், சனநாயகத் தொழிற்சங்க (DTUC) மாநிலச் செயலாளரும், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவருமான தோழர் செல்வராஜ் நினைவேந்தல் கூட்டம் 10-07-2012 அன்று மாலை நெய்வேலி பவுனாம்பால் நகரில் நடைபெற்றது. 

கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் நா.குணசேகரன்  தோழர் செல்வராஜ் படத்தைத் திறந்து வைத்தார். 

சனநாயகத் தொழிற் சங்க மையப் பொதுச் செயலாளர்  தோழர் சுகுந்தன், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்வேலன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்- கோ.சீனிவாசன், அருணாசலம், கருணாகரன், மற்றும் என்.எல்.சி.ரவிச்சந்திரன், சவகர், நவநீதன், ராமலிங்கம், மனோகரன், கென்னடி, கலைமணி, ராஜ்குமார், லட்சுமிநாராயணன், வழக்குரைஞர் கென்னடி மற்றும் தொ.மு.ச. சார்பில் திரு விக்கிரமன், உத்தராசு ஆகியோர் தங்களது நினைவுகளைப் பதிவு செய்தனர். 

கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை கட்சி சார்பில் தோழர் செல்வராஜ் துணைவியார் குணா அவர்களிடம் நிதி அளித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ராமர் நன்றி கூறினார்

புதன், 4 ஜூலை, 2012

தோழர் செல்வராஜ் - வீர வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர், சனநாயகத் தொழிற்சங்க மைய (DTUC) மாநிலச் செயலாளர், என்.எல்.சி. தொழிலாளர் ஒருமைப்பாட்டுச் சங்கத் தலைவர்- தோழர் செல்வராஜ் 25-06-2012 அன்று சென்னை-அடையார் மலர் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார்.
28-05-2012 அன்று என்.எல்.சி. நகரியத்திற்குள் விபத்தில் கடுமையான தலைக்காயம் மற்றும் கால எழும்பு முறிவு ஏற்பட்டது. என்.எல்.சி. மருத்துவமனையில் முதலுதவி கூட வழங்கப்படவில்லை. கடலூர், பாண்டிச்சேரி என அலைந்துவிட்டு சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனையில் முயற்சி நடந்து இறுதியாக அடையார்- மலர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நெய்வேலித் தொழிலாளர்களின், கட்சித் தோழர்களின், நண்பர்கள், குடும்பத்தினரின் கடுமையான முயற்சியால் காப்பாற்றப்பட்டு சூலை மூன்றாம் வாரம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். 24-06-2012 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மீண்டும் சென்னை மலர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 25-06-2012 அன்று காலை உயிர் பிரிந்தது. 26-06-2012 அன்று மாலை மாலை என்.எல்.சி. நகரியம் முழுவதும் இறுதி ஊர்வலம் வீரவணக்க முழக்கங்களுடன், என்.எல்.சி. தலைமை அதிகாரி அன்சாரியைக் கைது செய்! எனும் முழக்கங்களுடன் நூற்றுக்கணக்கான ஊர்திகளில் தொழிலாளர்கள், கட்சித் தோழர்கள் அணிவகுக்க நடைபெற்றது. பல்வேறு அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் கலந்து கொண்டு தோழருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.

தலைமை அதிகாரி அன்சாரி மீது பத்தாயிரம் கோடி ஊழலை எதிர்த்து இயக்கம் நடத்தியதால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். நகரியத்திற்குள் குடியிருந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். குழந்தைகளை நகரியப் பள்ளியில் படிக்க அனுமதிக்க மறுத்தனர். பணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னும் தோழர் செல்வராஜ் உச்ச நீதி மன்றத்தில் இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரநாதனுடன் இணைந்து அன்சாரி மீது வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற வழிகாட்டுதலுடன் மத்திய புலனாய்வுத் துறை (CBI) நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. ஊழல் மன்னன் அன்சாரி உயர் நீதி மன்றத்தில் தடைபெற்று தப்பினான். 30-06-2012 அன்று ஓய்வு பெற்ற மறுநாள் சூலை ஒன்றாம் தேதி குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டதாக தொலைகாட்சி மற்றும் செய்திப்பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின், கிராமப்புற உழைக்கும் மக்களின் போராட்டங்களில் ஈடுபட்ட தோழர் செல்வராஜ் 80களில் இந்திய மக்கள் முன்னணியின் தலைவர்களில் ஒருவராக செயலாற்றியதால் IPF செல்வராஜ் என இறுதி வரையிலும் அழைக்கப்பட்டார்.