21.06.2011 அன்று தஞ்சையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலையின் மத்தியக் குழு முடிவுகளை தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் முன்வைத்தார் . . . . ஐ.நா.குழு அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். இனப் படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே ஐ.நா. மன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் இலங்கை அரசு மீது நெருக்கடிகள் உருவாகி வரும் சூழலில் உலகம் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் இனப்படுகொலையாளன் இராஜபக்சே கும்பலைத் தண்டிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதாக ஒத்துக் கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலைக்கு நடவடிக்கை இல்லை. முகாமில் இருந்து மீண்ட ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை இல்லை. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற்றத் தயார் இல்லை. இச்சூழலில் இந்திய, பன்னாட்டு முதலாளிகளுக்கு ஒப்பந்தங்கள் போடும் நோக்கிலும், இராஜபக்சே அரசைக் காப்பாற்றும் நோக்கிலும் இலங்கை செல்லும் பிரதமரது செயல் தமிழக மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளுவதாக உள்ளது. தமிழக சட்டமன்றத் தீர்மானத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபடும் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்வாரானால் தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும். உணர்வாளர்கள், இனப் படுகொலை எதிர்ப்பாளர்கள், கருப்புக்கொடியேற்றி நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
தமிழகக் கல்வியாளர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக சமச்சீர் கல்வி தமிழகத்தில் கடந்த ஆட்சியில் அமுலுக்கு வந்தது. சமச்சீர் கல்வியின் பொதுப் பாடத்திட்டம் முதல்படியாக அமுல்படுத்தப்பட்டது. போதாக் குறைகள் இருந்த போதும் முத்துக்குமரன் குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த தமிழகக் கல்வியாளர்கள் கோரி வந்தனர். தமிழக மக்களின் கோபாவேசத்தால் ஆட்சியிலிருந்து தி.மு.க தூக்கி எறியப்பட்டதன் விளைவாக ஆட்சியில் அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுலாக்க மறுத்து, எந்த ஆய்வும் இல்லாமல் முடிவு செய்தது கண்டிக்கத் தக்கது. தி.மு.க.வுடன் அவருக்குள்ள பகையை கல்வித் திட்டத்தில் காட்டுவது முறையற்றது. மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் பிடியில் உள்ள ஜெயலலிதா அவர்களுக்கு ஆதரவாக நிலையெடுப்பது தமிழக மாணவர்களின் சமவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். உயர் நீதிமன்ற ஆணையை அமுலாக்க வேண்டும், உச்ச நீதிமன்ற வேண்டுகோள்படி அமைத்த கல்விக்குழுவில் நியமித்துள்ள தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கவேண்டும் என வலியுறுத்துவதுடன், இந்த ஆண்டே சமச்சீர் கல்வி அமுலாக்கப்பட வேண்டும். நாகை மாவட்டம் காவிரியின் கடைமடைக் கடலோரப் பகுதிகளில் தரங்கம்பாடி, திருமுல்லைவாசல், பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விளை நிலங்களில் ஐக்கிய முன்னணி காங்கிரஸ் அரசு அவசர கதியில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. விளை நிலங்களை நம்பி வாழும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வேலை இழைப்பைச் சந்திக்கின்றனர். விளை நிலங்கள் பாழ்பட்டுப் போவதும், விவசாய சமூகம் தனது வாழ்வுரிமையை இழப்பதும் நிகழ்கிறது. கடலோரங்களைத் தேர்வு செய்து இருப்பதன் மூலம் கடல்வளம் பாழ்படுவதும், மீனவர் கிராமங்கள் அழிந்து போவதும், போன்ற அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது. நாகை மாவட்ட கடலோரங்களில் அனுமதி அளித்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களின் அனுமதியை இரத்து செய்வதுடன், விளை நிலங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் மின்சாரத் தேவையை நிறைவேற்ற ஜெயங்கொண்டத்தில் தொடங்க அறிவித்த மின் நிலையத்தை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். வாழ்வுரிமைக்குப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். அனல் மின் நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், படித்த அறிவாளிப் பிரிவினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆதரவு தரவேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக