செவ்வாய், 31 மே, 2011

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு

இயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்க முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். கோவையில் இன்று 29.05.2011 நேரடியாகக் கலந்து கொளள இயலாமைக்கு வருந்துகிறேன்.
 உலகம் முழுவதும் வல்லரசுகளின் இலாபவெறி இயற்கை வளங்களை, காடுகளை, நீர்நிலைகளை அழித்து சின்னாவின்னப்படுத்தி வருகின்றன. நிலமும், நீரும், காற்றும் மாசுபட்டு உயிரினங்கள், இயற்கை ஜீவாதாரங்கள் உயிர் வாழ்வதற்கே கேள்விக்குறியாகி உள்ளது. கழிவுகளின் புகழிடமாக ஆறுகள் மாறி மக்களின், ஏனைய ஜீவராசிகளின் பயன்பாட்டுக்கு உதவாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கழிவுகளின் குப்பைமேடுகளாகவும், இரசாயனங்களின் பாதிப்புக்கும் ஆளாகி விளைநிலங்கள் கெட்டுப் போயுள்ளன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகைக் கழிவுகள் வான் மண்டலத்தை நாசமாக்கி நேற்று ஓசோன் படலத்தில் ஓட்டை எனத் தொடங்கி இன்று சூரிய வெப்பக் காற்று வீசுவது வரை என பூமி சூட்டால் தகிக்கக் கூடியதாக மாறியுள்ளது. புல், பூண்டு, தாவரங்களின், உயிரினங்களின் இருத்தலுக்கே சவால் விடுமளவிற்கு சூழ்நிலை மாற்றம் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. இயற்கையின் சமநிலையில் (Eco system) ஏற்படும் மாற்றம் பருவநிலை மாற்றங்களை, மழையற்ற அல்லது அதிக மழை எனும் மாற்றத்தை, அளவுக்கு மீறிய வெப்பத்தை என தாறுமாறாகி உள்ளது. உயிர்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றம் காடுகளில் வாழ வேண்டிய மிருகங்கள் உணவு தேடி ஊர்களுக்கு வரவேண்டிய நெருக்கடியும், அழியக்கூடாத நுண்ணுயிர்களின் அழிவும் அழிக்கப்பட வேண்டிய நுண்ணுயிர்களின் அளவுக்கு மீறிய வளர்ச்சியும் நோய்களைப் பரப்பும் சூழலை உருவாக்கி மருந்துகளை இரசாயனங்களைச் சார்ந்து நிற்கும் நிலைக்கு உலகத்தைத் தள்ளியுள்ளது. இந்த நெருக்கடியை பொதுவாக மனிதர்களின் ஆசையே காரணம். ஆசையற்ற மனிதனாக வாழ போதனைகளைப் பரப்பி அமைதியான ஆன்மீக மனிதனை உருவாக்குவதே தீர்வு என முன்வைக்கப்படுகிறது.
 இயற்கையின் சமநிலை பாதிப்புக்குள்ளாக்கப்படுவதற்கு எதிராக மக்கள் இயக்கங்களின் தேவை இன்று முக்கியமானதாக உள்ளது. உலகைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக காடுகளும், நீர்நிலைகளும், மண்ணுக்கு கீழுள்ள, மேலுள்ள கனிவளங்களும் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதன் விளைவு இயற்கை நெருக்கடி, வெப்பமயமாக்கம், மழையின்மை உருவாக்கப்பட்டுள்ளன. சூழலைக் காக்க வேண்டுமானால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வேட்டைக்கு எதிரான மக்கள் இயக்கம் அவசியமாகும். ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடிகள் சூழலைப் பாதுகாக்க முயற்சிப்பவர்களாக நாடகம் போடும் சூழல் உருவாகி உள்ளது.
 கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாப வெறிக்கான செயல்களை நாட்டின் வளர்ச்சியின் பெயரால் திட்டங்கள் தீட்டி அதற்காக சொகுசான வாழ்க்கை, வாரிசுகளுக்கு சொத்து, சல்லாபம் என வாழ்வதற்கு மாபெரும் ஊழல்களைச செய்வது என்பதையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும். மேல்மட்டத்தில் இவர்களால் உருவாக்கப்படும் ஊழல் சாம்ராஜ்யங்களின் விளைவு கீழ்மட்டம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது.
 மக்கள் நலனுக்காக இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டி நாம் இயக்கம் தொடங்கினால் கார்ப்பரேட் முதலாளியச் சுரண்டலுக்கு எதிராகவும், இவர்களுக்குச் சேவை செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராகவும் இயல்பாகக் கொண்டு போய் நம்மை நிறுத்தும். தொடருவோம். இணைவோம். இணைப்போம். காப்போம். நன்றி
             --மீ. த.பாண்டியன்.மாநிலச்செயலாளர், இ.க.க.(மா-லெ)  மக்கள் விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக