ஞாயிறு, 26 ஜூன், 2011

சூன் 26, 2011, மதுரையில் நினைவஞ்சலி

  சூன் 26, 2011 சித்திரவதைக்கு  எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு             மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.



இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்
இலங்கை  கடற்படையால் கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க அணிதிரண்டார்கள்.                                                                                  ஏற்பாடு- தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு. மதுரை

புதன், 22 ஜூன், 2011

இ.க.க (மா.லெ) மக்கள் விடுதலை கருப்புக் கொடி

21.06.2011 அன்று தஞ்சையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மத்தியக் குழு முடிவுகளை தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் முன்வைத்தார் . . . .                                                                                                         ஐ.நா.குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இனப் படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே ஐ.நா. மன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசு மீது நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலில் உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் இனப்படுகொலையாளன் இராஜபக்சே கும்பலைத் தண்டிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக ஒத்துக் கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலைக்கு நடவடிக்கை இல்லை. முகாமில் இருந்து மீண்ட ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற்றத் தயார் இல்லை. இச்சூழலில் இந்திய, பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் போடும் நோக்கிலும், இராஜபக்சே அரசைக் காப்பாற்றும் நோக்கிலும் இலங்கை செல்லும் பிரதமரது செயல் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதாக உள்ளது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரானால் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும். உணர்வாளர்கள், இனப் படுகொலை எதிர்ப்பாளர்கள், கருப்புக்கொடியேற்றி நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
 தமிழகக் கல்வியாளர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக சமச்சீர் கல்வி தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அமுலுக்கு வந்தது. சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்டம் முதல்படியாக அமுல்படுத்தப்பட்டது. போதாக் குறைகள் இருந்த போதும் முத்துக்குமரன் குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த தமிழகக் கல்வியாளர்கள் கோரி வந்தனர். தமிழக மக்களின் கோபாவேசத்தால் ஆட்சியிலிருந்து தி.மு.க தூக்கி எறியப்பட்டதன் விளைவாக ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுலாக்க மறுத்து, எந்த ஆய்வும் இல்லாமல் முடிவு செய்தது கண்டிக்கத் தக்கது. தி.மு.க.வுடன் அவருக்குள்ள பகையை கல்வித் திட்டத்தில் காட்டுவது முறையற்றது. மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் பிடியில் உள்ள ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக நிலையெடுப்பது தமிழக மாணவர்களின் சமவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். உயர் நீதிமன்ற ஆணையை அமுலாக்க வேண்டும், உச்ச நீதிமன்ற வேண்டுகோள்படி அமைத்த கல்விக்குழுவில் நியமித்துள்ள தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமுலாக்கப்பட வேண்டும்.                                                           நாகை மாவட்டம் காவிரியின் கடைமடைக் கடலோரப் பகுதிகளில் தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விளை நிலங்களில் ஐக்கிய முன்னணி காங்கிரஸ் அரசு அவசர கதியில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விளை நிலங்களை நம்பி வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வேலை இழைப்பைச் சந்திக்கின்றனர். விளை நிலங்கள் பாழ்பட்டுப் போவதும், விவசாய சமூகம் தனது வாழ்வுரிமையை இழப்பதும் நிகழ்கிறது. கடலோரங்களைத் தேர்வு செய்து இருப்பதன் மூலம் கடல்வளம் பாழ்படுவதும், மீனவர் கிராமங்கள் அழிந்து போவதும்,  போன்ற அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. நாகை மாவட்ட கடலோரங்களில் அனுமதி அளித்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களின் அனுமதியை இரத்து செய்வதுடன், விளை நிலங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவேற்ற ஜெயங்கொண்டத்தில் தொடங்க அறிவித்த மின் நிலையத்தை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனல் மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், படித்த அறிவாளிப் பிரிவினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆதரவு தரவேண்டுகிறோம்.

சனி, 18 ஜூன், 2011

மக்சிம் கார்க்கி 16.03.1868 - 18.06.1936

மக்சிம் கார்க்கி (18 .06 .1936 ) இன்று தோழர் ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி நினைவு நாள்.  இன்றும்
பொருந்தும் அவரது எழுத்து, " துன்பகரமான காலத்தில்
நாம் வசிக்கிறோம். வாழ்க்கை சகிக்கமுடியாத அளவுக்குக் கொடுமையானதாக இருக்கிறது. ஆயினும்
மனிதனுள் உறையும் நல்ல சக்திகள் சுதந்திரமாகப்
படைக்கவும், கட்டுப்பாடின்றி உழைக்கவும் விழிப்புற்று
எழப்போகிற தருணத்திலேயே நாம் இருக்கிறோம். இதுதான் உண்மை. இது நமக்கு ஆறுதல் அளிப்பதோடு, நம்முள் புதிய பலத்தையும், துணிவையும் புகுத்தவேண்டும்."

