9-9-2012 அன்று கூடங்குளம் அணு உலை முற்றுகை இடப்பட்டு கடலுக்குப் போட்டியாக கரையில் மக்கள் வெள்ளம .10-9-2012 அன்று காவல்துறை தாக்குதலில் ஈடுபட்டு கடலுக்குள் மக்கள் இறங்கி எதிர்கொண்டனர். காவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குதல் இடிந்தகரை மாதா கோவில், சுனாமி காலனி, கூடங்குளம் தொடர்ந்தது. தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிப்பியக்கங்கள் கட்டமைக்கப்பட்டது. 11-9-2012 அன்று தமிழ்நாடெங்கும் " கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு " சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம் பகுதியில் காவல்துறையின் தாக்குதலைக் கண்ட " அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க " ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் " காவல்துறை தன்னைக் கைது செய்யலாம் , நான் இடிந்தகரை வருகிறேன் " எனக் கூறி இடிந்தகரை வந்தார். கூடியிருந்த மக்கள் வெள்ளம அவர்மீது கண்ணீர் மழை பொழிந்தது. இளைஞர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கடல் வழியாகப் படகில் சென்றனர்.
13-9-2012 அன்று மதுரையில் " கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு " கூடி முடிவெடுத்து 16-9-2012 அன்று தூத்துக்குடியில் " மணப்பாடு துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அந்தோணி ஜான் படுகொலைக்கு எதிராகவும், கூடங்குளம் பகுதியிலிருந்து காவல்படைகளை வெளியேற்றக் கோரியும் " தூத்துக்குடியிலிருந்து.., இடிந்தகரை நோக்கி..... " நடை பயணம் செல்ல முயன்று 200 பேர் பல்வேறு இயக்கத்தினர் கைது செய்யப்பட்டோம். 18-09-2012 அன்று உதயகுமார் தங்கியிருந்த ஊத்தங்குளி கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம். இடிந்தகரைக்குச் சென்றோம். என்னுடன் எமது கட்சியைச் சேர்ந்த நல்லை மாவட்டச் செயலாளர் துளசி, நெல்லை மாரியப்பன், சேவ் தமிழ்ஸ் பரிமளா பங்கெடுத்தனர்.