செவ்வாய், 20 செப்டம்பர், 2011

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!


செப் 11,201 தொடங்கி கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி நெல்லை மாவட்டம் இராதாபுரம் வட்டம், இடிந்தகரையில் 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியதும் தினசரி ஆயிரக்கணக்கான மீனவர்கள் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோர மீனவக் கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். மீனவர்கள் மட்டுமல்லாமல் கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். இடிந்தகரைக்கும், வழியாகவும் செல்லக்கூடிய பேருந்துகளை தமிழக அரசு நிறுத்திவிட்டதையும் தாண்டி மக்கள் பங்கெடுத்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று, ஆதரித்து வந்தனர். --
உண்ணாவிரத 7 ஆவது நாளான செப் 17,2011 அன்று அனைததுத் தமிழகப் பெண்கள் கழக நெல்லை மாவட்ட அமைப்பாளர் தோழர் துளசி, தமிழக இளைஞர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் ஜான்சன் மற்றும் தோழர்களுடன் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் இடிந்த கரைக்குச் சென்று ஆதரித்து உரையாற்றினார். தனது உரையில் "இராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும் போது ரஷ்யாவுடனான 1988 ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. 1989 ல் தூத்துக்குடி கூடங்குளம் நாகர்கோவில் நெல்லை சைக்கிள் பிரச்சாரப் பயணத்தில் கலந்து கொண்டதும், கூடங்குளத்தில் தான் தாக்கப்பட்டதையும் பதிவு செய்தார். 2002ல் நாகர்கோவில் பேரணியில் நடநத துப்பாக்கிச் சூடு, மீண்டும் போராட்டம் ஓய்ந்து போகாமல் 2007ல் மறுபடியும், தற்போது ஓயாத அலைகளாக இடிந்தகரையில் நடைபெறும் போராட்டம் டில்லி வரை இடிக்கட்டும்" என வாழ்த்திப் பேசியதுடன், செப் 15 மதுரையில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்ட முடிவின்படி ‘‘கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்’’ என உரையாற்றினார்.
அடுத்துப் பேச வந்தார் தி.மு.க வின் இராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு. அவரைத் திரும்பிப் போக வலியுறுத்தி எதிர்ப்புக் கிளம்பியது. பேச விடாமல் மக்க்ள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கடுமையாக இருந்தது. பலத்த எதிர்ப்புக்கிடையிலேதான் அவர் பேசினார். போராட்டக் குழு சார்பில் அறிவிப்பாளர் அவரை உடனே போகவிடாமல் நிறுத்தி தி.மு.க தலைமைக்கு இரண்டு நிபந்தனைகளை அறிவித்தார். 1. தி.மு.க தலைமை அணு உலை மூட அறிக்கை வெளியிட வேண்டும். 2. மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தி-.மு.க தலைவர் மு.கருணாநிதி அணு உலை சம்பந்தமான நிலைப்பாட்டைக் கூறாமல், " மக்களுக்கு விரோதமாக எப்போதும் தி.மு.க நடந்து கொள்ளாது " எனக் கூறித் தப்பித்துள்ளார். 1988 க்குப் பிறகு இருமுறை ஆட்சியிலிருந்தும், 2007 மீண்டும் கூடங்குளம் ஒப்பந்த எதிர்ப்பை முறியடிக்க நெல்லை ஆட்சியாளர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டங்கள் எனும் பெயரில் சதி செய்தவர் மு.க.
செப் 16 அன்று முதலமைச்சர் ஜெ. வெளியிட்ட அறிக்கை 17 ம் தேதி பத்திரிக்கைகளில் வெளிவந்தது. ‘‘ 1000 மொகவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் இயங்கினால் தமிழகத்திற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். . . நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லாத இரண்டாம் நிலை மண்டலத்தில் இந்த அணு மின் நிலையம் உள்ளது. . . . கூடங்குளம் அணு மின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால் சுனாமி போன்ற
இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அணு மின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்’’ என முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகள் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டார்.
செப் 19 அன்று வழக்கம் போல் தலை கீழாக முடிவெடுத்து ஒரு அறிக்கை வந்தது. தென் மாவட்ட மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளை எளிமைப் படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசியலாக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். " மத்திய அரசு கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க முயற்சி செய்ய வில்லை. அனைத்துக் கட்சிக் குழுவை டில்லிக்கு அனுப்புவோம், மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அணு உலை இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் " என்று கோரினார். ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்? மத்திய அரசு நிறுவனம். மாநில அரசால் முடிவெடுக்க முடியாது, மத்திய அரசு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறுபவர். செப் 16 அன்று ஏன் அப்படி அறிக்கை விட்டார். இவர்களுக்கு எல்லாமே ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல். மாநில அரசு, மத்திய அரசு பிரச்சனைகள். ஆனால் போராடும் மக்களுக்கு, மீனவர்களுக்கு வாழ்வுரிமைப் பிரச்சனை. மொத்தத் தேவையில் 3 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். அணு குண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்கான இடமே அணு உலைக் கூடங்கள். இவர்களின் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின், மீனவர்களின் வாழ்வுரிமைக்காகத் தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் பரவலாகப் படித்தவர்கள், அறிவார்ந்த சனநாயகச் சிந்தனையாளர்கள், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான சிந்தனையாளர்கள் அணு உலைக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைகளை ஏகாதிபத்திய எடுபிடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முன்னெடுப்போம்!

1 கருத்து:

  1. இப்படி மாற்றி மாற்றி பேசவில்லை எனில்.... பணமுதலைகள், இந்துத்துவவாதிகள், திராவிட மற்றும் சாதிய கட்சிகள் மற்றும் எம்.ஜி.ஆரை நினைத்து இன்றும் ஓட்டுப்போடும் மக்கள் மத்தியில் இருக்க முடியுமா செயலலிதாவால்? இப்படி மாற்றிப் பேசும் செயலலிதா போன்ற அரசியல்வாதிகளை மட்டுமல்ல... இந்த முதலாளிகளுக்கு ஆமாம் சாமி போடும் விஞ்ஞானிகளின் சந்தர்ப்பவாதங்களை முறியடிக்க அணி சேர்வோம் தோழர்களே....

    பதிலளிநீக்கு