புதன், 15 ஜூன், 2011

ஜூன்- 14,தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்

ஜூன்- 14,   தோழர் சேகுவேராவின் பிறந்தநாள்.அவரின்
 நினைவுகள் போர்க்குணாம்சத்தை நமக்குள்
உருவாக்குகிறது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை  முன்னெடுத்துச்செல்ல போராளி சேகுவேராவின் வரிகள்,

'' ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ               அங்கெல்லாம் எனது கால்கள்பயணிக்கும்.''                                                                                                                        '' எங்களது ஒவ்வொரு செயல்பாடும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட அறைகூவல்தான்..''.

புதன், 8 ஜூன், 2011

அழகர்சாமியின் குதிரை - இரா. உமா.

சிவப்புத் தோல் கதாநாயகன் இல்லை. சிக்கென்ற உடையில் வரும் கதாநாயகி இல்லை. ஒரே பாட்டில் கதாநாயகன் கோடீசுவரன் ஆகும் அதிசயம் இல்லை. குத்துப்பாட்டு இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் தாவித்தாவிக் குதிக்கும் சண்டைக்காட்சி இல்லை. கனவுப்பாட்டு இல்லை. யாரும் யாரையும் கண்டபடி கட்டிப்பிடிக்கவில்லை. ஆனாலும் தொடங்கியதில் இருந்து நாலுகால் பாய்ச்சலில் செல்கிறது அழகர்சாமியின் குதிரை.
அழகான மலைகள் சூழ்ந்த தேனி மாவட்டத்தின் மலைக்கிராமங்கள்தான் இந்தப் படத்தின் கதைக்களங்கள். கோயிலில் இருந்த அழகர்சாமியின் மரக்குதிரை காணாமல் போய்விட, பக்கத்து கிராமத்தில் இருக்கும் அழகர்சாமியின் குதிரை அந்த ஊருக்குள் வந்துசேருகிறது. தன்னுடைய குதிரையைத் தேடி அக்கிராமத்துக்கு வரும் அழகர்சாமிக்கும், சாமியின் மரக்குதிரைதான் உயிருடன் வந்திருக்கிறது என நம்பும் அந்தக் கிராமத்தாருக்கும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் மையம்.
இதற்குள், அழகான காவியங்களாய் இரண்டு காதல்கள், கடவுளின் பேரால் நடக்கும் போலித்தனங்கள், மக்களின் நம்பிக்கைகள், கிராமத்து மக்களின் வெகுளித்தனங்கள் என கண்களை உறுத்தாத காட்சிகளால் நிறைந்து நிற்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.
திருவிழா நடத்துவதற்கு நிதி கேட்டுவரும் ஊர்ப்பெரியவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. தன் வீட்டிற்கு வரும் ஊர்ப்பெரியவர்களைப் பார்த்து, கையில் ஆங்கிலப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, கட்டபொம்மன் வசனம் பேசும் சிறுவனும், நிதிகேட்டு வந்தவர்கள் போகும் வரை, காதுகேட்காதது போல் நடிக்கும் பாட்டியும் கிராமத்து குசும்பின் பதிவுகள்.
இதுவரை நம்முடைய கிராமத்துக் கோடாங்கிப் பூசாரிகளைத்தான் பித்தலாட்டக்காரர் களாகவும், கேலிக்குரியவர்களாகவும் தமிழ்த்திரைப்படங்கள் காட்டி வந்தன. இந்தப் படத்தில், ‘ மதிப்புமிக்க ’ மலையாள மாந்த்ரீகனை நாலா பக்கமும் கிழித்துக் காட்டியிருக்கின்றனர். காணாமல் போன குதிரையைக் கண்டுபிடிக்க உள்ளூர் பூசாரியால் முடியாது என்று முடிவு செய்து, கேரளாவில் இருந்து பூசாரியை வரவழைக்கின்றனர். அவன் அந்தக் கிராமத்து மக்களின் அறியாமையையும், வெள்ளந்தித்தனத்தையும் பயன்படுத்தி, மலையாள பகவதியின் பெயரைச் சொல்லி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறான் எனக் காட்டும் காட்சிகள் சிரிக்கவும் வைக்கின்றன, சிந்திக்கவும் வைக்கின்றன.
உள்ளூர் பூசாரியிடம் குறி கேட்கும் போது, அவர் அருள்வந்து ஆடுவதைப் பார்த்து ஒரு சிறுமி, “ ஏண்டா நம்ம பூசாரிக்கு பேய் பிடிச்சிருக்கா? ” எனக் கேட்க, அதற்கு அந்தச் சிறுவன், “ இல்ல சாமி வந்திருக்கு ” என்று சொல்வதைக் கேட்டு, மற்றொரு சிறுவன், “ ரெண்டும் ஒன்னுதான் ” எனச் சட்டென அலட்டிக் கொள்ளாமல் மெதுவாகச் சொன்னாலும், பொருள் பொதிந்த அந்த வசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் பாத்திரத்தின் தேர்வு சிறப்பு. குதிரை காணாமல் போனதுபற்றிப் புகார் தர வரும், ஊர்ப்பெரியவர்கள் சொல்லும் கற்பனைக் கதைகளைக் கேட்கக் கேட்க, மாறிக்கொண்டே வரும் முகபாவங்கள், திரையரங்கில் அவருடைய நடிப்புக்குக் கைத்தட்டல்களை வாங்கித் தருகின்றன.
குதிரைக்காரன் அழகர்சாமியாக வரும் அப்புக்குட்டியின் உருவத்தைப்போலவே, அவருடைய பாத்திரமும் கனமானதுதான். அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாகச் சொல்லித்திரியும் அழகர்சாமி, சரண்யா மோகனைப் பெண்பார்த்துவிட்டு, என்னைப் போலத்தானே அந்தப் பெண்ணுக்கும் அழகான ஆணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு நான் தகுதியானவன் இல்லை. அதனால் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடப் போகிறேன் எனத் தன் குதிரையிடம் சொல்லும் இடத்தில், பரட்டைத் தலையும், பருத்த, குட்டையான உருவமும், அதற்குள்ளிருக்கும் அழகான மனதும் சரண்யா மோகனுக்கு மட்டுமன்று, நமக்கும் மிகவும் பிடித்துப்போகிறது.
திருமணத்திற்கு முன் குதிரை காணாமல் போய்விடுகிறது. அந்தக் குதிரைதான், அழகர்சாமியின் வருவாய்க்கான மூலதனம். எனவே, குதிரையுடன் வந்தால்தான் திருமணம் என்று பெண்ணின் அப்பா சொல்லிவிடுகிறார். குதிரையைத் தேடி அலையும் அழகர்சாமி, மரக்குதிரை காணாமல் போன கிராமத்தில் தன் உயிருள்ள குதிரை ஊர் நடுவில் உள்ள மண்டபத்தில் கட்டிப்போடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். ஆனால் ஊர்க்காரர்களோ, காணாமல் போன மரக்குதிரைதான், கடவுள் அருளாள் உயிருடன் வந்திருப்பதாக நம்பிக்கொண்டிருக் கின்றனர். அந்தக் குதிரையை வைத்துத்தான் திருவிழா நடத்தப் போவதாகவும், திருவிழா நடத்தினால்தான் மழை பெய்யும் என்றும் சொல்லி குதிரையைத் தர மறுக்கின்றனர்.
திருவிழா முடியும் வரையில், குதிரையுடன் அழகர்சாமியும் அந்த ஊரிலேயே தங்கிக்கொள்வது என்றும், திருவிழா முடிந்த உடன் அவனுடன் குதிரையை அனுப்பிவிடவேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி சொல்வதை அனைவரும் வேறுவழியின்றி ஏற்றுக்கொள்கின்றனர். இடையில் குதிரையைக் கொண்டு செல்ல முயலும் அழகர்சாமியை ஊரார் அடித்துத் துவைத்து விடுகின்றனர். ஆறுதல் சொல்லும் இளைஞர்களிடம், அழகர்சாமி தனக்காக ஒரு பெண் காத்துக் கொண்டிருப்பதையும். வரும் பெளர்ணமிக்குள் குதிரையோடு போய் அவளைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், அவள் உயிரை விட்டுவிடுவாள் என்றும் சொல்லிக் கதறுகிறான். இதைக்கேட்ட இளைஞர்கள், திருவிழா முடிந்தாலும், ஊர்க்காரர்கள் குதிரையைத் தரமாட்டார்கள், எனவே இரவோடு இரவாக குதிரையோடு ஊரைவிட்டுச் செல்லத் தாங்கள் உதவுவதாகக் கூறுகின்றனர். ஆனால் திருவிழாவிற்கு அந்த ஊர் மக்கள் உற்சாகமாய்த் தயாராவதையும், உறவுகள் எல்லாம் ஒன்றுகூடுவதையும் பார்க்கும் அழகர்சாமிக்கு அவர்களுடைய மகிழ்ச்சியில் மண்அள்ளிப் போட மனம்வரவில்லை. எனவே திருவிழா முடிந்த பிறகே அந்த ஊரைவிட்டுக் குதிரையுடன் போவது என்பதில் உறுதியாக நின்றுவிடுகிறான்.
அசலூர்க்காரனாக இருந்தாலும், இந்த ஊர்இந்த ஊர் மக்களின் மீது அழகர்சாமிக்கு இருக்கும் அன்பைப் பார்த்து, மனம் திருந்தும் ஆசாரி, தான் மறைத்து வைத்திருந்த மரக்குதிரையை யாருக்கும் தெரியாமல் இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுகிறார். இதைப் பார்த்துவிடும் இளைஞர்களிடம், பழைய குதிரை காணாமல் போனால், புதிய குதிரை செய்யச் சொல்வார்கள். அதற்குக் கூலியாகக் கொஞ்சம் பணமும், தங்கமும் கிடைக்கும். அதை வைத்துத் தன் மகளின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற எண்ணத்தில் இந்தத் தவற்றைச் செய்துவிட்டதாகக் கூறுகிறார். இளைஞர்களும் இதை யாரிடமும் சொல்லாமல், அவருடைய மகளின் திருமணத்திற்கும் உதவிசெய்கின்றனர். அதோடு, உயிருள்ள குதிரை மறுபடியும் மரக்குதிரையாக மாறிவிட்டது என்று சொல்லும் ஊர்ப்பெரியவர்களோடு இவர்களும் சேர்ந்துகொண்டு, போலியாக அதன்முன் விழுந்து கும்பிடுகிறார்கள்.
பகுத்தறிவு பேசும் இளைஞர் அணியினரின் பொதுநலன் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் ஊருக்கு நான்கு பேராவது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என எதிர்பார்க்க வைக்கின்றன. அந்த இளைஞர்களில் ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவரின் மகன் பிரபாகரன், கோயில் பூசாரியின் மகளைக் காதல் திருமணம் செய்துகொண்டதைக் கேட்டதும், அவனின் தந்தையான பஞ்சாயத்துத் தலைவர், தாழ்ந்த சாதிப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டானே. அய்யோ சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணா எப்படிடா மழை பெய்யும். இனிமே இந்த ஊருல மழையே பெய்யாது என தரையில் விழுந்து புரண்டு சாபம் விட, மூன்றாண்டுகளாகப் பொய்த்து வந்த மழை இடி, மின்னலுடன் கொட்டோ கொட்டென்று கொட்ட, சாதிச் சகதி கரைந்து காணாமல் போவதுபோன்ற உணர்வினை அந்தக் காட்சியில் ஏற்படுத்திவிடுகிறார் இயக்குனர்.
படம் நெடுக பகுத்தறிவுக் கருத்துக் விதைக்கப்பட்டிருக்கின்றன. சாதி மறுப்பு, கடவுள் மறுப்புச் சிந்தனைகள் பற்றி, கதையோட்டத்தோடு கலந்து வரும் வசனங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டல்களைப் பெறுகின்றன. ஆண்டுதோறும் அழகர் அலங்காரமாய்ப் பட்டுடித்தி, தங்க நகைகளுடன் ஊர்வலம் வந்தாலும், அழகரின் மரக்குதிரையைச் செய்த ஆசாரியின் வறுமை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. மனிதர்களால்தான் அதைத் தீர்க்க முடியும் எனக்காட்டுகிறது படம்.
இளையராஜாவின் இதமான இசையும், தெளிவாகக் கேட்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன. அத்தனை நடிகர்களும் இயல்பான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். நேர்த்தியான காட்சியமைப்புகளின் மூலம், நம்மையும் அந்தக் கிராமத்து மக்களில் ஒருவராகவே உணரச் செய்துவிடுகிறார் இயக்குனர்.
தந்தைபெரியார் ஒருமுறை நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் : நாம நூறு கூட்டங்கள்ல பேசுறத, ராதா ஒரு நாடகத்துல சொல்லிடுறார். அதற்கு இணையாக இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் நெருக்கத்தில் வைத்துப் பாராட்டுவதற்குரிய தகுதி இந்தப் படத்திற்கு இருக்கிறது